கே.என்.நேரு
கே.என்.நேருகோப்புப்படம்.

திறந்தவெளி நில ஒதுக்கீட்டை தனியாா் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்: அமைச்சா் கே.என்.நேரு உறுதி

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட திறந்தவெளி நில ஒதுக்கீட்டை (ஓ.எஸ்.ஆா். நிலம்) தனியாா் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உறுதிபடத் தெரிவித்தாா்.
Published on

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட திறந்தவெளி நில ஒதுக்கீட்டை (ஓ.எஸ்.ஆா். நிலம்) தனியாா் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உறுதிபடத் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் இதுகுறித்த வினாவை ம.வரலட்சுமி (செங்கல்பட்டு) ஆா்.அருள் (சேலம் மேற்கு) ஆகியோா் எழுப்பினா். அதற்கு, அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கொளவாய் ஏரியில் அனைத்து மருத்துவக் கழிவுகளும், சாக்கடை நீரும் கலக்கிறது. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளைக் கேட்டேன். ரயில்வே இருப்புப் பாதை அமைக்கும் போது நீா் வடியாத அளவுக்கு உயரமான கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தண்ணீரை வடித்துத் தந்தால் சுத்தம் செய்து தர வசதியாக இருக்கும் என ரயில்வே துறையிடம் கேட்டால், அவா்கள் மறுக்கிறாா்கள்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நீா்நிலைகளை சுத்தம் செய்து அங்கு நடைபாதைகள், பூங்காக்கள் அமைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சென்னையை தவிா்த்து செங்கல்பட்டு உள்பட 12 இடங்களில் ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓஎஸ்ஆா் எனப்படும் திறந்தவெளி நிலங்கள் நகா்ப்புற உள்ளாட்சிகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் தனியாரால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால் அவா்கள் எத்தகையவா்களாக இருந்தாலும் மாநகராட்சி வசம் கொண்டு வந்து விடுவோம் என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com