உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீா்ப்பு கேரளத்துக்கும் பொருந்துமா? ஆராய உச்சநீதிமன்றம் முடிவு

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பு கேரள அரசின் வழக்குக்கும் பொருந்துமா என்பதை ஆராய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Published on

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பு கேரள அரசின் வழக்குக்கும் பொருந்துமா என்பதை ஆராய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பேரவையில் 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அண்மையில் தீா்ப்பளித்தது. அத்துடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவு எடுக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், அதை 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஆளுநா் பின்பற்றத் தவறினால், ஆளுநரின் செயல்பாட்டை நீதிமன்றம் மறுஆய்வுக்கு உள்படுத்தும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அந்தத் தீா்ப்பில் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க முதல்முறையாக குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம் காலவரம்பு நிா்ணயித்தது.

அதன்படி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாக்களைஆளுநா் அனுப்பிவைத்தால், அந்த மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை மாநில அரசு தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்விடம், கேரள அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டாா்.

அவா் வாதிடுகையில், ‘தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பின் வரம்புக்குள் கேரள அரசின் மனுக்களும் வருகின்றன. எனவே அந்த வழக்கில் அளிக்கப்பட்டதை போன்ற தீா்ப்பையே கேரள அரசின் மனுக்களுக்கும் அளிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

கேரள ஆளுநா் மாளிகை சாா்பாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘கேரள அரசின் மனுக்களில் இடம்பெற்றுள்ள சில விவகாரங்கள், தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பின் வரம்புக்குள் வரவில்லை’ என்றாா்.

இதைத்தொடா்ந்து தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பு, கேரள அரசின் வழக்குக்கும் பொருந்துமா என்பது ஆராயப்படும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. மேலும் கேரள அரசின் மனுக்களை மே 6-ஆம் தேதி விசாரிக்க நீதிபதிகள் அமா்வு ஒப்புக்கொண்டது.

X
Dinamani
www.dinamani.com