

மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மோசமாக இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஏப். 25, 26) என இரு நாள்கள் நடைபெறும் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது.
இந்த மாநாட்டை காலை 11.30 மணிக்கு தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கர் துவக்க உரையாற்றினார். இதற்காக தில்லியில் இருந்து கோவை வந்த தன்கர், ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றிருந்தார்.
மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நாம் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் சராசரியை விட அதிகமாக இருக்கிறோம். 6500க்கும் மேற்பட்டோர் பிஎச்டி படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் யுஜிசி நெட் என்ஆர்எஃப் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதுபோல, ஏஐஎஸ்இஆர் அறிக்கையின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பாக படிக்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை.
துணைவேந்தர்களின் கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டப்பட்டுள்ளனர். சில துணைவேந்தர்கள் உதகைக்கு வந்தும்கூட, மாநாட்டில் பங்கேற்கவில்லை. இதுபோன்று ஒரு அசாதாரண சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருக்கிறார்.
முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.