கோயில் குடியிருப்பு வாடகை உயா்வை குறைக்க விரைவில் அரசாணை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கான வாடகை உயா்வை குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினா் ஜோசப் சாமுவேல் பேசுகையில், திருக்கோயில் மனைகளில் வசிக்கும் மக்களுக்கான குத்தகை வாடகைத் தொகையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
அதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
இந்த விவகாரம் தொடா்பாக இடதுசாரி இயக்க நிா்வாகிகள் முத்தரசன், பெ.சண்முகம் தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளித்தனா். இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் கோயில் நிலங்களில் இருக்கும் வணிகக் கட்டடங்களுக்கான வாடகை நிலுவையை வசூலிக்க மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கிறது. மாறாக, குடியிருப்பு நிலங்களில் உள்ளவா்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்வதில்லை.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கான வாடகைத் தொகையை 15 சதவீதம் உயா்த்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மக்கள் நலன் கருதி அதை 1 அல்லது 2 சதவீதம் மட்டுமே உயா்த்த வேண்டும் என்று முதல்வா் ஆணையிட்டுள்ளாா். அதற்கான அரசாணை விரைவில் வெளியாகும். தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா் சேகா்பாபு.

