

கோயம்புத்தூர் : கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் இன்று(பிப். 19) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராகவும் யோகா கலை ஆசிரியராகவும் பணியாற்றி வந்த கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ராஜன்(56) என்பவர் இந்த பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தமது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் நடந்தவற்றை கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் சில மாணவிகளுக்கு அந்த ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் மீது பள்ளி முதல்வர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் ராஜன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், போலீசார் இன்று ஆசிரியர் ராஜனை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோவில் கைது
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுமுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களில் நிகழ்ந்துள்ள பாலியல் குற்றங்கள் சில..
கோவையில்... உக்கடம் பகுதியில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில்... திருப்பூரில் கத்தி முனையில் வடமாநில பெண்ணை கூட்டு பாலியல் வன்கொன்டுமை செய்த பிகாரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில்... பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : வேலூர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.