தென்னிந்தியாவின் முக்கிய வணிக கேந்திரம் லீ பஜார் மார்க்கெட்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் விளை நிலங்களில் விளைந்த மஞ்சள், அரிசி உள்ளிட்ட வேளாண் பொருள்களை செவ்வாய்ப்பேட்டை வர்த்தக சங்கத்தின்
தென்னிந்தியாவின் முக்கிய வணிக கேந்திரம் லீ பஜார் மார்க்கெட்
Updated on
1 min read

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் விளை நிலங்களில் விளைந்த மஞ்சள், அரிசி உள்ளிட்ட வேளாண் பொருள்களை செவ்வாய்ப்பேட்டை வர்த்தக சங்கத்தின் மூலம் சித்திரைசாவடி எனும், சாலை ஓரங்களில் விவசாயிகள் ஏலம் நடத்தி வந்தனர்.
 அப்போது எலி தொல்லை இருந்ததால் பிளேக் நோய் ஏற்பட்டு, பலர் உயிரிழந்தனர் எனக் கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் அப்போதைய சேலம் ஆட்சியராக இருந்த இ.டபிள்யூ.லீ மற்றும் ஜமுனாதாஸ் சேட்டு ஆகியோரின் முயற்சியில் 1919 இல் லீ பஜார் வர்த்தக சங்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
 அதன் பிறகு லீ பஜார் வர்த்தக சங்கம் 1935 இல் பதிவு பெற்றது. தற்போது நூற்றாண்டை எட்டி லீ பஜார் வர்த்தக சங்கம், வணிகர்களின் அடையாளமாக ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக ஸ்தாபனமாக விளங்குகிறது.
 இதுதொடர்பாக, லீ பஜார் வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.திருமுருகன், செயலாளர் எம்.சந்திரசேகரன் ஆகியோர் கூறியது:
 தென்னிந்தியாவின் முக்கியமான வணிக கேந்திரமாக சேலம் லீ பஜார் வர்த்தக சங்கம் உருவாகியுள்ளது. 1919-இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2019 இல் நூற்றாண்டை எட்டியுள்ளது. சுமார் 20.75 ஏக்கர் நிலத்தில் சுமார் 247 மொத்த கொள்முதல் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் சுமார் 400 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 1,000 கூலித் தொழிலாளர்கள் உள்ளனர்.
 சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விளையும் அரிசி, மஞ்சள், மிளகாய், வெல்லம், பருப்பு வகைகள், புளி மற்றும் சிறுதானியங்கள் அனைத்தும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
 தமிழகம் தவிர்த்து ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து நிலக்கடலை, புளி, அரிசி ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர, பிகார், ஒடிசாவில் இருந்து விவசாய தானிய பயிர்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
 சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் விவசாயப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
 லீ பஜார் வர்த்தக சங்கத்தில் தார்ச் சாலை வசதி, மின்சார வசதி, கூலித் தொழிலாளர்களுக்கு உணவு வசதி, தங்கும் வசதி, சிறிய மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
 குறைவான விலையில் கூலித் தொழிலாளர்களுக்கு உணவு வசதி செய்து தரப்பட்டுள்ளது. சனி மற்றும் செவ்வாய்க்கிழமை லீ பஜாரில் ஏல விற்பனை நடைபெறும்.
 லீ பஜாரில் ஒட்டுமொத்த கொள்முதல் கடைகள் தவிர 11 சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்து விவசாயப் பொருள்களை எடுத்து வரும் விவசாயிகள் தங்கும் அறை கட்டுவது உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன.
 மேலும் லீ பஜார் சங்கம் சார்பில் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறோம். இந்தச் சங்கத்தின் ஆண்டு வர்த்தகம் சுமார் ரூ. 300 கோடியாக உள்ளது என்றனர்.
 ஆர். ஆதித்தன்.
 படங்கள்: வே. சக்தி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com