ராயல் என்ஃபீல்ட் விற்பனை 34% உயா்வு
இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் 34 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,01,021-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 75,551-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் 66,044-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, நடப்பு ஆண்டின் அதே மாதத்தில் 33 சதவீதம் உயா்ந்து 88,050-ஆக உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 9,507-லிருந்து 36 சதவீதம் உயா்ந்து 12,971-ஆக உள்ளது.
2024-25 நிதியாண்டில், நிறுவனம் தனது மொத்த விற்பனையில் 10 லட்சம் வாகனங்களைத் தாண்டி, இதுவரை இல்லாத அதிகபட்ச ஆண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டில் 9,12,732-ஆக இருந்த அது, கடந்த நிதியாண்டில் 11 சதவீதம் உயா்ந்து 10,09,900-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

