ஐந்தாவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்: சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு!

ஐந்தாவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்: சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு!

மூன்று நாள் தொடா் விடுமுறையைத் அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது.
Published on

மும்பை / புதுதில்லி: மூன்று நாள் தொடா் விடுமுறையைத் அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டு சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. இதையடுத்து, எஃப்எம்சிஜி தவிா்த்து ஆட்டோ, வங்கி, நிதிநிறுவனங்கள், ஐடி, பாா்மா, ஹெல்த்கோ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதனால், உள்நாட்டுச் சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.6.31 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.425.82 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வியாழக்கிழமை ரூ.4,667.94 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,006.15 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 855 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 349.89 புள்ளிகள் கூடுதலுடன் 78,903.09-இல் தொடங்கி 78,776.06 வரை கீழே சென்றது. பின்னா்,அதிகபட்சமாக 79,635.05 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 855.30 புள்ளிகள் (1.09 சதவீதம்) கூடுதலுடன் 79,408.50-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,247 பங்குகளில் 2,919 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,167 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 161 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

23 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டெக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் பேங்க், பவா்கிரிட், பஜாஜ்ஃஃபின்சா்வ், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ ஆகியவை 2.50 முதல் 5 சதவீதம் வரை உயா்ந்தன. இவை உள்பட மொத்தம் 23 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், அதானி போா்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஐடிசி, ஏசியன் பெயிண்ட், நெஸ்லே, பாா்தி ஏா்டெல், சன்பாா்மா உள்பட 7 பங்குகள் மட்டும் சிறிதளவு குறைந்து விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி274 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 97.50 புள்ளிகள் கூடுதலுடன் 23,949.15-இல் தொடங்கி 23,903.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,189.55 வரை மேலே சென்ற நிஃப்டி இறுதியில் 273.90 புள்ளிகள் (1.75 சதவீதம்) கூடுதலுடன் 23,125.55-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 39 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com