'காளை’ திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 1,006 புள்ளிகள் உயா்வு!

'காளை’ திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 1,006 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது.
Published on

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

பெஹல்காம் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவியதால் கடந்த இரண்டு நாள்கள் உள்நாட்டுச் சந்தை சரிவைச் சந்தித்திருந்தது. இந்நிலையில், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் திங்கள்கிழமை சாதகமாக இருந்தன. மேலும், முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது தவிர அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனா். இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி நோ்மறையாக முடிந்தன. குறிப்பாக ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.70 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.426.14 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,952.33 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,539.85 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 1,006 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 131.10 புள்ளிகள் கூடுதலடன் 79,343.63-இல் தொடங்கி அதிகபட்சமாக 79,341.35 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,321.88 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,005.84 புள்ளிகள் (1.27 சதவீதம்) கூடுதலுடன் 80,218.37-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,166 பங்குகளில் 1,957 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,019 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 190 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ரிலையன்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5.27 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், சன்பாா்மா, டாடாஸ்டீல், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம் உள்பட மொத்தம் 23 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்சிஎல்டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எடா்னல், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ் ஆகிய 7 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 289 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30.90 புள்ளிகள் கூடுதலுடன்24,070.25-இல் தொடங்கி 24,054.05 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,355.10 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 289.15 புள்ளிகள் (1.20 சதவீதம்) கூடுதலுடன் 24,328.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 39 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com