

குன்றின் மேல் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் முருகன் திருக்கோவில்களில், முருகன் குமரனாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பைப் பெற்றது கடையநல்லூர் அருகேயுள்ள திருமலைக்கோவில். இங்கு வந்து வழிபட்டால் குன்ம நோய்கள் குணமாகும் என்கின்றனர் பக்தர்கள்.
கடையநல்லூரிலிருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் பசுமை சூழ்ந்த பரப்பில், தென்னை மரங்கள் செழித்து வளர்ந்து காண்போரைப் பரவசப்படுத்தும் இயற்கை எழில் சூழ்ந்த கிராமமான பண்பொழியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 540 அடி உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
திருமலையில் வேல் வழிபாடு செய்து வந்த பூவன்பட்டரின் கனவில் தோன்றிய முருகன், கோட்டைத்திரடு பகுதியில் தான் மறைந்து கிடப்பதாகவும், அந்த வழியை எறும்புகள் காட்டும் எனவும் கூறிவிட்டு மறைந்து விட்டாராம். இதே கனவு பந்தள நாட்டு மன்னருக்கும் வந்ததாம். இருவரும் கோட்டைத்திரடுக்குள் சென்று மண்வெட்டி கொண்டு தோண்டும் பொழுது முருகனின் மூக்கில் சிறிது சேதம் ஏற்பட்டதாம் (இதனை தற்போதும் காணலாம்).
இதனையடுத்து முருகனை மலையின் உயரத்திற்கு எடுத்துச் சென்று அங்கு சேர நாட்டு பாங்கில் கோவிலை வடிவமைத்தார்களாம். இதை அமைப்பதற்கு பெண் அடியார் திருவருட்செல்வர் சிவகாமி அம்மையாரும் உதவியதாக கூறுகிறது ஸ்தல வரலாறு.
ஓம் என்ற பிரணவத்திற்கு விளக்கம் கூறிய முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள இம்மலையின் வடிவமும் ஓம் வடிவமாக இருப்பதாக புராணம் கூறுகிறது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள குமரனை அருணகிரிநாதர், அச்சன்புதூர் சுப்பையா உள்ளிட்டோர் வழிபட்டு பல பாடல்களை புனைந்துள்ளனர்.
இங்கு எழுந்தருளியுள்ள குமரனை அகத்திய முனிவர் வழிபட்டதாகவும், அபிஷேகத்திற்காக அகத்தியர் ஞாயிறு, திங்கள், அக்கினி ஆகிய சுனைகளை அமைத்ததாகவும் அதில் பூக்கும் குவளை மலர்களை கொண்டு அகத்தியர் வழிபட்டதாகவும் புராணம் கூறுகிறது. மேலும் சுனை வற்றினால் மழை பெய்து சுனை நிரம்பும் அதிசயமும் நிகழ்ந்ததாக புராணம் கூறுகிறது.
இன்னொரு வியப்பான செய்தி முருகன் கோவிலான இங்கு ஏழு கன்னிமாருக்கு சந்நிதி இருப்பது. இங்குள்ள அஷ்டபத்ம குளத்தில் நீராடி முருகனை வழிபட்டால் நோய் தீரும். மேலும் இக்கோவிலில் நோன்பு இருந்து வழிபட்டால் குன்மநோய்கள் தீரும் என்கின்றனர் பக்தர்கள்.
தேவி பிரசன்னா குமாரதந்திர முறையில் 8 கால பூஜைகள் நடைபெறும் இக்கோவிலில் குமரன் பாலகனாக , வள்ளி,தெய்வானை இன்றி காட்சி தருவதால் பள்ளியறை வைபவம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் தற்போது மலையில் அமைக்கப்பட்டுள்ள படிகளின் வழியாக ஏறிச் சென்று திருக்குமரனை தரிசித்து வருகின்றனர். இக்கோவிலில் சுமார் 4.50 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கியுள்ளன. மேலும் உபயதாரர்கள் மூலம் தங்கத்தேர் செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இக்கோவிலின் அறங்காவலர் குழுத்தலைவர் அருணாசலம் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து 650 கி.மீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 90 கி.மீட்டர் தொலைவிலும் திருமலைக்கோவில் அமைந்துள்ளது. தென்காசி, செங்கோட்டை ,குற்றாலம் மற்றும் கடையநல்லூரிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
திருமலைக்கோவிலுக்கு நல்ல சாலை வசதி இருப்பதால் அனைத்து வாகனத்திலும் சென்று வர முடியும்.ஆனால் இந்த ஊரில் உணவு விடுதி இல்லை என்பதால் உணவு வகைகளை கொண்டு வருவது நல்லது.கோவில் வளாகத்திற்குள் பகலில் தங்குவதற்கு விடுதி வசதி உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.