

""சாதாரணமான பேனா பேப்பரில் எழுதும். ஆனால் இந்த வைரப் பேனா கண்ணாடியில் இருந்து எந்த கல்லின்மீது வைத்து அழுத்திக் கோடு போட்டாலும் அந்தக் கோடு அப்படியே அந்த கல்லின் மீது தெரியும். இதுதான் வைரப் பேனாவின் சிறப்பு'' என்று கூறுகிறார் வைர வியாபாரி கெüதம் சந்த் போத்ரா.
""நான் ராஜஸ்தானில் பிறந்தாலும் தமிழ் நாட்டில் வளர்ந்ததால் எனக்கு நன்றாகத் தமிழ் எழுத, படிக்கத் தெரியும். நான் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன்தான். என் தாத்தா எளிமையானவர், அத்துடன் வீணாகச் செலவு செய்ய மாட்டார். இரவு ஒன்பது மணிக்கெல்லாம் விளக்கை அணைத்துவிட வேண்டும். அதனால் நாங்கள் எல்லாம் தெருவிளக்கில் தான் படித்து பாஸ் செய்தோம். எனக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். இன்று இந்தத் தொழிலில் என்னுடன் இணைந்துள்ளவர் என் சகோதரர் மகாவீர் சந்த் போத்ரா.
என் அம்மாவும், தாத்தாவும் தான் என் வழிகாட்டிகள். அவர்கள் இருவரும் கூறியது ஒன்றே ஒன்றுதான். "எந்த தொழில் வேண்டுமானாலும் செய். அதில் முழு ஈடுபாட்டுடன் செய். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செய்தால் கண்டிப்பாய் வெற்றி நிச்சயம்'. இதுதான் என் தாரக மந்திரம். சென்னையில் இருக்கும் நாளெல்லாம், என் கடையில் அல்லது இப்பொழுது என் மகளுக்கு அமைத்துக் கொடுத்த கடையில் தான் இருப்பேன். 24 மணி நேரமும் வாடிக்கையாளர் என்னை அழைக்கலாம்.
வைரம் என்பது விலை உயர்ந்தது. அவர்கள் சந்தேகங்கள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
என் மொபைல் இரவு முழுக்க என் அருகிலேயே இருக்கும்.
ஒரு முறை தன் மகளுக்கு வைர நெக்லஸ் வாங்க வந்தார் ஓர் அம்மையார். என்னிடம் உள்ள நெக்லஸ் எல்லாவற்றையும் காண்பித்தேன். அவர் விரும்பியதை எடுத்துக் கொண்டார். தன்னிடம் உள்ள வைரக் காதணிகளைக் காட்டி இது உண்மையான வைரம் தானா? என்றார். அங்கேதான் என் வைரப் பேனா எனக்கு உதவியது. வைரப் பேனாவை எடுத்தேன், அவர்கள் கூறிய வைரத்தின் மீது வைத்து ஒரு கோடு போட்டேன். பின் பூதக் கண்ணாடியில் வைத்துப் பார்தேன். கோடே தெரியவில்லை. வைரம்தான் என்று தைரியமாகச் சொன்னேன். இந்தப் பேனாவை நான் கண்டுபிடித்தேன் என்று சொல்வதைவிட, பல வருடங்களுக்கு முன் யாரோ என்னிடம் சொன்னதுதான். அதை நான் சோதனை செய்து பார்த்தேன் என்று வேண்டுமானால் கூறலாம்.
வைரம் பரிசோதிக்கும் பேனாவில் 0.02 சென்ட் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இதன் கூர்முனையால் 90 கோணத்தில் ஒரு கல்லின் மேல் வைத்து சிறிது அழுத்தி தேய்த்தால் வைரம் இல்லாத பொருளாக இருந்தால் கோடு விழுந்துவிடும். வைரமாக இருந்தால் நீங்கள் தேய்க்கும் பொழுது வழுக்கிக் கொண்டு ஓடி கல்லின் மீது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனைத் தேய்க்கும் போதே நீங்கள் உணர முடியும். ஒரு பூதக் கண்ணாடி மூலம் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். இந்தப் பேனாவின் சிறப்பு என்னவென்றால், வாழ்நாள் முழுக்க இதைப் பயன் படுத்தலாம். இந்தப் பேனாவைச் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், வெறும் ரூபாய் 700 மட்டும் தான்.
வைரத்தை வைரம் தான் வெட்டும் என்று கூறுவார்கள். உண்மை என்னவென்றால், வைரப் பொடி தான் வைரத்தை வெட்டும். அதாவது 3000 மற்றும் 4000 RPM வேகத்தில் சுழலும் ஓர் இயந்திரத்தில் வைரத்தை வைத்து, அதன் மீது வைரப் பொடிகளைத் தூவி, பின் அந்த எந்திரத்தை ஓட வைத்தால் நாம் விரும்பும் வண்ணம் வைரத்தை அது வெட்டிக் கொடுக்கும்.
நமக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்ன தெரியுமா?
வைரத்தின் பூர்வீகமே இந்தியாதான். ஆரம்பத்தில் வைர நகை வாங்க விரும்பும் மக்கள் இரண்டு இடங்களில் இருந்தார்கள். ஒன்று தஞ்சாவூர் இன்னொன்று காரைக்குடி. வைர நகை செய்யும் ஆசாரிகள் இங்குதான் இருந்தார்கள். இவர்களை நாங்கள் சென்னைக்கு அழைத்து வந்து நகை செய்ய ஆரம்பித்தோம்.
முதன்முதலில் வைரப் பேனா. பின் தங்கத்தை விட உயர்ந்த விலையில் உள்ள பிளாட்டினத்தில் வைரத்தை வைத்து 7 கல் தோடு மற்றும் மூக்குத்தி செய்தோம். மக்களிடம் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்று நாங்களே வைரத்தை எடுத்து, அதை வெட்டி, நகையாக செய்து, கடைகளுக்கும் விற்கிறோம். எங்கள் (White Fire) வைட் ஃபையர் வைரங்கள் பிரபலமானவை'' என்றார்.
வைரத்தில் அரிதான வைரம் என்று எதாவது இருக்கிறதா? என்ற கேள்விக்கு போத்ரா தரும் பதில் என்ன தெரியுமா?
""என்றுமே உயர்ந்த வைரம் வெள்ளைதான். ஆனால் அரிதான வைரம் எது? என்று கேட்டால், அது சிவப்பு மற்றும் பிங்க் நிறம் தான்'' என்றார் கெüதம் சந்த் போத்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.