ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நரம்புகளின் பழுது நீக்கும் மருந்துகள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விபத்தில் வலது விலா எலும்பு பக்கம் நரம்பு லேசாக அறுந்துவிட்டது, ஆறு மாதமாகியும் என்னுடைய வலது பக்கம் கை எலும்பு எல்லாம் வலிக்கிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நரம்புகளின் பழுது நீக்கும் மருந்துகள்!
Updated on
2 min read


இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விபத்தில் வலது விலா எலும்பு பக்கம் நரம்பு லேசாக அறுந்துவிட்டது, ஆறு மாதமாகியும் என்னுடைய வலது பக்கம் கை எலும்பு எல்லாம் வலிக்கிறது. வலது கையைத் தூக்க முடியவில்லை. அறுந்த நரம்பு சேரவும், வலி குணமாகவும் என்ன செய்வது?

டி.ஜோதி, சென்னை.

நரம்புகளினுள்ளேயும் வெளியேயும் நின்று அறுந்த நரம்பை ரிப்பேர் செய்யும் திறன்மிக்க மருந்துகள் ஆயுர்வேதத்தில் பல இருந்தாலும், அப்பகுதி வரை அம்மருந்துகளின் வீர்யத்தை விரைவாக எடுத்துச் செல்ல வேண்டிய பணியினை, வழிநெடுக தங்கு தடையின்றி உட்புறக் குழாய்களின் சுத்தத்தை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். பொதுவாகவே, மனிதர்களுக்கு உட்புறக் குழாய்களின் சுத்தத்தை எளிதில் பெற முடியாத நிலையை உணவே உருவாக்குகிறது. தன் நிலை அறிந்து, உடலுக்கு நன்மை தரும் உணவை அளவுடன் கவனத்துடன் சாப்பிடும் மனிதர்களின் சராசரி விகிதம் இன்று மிகவும் குறைந்துள்ளது. அம்மாவும் அன்பான மனைவியும் உள்ளவர்களுக்கு -நல்லசத்தான சுத்தமான உணவானது வீட்டிலிருந்தே கிடைத்தால், உண்மையிலேயே அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தாம்!

வயிற்றிலிருந்து செரிமானமாகும் கந்தர்வஹஸ்தாதி எனும் கஷாய மருந்து, நான்கு வகையான திறமைகளைக் கொண்டது. நாக்கில் ருசி கோளங்களைத் துப்புரவாக்கி, சுவை அறியும் சக்தியைக் கூட்டுவதும், வயிற்றில் மந்தமான அமிலச் சுரப்பைச் சீராக்குவதும், தேங்கி பெருமலமாக நிற்கக் கூடிய மலத்தையும் குடல் வாயுவையும் கீழிறக்கி, ஆஸன வாய் வழியாக வெளியேற்ற
வும் கூடிய அதனை, நீங்கள் சுமார் மூன்று வாரங்களாவது சாப்பிட வேண்டி வரலாம். வாய் முதல் கீழ் மலப்பை வரை சுத்தப்படுத்தும் இம்மருந்தால் உட்புறக் குழாய்களின் சுத்தத்தை நீங்கள் விரைவாகப் பெற முடியும்.

அதன் பிறகு, அறுந்து போன நரம்பை ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கவும், அதனை வலுப்படுத்தும் திறனையும் கொண்ட கந்த தைலம் எனும் சொட்டு மருந்தை, சுமார் 10 முதல் 15 துளிகள் வரை முஸ்தாதிமர்ம கஷாயத்துடன் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் அடுத்த 21 நாள்களுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். கைககளின் உட்புறத்திலுள்ள நரம்புகளின் வலியையும் இதன் மூலம் குறைக்கலாம்.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் உட்புறச் சிகிச்சையாகச் செய்ய வேண்டிய அவசியமிருந்தாலும், அது மட்டுமே பிரச்னையைத் தீர்த்துவிடும் என்று உறுதியாகக் கூற முடியாது. அதற்கு வெளிப்புறச் சிகிச்சையையும் சேர்த்துச் செய்தால், பலனானது விரைவாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது.

மூக்கினுள் விடப்படும் சில சொட்டு மருந்துகள், தலையில் ஊற வைக்கக் கூடிய மூலிகைத் தைலங்கள், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள களிம்புகள் போன்றவற்றை விலா எலும்பு மற்றும் கை நரம்புகளில் வலி உணரப்படும் பகுதிகளில் பயன்படுத்தும் வெளிப்புறச் சிகிச்சைகளை உட்புறச் சிகிச்சைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், விரைவாக தங்களுடைய நரம்புப் பிரச்னைக்கான தீர்வும் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. உடலின் தன்மைக்கேற்ப இம்மருந்துகள் பலவிதங்களில் இருப்பதால், நீங்கள் தங்கி சிகிச்சை பெறும் ஆயுர்வேத மருத்துவமனையிலுள்ள மருத்துவரால் மட்டுமே கூற முடியுமென்பதால், அவற்றின் பெயர்களை ஊகித்துக் கூற இயலாது.

நரம்புகளை பலவீனமடையச் செய்யும் கசப்பு, துவர்ப்பு, உவர்ப்புச் சுவைகளையும், அதிகம் குளிர்ந்த நீரைப் பருகுவதையும், வாயுவை சீற்றமடையச் செய்யும் சூடு ஆறிய நிலையிலுள்ள உணவாகத் தயாரிக்கப்பட்ட கிழங்குகளையும் இரவில் குளிரூட்டப்பட்ட அறையில் படுத்துறங்குவதையும் நீங்கள் தவிர்ப்பது நலம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com