

1979-ஆம் ஆண்டு சோவியத் நாடு நேரு விருதுக் குழு, ஜெயகாந்தன் நூலுக்கு விருது வழங்கியது. இந்த விருதில் பணமும் சோவியத் யூனியனுக்கு 15 நாள் சுற்றுப் பயண உபசாரமும் உண்டு! இதனை ஏற்று சோவியத் நாட்டிற்கு பயணித்தார் ஜெயகாந்தன்.
அப்போது உக்ரைன், சோவியத்நாட்டின் ஒரு பகுதி! அதனால் அங்கும் சென்றார். அவர் கூறுவதை பார்ப்போம்:
""கீவ் எனும் உக்ரேனியத் தலைநகருக்குப் புறப்பட்டோம். லெனின்கிராடிலிருந்து கீவ் வர மூன்று மணி நேரம் விமானப் பயணம். விமான நிலையத்திற்கு கீவில் இருக்கும், பத்திரிகை நண்பர்கள் அலுவலகத்திலிருந்து எங்களை அழைத்துப் போக வந்திருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து நகருக்கு வரும் வழியில், நீப்பர் நதியின் அழகும் செழிப்பும், வனப்பும் நம் மனதைக் கொள்ளை கொள்கிற அதே நேரத்தில் இந்த நகரம் நாஜிகளின் படையெடுப்புக்கும் ஆக்ரமிப்புக்கும் ஆட்பட்டிருந்த அழிவும் கொடுமையும் நினைவில் வந்து நெஞ்சு பதைத்தது.
உக்ரைன் மொழியும் இலக்கியமும் மிகவும் வளமானவை. ருஷ்ய இலக்கியத்தின் பிதாமகர் என்று கொண்டாடப்படும் கோகோல் உக்ரேனியர். நோபல் பரிசு பெற்ற மிகைல் ஷோலக்கோவ் உக்ரேனியர். நிகிதா குருஷ்சாவ், ஏன் லியோனித் பிரஷ்னேவ் கூட ஒரு உக்ரேனியரே!
உக்ரைன் மக்கள், கோஸக்குகள் எனும் விவசாயப் பெருமக்களே. இவர்களை கோகோலும் புஷ்கினும் எழுதிய நாவல்களில், நான் நிறையவே பரிச்சயம் பெற்றிருக்கிறேன். எனினும் அவ்விலக்கியக்கியங்களில் வர்ணிக்கப்பட்ட அந்த வீரவாழ்க்கை அதேபோல் இன்றும் இருக்க ஒண்ணாதல்லவா என்ற குறையை நண்பர்களிடம் தெரிவித்தேன்.
இதை அறிந்து கொள்வதற்காகவே கீவ் நகரத்திலிருந்து 25 மைல் தள்ளியிருந்த - புரட்சிக்கு முந்தைய கிராமம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர்.
ஒரு கிராமத்தையே காலி செய்து காட்சி சாலையாக்கி வைத்திருக்கிறார்கள். இவை தமிழகத்தில் தற்காலத்தில் உள்ள குடிசைகளையே எனக்கு நினைவுப்படுத்தியது. அந்த வீடுகள் அனைத்தும் மரத்தாலும் கூரைகள் தானியத்தட்டைகளாலும் உருவாக்கப்பட்டவை.
வீட்டிற்குள் பனியும் குளிரும் தாக்காமலிருப்பதற்காகத் தரையில் கோதுமை வைக்கோலைப் பரப்பி வைத்திருப்பது அவர்கள் வழக்கமாம்.
நாங்கள் கீவுக்குப் போய்த் தங்கிய ஓட்டலுக்கு நீப்பர் நதியின் பெயரே சூட்டப்பட்டிருந்தது.
கீவ் நகரத்தில், "ஸ்வெஸ்த்ஸி' என்ற பத்திரிகை ஆசிரியர் குழுவை அவர்கள் அலுவலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நான் அங்கே சென்றவுடன் என்னை வியப்பிலாழ்த்தும் வண்ணம் ""வாருங்கள். நீங்கள் எங்கள் பத்திரிகையின் எழுத்தாளராயிற்றே'' என்று சொந்தமாய் வரவேற்று உக்ரைன் மொழிப் பத்திரிகையான ஸ்வெஸ்த்ஸியில் பிரசுரமாகியுள்ள எனது கதையையும் எனது போட்டோவையும் காட்டினார்கள். உடன் வந்த ருஷ்ய நண்பர்களும் குழுவினரும் கைதட்டி என்னை வாழ்த்தினார்கள்; நானும் கைதட்டினேன். அதுதான் அங்கே மரபு.
""இது எந்தக் கதை? ருஷ்ய மொழியாக்கத்திலிருந்து உக்ரைனில் மொழி பெயர்க்கப்பட்டதா?'' என வினவினேன்.
""இல்லை. இது கே.திரவியம் மொழிபெயர்த்த, "கேம் ஆஃப் கார்ட்ஸ்' ( சீட்டாட்டம்) என்ற உங்களது தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த கதையின் தலைப்பு "கார்லாண்ட் ஃபார் ஏ ஹீரோ' என்று விளக்கினார். அந்த பத்திரிககையின் ஆக்டிங் சீஃப் எடிட்டர்.
ஸ்வெஸ்த்ஸி என்ற உக்ரேனிய வார்த்தைக்கு "உலகம்' என்பது பொருள். இந்த மாத பத்திரிகை தோற்றத்தில் நமது மொழியில், வெளியாகும் பத்திரிகைகளின் ஆண்டு மலர் போலிருக்கிறது.
1925-ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இந்த உக்ரேனிய மாத இதழின் ஒவ்வொரு இதழிலும், உலகின் பல மொழிகளிலிருந்தும் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் ஆகியவற்றை உக்ரேனிய மொழியில் பெயர்த்து வெளியிடுகிறார்கள்.
ருஷ்ய மொழிக்கும் உக்ரேனிய மொழிக்கும் வரிவடிவம் ஒன்றே எனினும், உலக மொழிகளிலிருந்து நேரே உக்ரேனிய மொழி மாற்றம் செய்வதையே விரும்புகின்றனர்.
அந்த பத்திரிகையின் ஆக்டிங் சீஃப் எடிட்டரின் பெயரும் விளாதிமீர் மெ... என்று வைத்துக் கொள்ளுவோமே!
அவர் இந்திய இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராய் இருந்தார். ""எனக்குப் புதிதாக வெளிவந்துள்ள "பகவத் கீதை' பதிப்பு ஒன்று வேண்டும்'' என்றார்.
ஓர் ஐரோப்பியருக்கு கீதையின் மீதுள்ள பிடிப்பும் அபிமானமும் மாக்ஸ்முல்லர் காலத்திலிருந்து வளர்ந்ததுதான். எனினும் சோவியத் யூனியனில் உள்ள ஓர் எழுத்தாளர் கீதையை மதித்து அதை வேண்டி விரும்பிக் கேட்டது எனக்கு அதி உற்சாகம் தந்தது!
" போனதும் வந்ததும்' நூலிலிருந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.