அழியா புகழ் கொண்ட அரும்பாவூர்!

தமிழ் நூல்களில் முதன்முதலில் சிலப்பதிகாரமே கலைகளை அறுபத்து நான்கு என்று குறிப்பிடுகிறது.
அழியா புகழ் கொண்ட அரும்பாவூர்!
Updated on
3 min read


தமிழ் நூல்களில் முதன்முதலில் சிலப்பதிகாரமே கலைகளை அறுபத்து நான்கு என்று குறிப்பிடுகிறது. சில கலைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இருப்பினும் இன்றும் நிலைபெற்ற கலைகளாக சிற்பக் கலை, இசைக் கலை, கட்டடக் கலை, ஓவியக் கலை, ஆடற் கலை ஆகிய ஐந்தும் அழியாப் புகழ் பெற்று விளங்குகின்றன. இவற்றில் மரச் சிற்பக் கலைக்கு அகிலம் முழுவதும் பிரசித்தி பெற்றது அரும்பாவூர் மரச் சிற்பங்கள்தான். புவிசார் குறியீடு பெற்றிருப்பதுடன், இந்திய அஞ்சல் தலையிலும் அரும்பாவூர் சிற்பம் இடம்பெற்று அழியா புகழை தன்னகத்தே இணைத்துக் கொண்டுள்ளது அரும்பாவூர்.

பெரம்பலூர் மாவட்டத்துக்கு மட்டுமின்றி பார் முழுவதும் பெருமைத் தேடித் தந்துள்ளது இந்த கிராமம். இந்தச் சிற்பக் கலைக்கு 300 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் தொடங்கி, வடபழநி முருகன் திருக்கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் அரும்பாவூரில் வடிவமைத்த மர வேலைப்பாடுகள்தான் தேர்களாகவும், கொடிமரமாகவும், உற்சவரை சுமப்பதற்கான பல்வேறு வாகனங்களாகவும், மரச் சிலைகளாகவும் காட்சியளிக்கின்றன. ஓரடி முதல் 14 அடி வரையில் சிற்பங்கள் செய்யப்படுகின்றன.

அரும்பாவூர் மட்டுமின்றி அருகாமையில் உள்ள தழுதாழை, வேப்பந்தட்டை உள்ள பகுதிகளும் மரச்சிற்பக் கூடங்கள் நிறைந்த பகுதியாகவே காட்சியளிக்கின்றன. இங்கு மாநில அரசால் அமைத்து தரப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த 35 ஆண்டுகளாக ஏராளமான சிற்பக் கூடங்கள் இயங்கி வருகின்றன.

பூவரசு, வாகை, இலுப்பை, மாவிலங்கை, தேக்கு, கருங்காலி, அத்தி, வேம்பு ஆகிய மரங்களைக் கொண்டு, பல்வேறு விதமான சிற்பங்கள், நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில் தேர், சுவாமி வீதியுலா செல்லும் வாகனங்கள், கோயில் கொடிமரங்கள் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர். இயந்திரங்கள் இல்லாமல் முழுவதும் சிற்பக் கலைஞர்களின் கைகளால் உளி, சுத்தியல் கொண்டே செதுக்கப்படுவது கூடுதல் சிறப்பு.

இங்குள்ள சிற்பிகள் கோயில் தேர்களை மட்டுமன்றி, தெய்வங்கள், அலங்கார கதவுகள், நிலைகள், கலைநயம் மிக்க சிற்பங்கள், வன விலங்குகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கான சிற்பங்கள், மனித உருவங்கள் மற்றும் வாடிக்கையாளர் விரும்பும் சிலைகளையும் கைவினைப்பொருட்களாக வடிவமைக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு தயாரிக்கப்பட்ட மரச்சிற்பங்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடத்தப்பட்ட கைவினை பொருள் கண்காட்சியில் இடம்பெற்று உலக நாடுகள் பலவற்றையும் அரும்பாவூர் பக்கம் திரும்ப வைத்தது.

இங்குள்ள சிற்பிகளில் பலர் மத்திய அரசால் வழங்கப்படும் மாஸ்டர் கிராப்ட் பட்டமும், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியால் வழங்கப்படும் தேர் ஸ்தபதி, தேர் சிற்பி பட்டங்களையும் பெற்றவர்கள். சிலை வாகை, மாவிலிங்கம், கொடுக்காப்பள்ளி, பூவரசு, மாமரம், பர்மா தேக்கு ஆகியவற்றில் சிற்பங்களையும், கோயில் வாகனங்களை அத்தி மரத்திலும், தேர்களை இலுப்பை மரத்திலும், ரதத்தை தேக்கு மரத்திலும் செய்து தருகின்றனர். உள்ளூர் சந்தை முதல் உலகளாவிய சந்தையிலும் தடம் பதித்துள்ளனர். இங்கு உற்பத்தி செய்த மரச்சிற்பங்கள் பலவும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இன்றும் அரும்பாவூரை நினைவுகூறும் வண்ணம் காட்சியளிக்கின்றன. விவசாயத்தை கைவிட்ட இளைஞர்கள் மட்டுமின்றி விஞ்ஞானம் படித்த இளைஞர்களும் விருப்பத்துடன் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று தலைமுறையாக மரச்சிற்பம் வடிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது தலைமுறை இளைஞரும், இயந்திரப் பொறியியல் பட்டதாரியுமானன எஸ். வாசு (31) கூறுகையில், எனது தாத்தா பெருமாள், தந்தை சேகர் என இரண்டு தலைமுறையாக சிற்பக் கூடத்தை நடத்தி வந்தனர். இப்போது, மூன்றாவது தலைமுறையாக நாங்கள் வந்துள்ளோம். பொறியியலில் பட்டம் பெற்றிருந்தாலும் வாழ்வாதாரத்துக்கும், எனக்கான விருப்பமானத் தொழிலாகவும் இருப்பது சிலை வடிப்பது மட்டுமே. எனது மூத்த சகோதரர் சரண்ராஜிடம் இருந்து இக் கலையைக் கற்றுக் கொண்டேன். மற்றொரு சகோதரரான மகேந்திரனும் எனது திறமைக்கு பட்டை தீட்ட உதவினார். இன்று, இரு சகோதரர்களுடன் இணைந்து மரச் சிற்பக் கூடத்தை திறம்பட நடத்தி வருகிறேன். வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான மர வேலைப்பாடுகளுக்கு தேக்கு பயன்படுத்துகிறோம். இதர சிற்பங்களுக்கு பூவரசு, வாகை, அத்தி, வேம்பு, கருங்காலி, இலுப்பை உள்ளிட்ட மரங்களை தேர்வு செய்து சிலை வடிக்கிறோம். எங்களுக்குத் தேவையான மரங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே கிடைத்துவிடுகிறது. தமிழகத்தின் அனைத்து ஏரிப் பகுதிகளிலும், குளங்கள், குட்டைகள், நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளிலும் எங்களுக்கான மரங்கள் எளிதில் கிடைத்துவிடுகின்றன. ஓரடியில் ஒரு சிற்பத்தை உருவாக்க ஒரு வாரமாகும். 10 அடிக்கு மேலான சிலைகள் செய்ய குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும். பெரும்பாலும் கோயிலுக்கான வேலைகளே அதிகம் கிடைக்கின்றன. எனவே, தெய்வ பக்தியுடன், எங்களது கலையும் சேர்ந்து வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது' என்றார்.

இவரது மூத்த சகோதரரான சரண்ராஜ் கூறுகையில், சமூக வலைதளங்ளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதால், அரும்பாவூர் என டைப் செய்தாலே எண்ணற்ற சிற்பங்கள் காட்சிக்கு கிடைக்கின்றன. இதனால், தமிழகம் மட்டுமின்றி மும்பை, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மகராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கின்றன.  குறைந்தது ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.80 லட்சம் வரையில் வேலைப்பாடுகள் கூடிய சிற்பங்கள் செய்து தருகிறோம். மரத்தின் வகை, செதுக்க ஆகும் காலம், அதன் உயரம் ஆகியவற்றைக் கொண்டு விலையில் மாறுபாடு இருக்கும். அரும்பாவூர் சிற்பங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால், ஆர்வமுள்ள பல இளைஞர்கள் எங்களிடம் வந்து இந்தத் தொழிலைக் கற்றுக்கொள்கின்றனர். நானும், எனது சகோதர்களும் பள்ளியில் படிக்கும் போது சிற்பம் செய்ய கற்றுக்கொண்டோம். பொறியியல் பட்டம் பெற்றாலும் இத்தொழிலையே தொடர்ந்து வருகிறோம்' என்றார்.

மற்றொரு சிற்பியான மகேந்திரன் கூறுகையில், ""சிலைகள், மனித உருவங்கள் மட்டுமின்றி, பல்வேறு வகையான கைவினைக் கலைகளிலும் ஈடுபடுகிறோம். புதுதில்லி, சென்னை, ஐதராபாத், ஆகிய இடங்களில் நடக்கும் அரசு கண்காட்சிகளுக்கும் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த நிகழ்வுகள் எங்களின் நற்பெயரையும், அரும்பாவூருக்கான புகழையும் மேலும் அதிகரிக்கிறது' என்றார்.

கடல் கடந்து, கண்டங்கள் கடந்து, நாடுகள் கடந்து புகழ் பெற்றிருந்தாலும் உள்ளூரில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இங்குள்ள சிற்பிகளுக்கு நீண்ட காலமாகவே உள்ளது. கலைகளைப் போற்றும் கண்காட்சிகளும், பல நாட்டவர் வந்து செல்லும் கருத்தரங்குகளும் பெருநகரங்களில் மட்டுமே நடந்து வருகின்றன. இதனால், அரும்பாவூர் சிற்பங்களை அங்கு கொண்டு சென்று காட்சிப்படுத்துதலில் பல சிரமங்கள் உள்ளன. எனவே, உள்ளூரிலேயே ஆண்டுதோறும் பூம்புகார் நிறுவனத்தால் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான கண்காட்சிகளை நடத்த வேண்டும். அதில், அரும்பாவூர் கலைஞர்கள் எளிதில் பங்கேற்பதுடன், உலகளாவிய வேலைவாய்ப்புகளும் உள்ளூரிலேயே கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்' மூன்றாம் தலைமுறை சிற்பி வாசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com