

டைட்டானிக் கப்பல் தொடர்புடைய பல அருங்காட்சியகங்கள் உள்ளன. இவற்றில் வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் அருங்காட்சியகம் சிறப்புமிக்கது.
ஆர்.எம்.எஸ். டைட்டானிக் கப்பல், தன்னுடைய முதல் பயணத்தின்போது பனிப்பாறை மீது மோதி 1912-ஆம் ஆண்டு ஏப். 15-இல் மூழ்கத் தொடங்கியது. இதில், பயணம் செய்த 2,200 பேரில் 1,500 பேர் இறந்தனர். 700 பேர் உயிர்தப்பினர். தப்பியவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம். ஆண்கள் உயிர்பிழைத்தது மிகக் குறைவு.
மூன்றாம் வகுப்பில் இருந்த 700 பயணிகளில் சிலரே உயிர் பிழைத்தனர். மொத்தம் 12 நாய்கள் கப்பலுக்குள் இருந்ததில் முதல் வகுப்பில் இருந்த பெண்கள் அழைத்து வந்திருந்த 3 நாய்கள் மட்டுமே பிழைத்தன.
இந்த டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பொருள்களில் ஏலத்தில் மிக அதிக விலையில் போனது வயலின்தான். அது அதிகபட்சமாக 1.7 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. டைட்டானிக் கப்பலில் பயணித்தவரின் பயணச்சீட்டு ஒன்று கிடைக்க, அது 70 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது.
இன்று இந்த கப்பல் அட்லாண்டிக் கடலில் 12 ஆயிரம் அடி ஆழத்தில், தரையில் படிந்து கிடக்கிறது. டைட்டானிக் கப்பலில் 5,500 பொருள்கள் இருக்கக்கூடும் என கணக்கிட்டுள்ளனர். அவற்றில் சில எடுக்கப்பட்டன.
டைட்டானிக் குறித்து 1997-இல் படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இதன் விளைவால் நிறைய அருங்காட்சியகங்கள் அட்லாண்டிக் கடற்கரையில் தொடங்கப்பட்டன.
இவற்றில் 10 சிறந்த அருங்காட்சியகங்கள் என ஒரு பட்டியலே வெளியானது.
கனடா, ஐஸ்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இவை உள்ளன.
இவற்றில் மிகப் பெரியது அமெரிக்காவின் டென்னிசி நகரில் உள்ளது. அங்கு கப்பலில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருள்கள் ஏராளமாகப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் அருகேயும் அருங்காட்சியகம் உள்ளது. இதுவே மிகச் சிறந்த அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.
இங்குதான் டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டது. அதனால், இதற்கு முக்கியத்துவம் அதிகம். இதைக் காண ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வருகை தருகின்றனர். டைட்டானிக் கப்பலின் உயரமான 126 அடியில் இந்தக் கட்டடம் மூன்று மாடியில் அமைந்துள்ளது. இங்கு 90 கேலரிகள் உள்ளன.
விபத்து நடைபெற்று 100 ஆண்டுகள் கடந்ததையடுத்து, 2012-ஆம் ஆண்டு ஏப். 15-இல் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.
முதல் கேலரியில் பெலபாஸ்ட்டில் டைட்டானிக் (1909-11) கட்டப்படுவது சார்ந்த இடங்களைக் காணலாம்.
இரண்டாவது கேலரியில் வேலையாள்கள் நின்று வேலை செய்ய எழுப்பப்பட்ட தற்காலிக சாரக்கட்டை காணலாம்.
மூன்றாவது கேலரியில் ûட்டானிக் கப்பல் கட்டப்பட்டு வெள்ளோட்டம் விட்டதைக் காணலாம். இதனை 1912-ஆம் ஆண்டிலேயே ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
நான்காவது கேலரியில் பயணிகள், ஊழியர்கள் அமர்ந்து எப்படி காட்சியளித்தனர் என்பதைத் தத்ரூபமாய் விளக்கியுள்ளனர்.
ஐந்தாவது கேலரியில் கப்பல் தன்னுடைய பயணத்தைத் தொடக்கியது சார்ந்த அனைத்துத் தகவல்களையும் அறியலாம்.
ஆறாவது கேலரியில் பனிப்பாறை மீது எப்படி கப்பல் மோதி மூழ்கியது. அப்போது மோர்ஸ் கோடு மெசேஜ்கள் அலறுவதையும் தத்ரூபமாய் காணலாம்.
ஏழாவது கேலரியில் உயிர்காக்கும் படகுகள் மூலம் பயணிகள் எவ்வாறு மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட படகுகளையும் காணலாம்.
எட்டாவது கேலரியில் முக்கிய டைட்டானிக் கப்பல் பற்றிய வதந்திகள் குறித்தும், அவற்றின் உண்மையையும் விளக்கும் தொகுப்புகளைக் காணலாம்.
ஒன்பதாவது கேலரியில் கப்பல் தரையைத் தொட்டு 12 ஆயிரம் அடி ஆழத்தில் அமர்ந்து தற்போது எப்படி சீரழிந்துவருகிறது என்பதையும் தத்ரூபமாய் காணலாம்.
இந்த அருங்காட்சியகத்தைக் காண இந்திய மதிப்பில் ரூ.2,150 கட்டணமாகும். பயண வழிகாட்டியுடன் சுற்றிப் பார்க்க மேற்கொள்ள ரூ.1,500 ஆகும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.