

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
என் வயது ஐம்பத்து ஏழு. எனது இடது பெருவிரல் கணுவில் வீக்கமும், கடும் வலியும் உள்ளன. ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவும் அதிகரித்துள்ளதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?
-செந்தில்குமார், கோவை.
மனிதர்களுடைய கல்லீரலில் சுரப்பதும், சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்யப்படுவதுமான யூரிக் அமிலத்தின் அளவு சீரானதாக இருக்க வேண்டும். பியூரின்கள் எனப்படும் பொருள்களின் சிதைவைத் தொடர்ந்து, நமது உடல் யூரிக் ஆசிட்டையும் கழிவுப் பொருளாக உற்பத்தி ùய்கிறது. பல்வேறு உணவுகள், பானங்களில் இந்தப் பியூரின்கள் உள்ளன.
உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு மிகுதியாக இருந்தால் கீழ்வாதப் பிரச்னையை ஏற்படுத்தக் கூடும். தவிர, சிறுநீரகக் கல், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டாகக் கூடும்.
பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதம் அதிகரித்துள்ள யூரிக் ஆசிட் அளவை திறம்படக் குறைக்கப் பல வீட்டு வைத்திய முறைகளை வழங்குகிறது. இயற்கையான முறையில் குறைக்க உதவும் சில ஆயுர்வேத மூலிகைகளைப் பற்றி நாம் அறிந்திருப்பது நலம்.
சீந்தில் கொடி சிறந்த சுழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்காக ஆயுர்வேதத்தில் பிரபலமாக இருக்கும் முக்கிய மூலிகையாகும். அதன் வேர், தண்டு, இலைகள் என அனைத்துமே மருத்துவக் குணம் வாயந்தவை. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதோடு, யூரிக் ஆசிட் அதிகரித்த அளவைக் குறைக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தை வலுப்படுத்துவதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தன்மையுடையது.
நெரிஞ்சில் விதையானது சிறுநீரை அதிகம் உற்பத்தி செய்து, யூரிக் ஆசிட், உடலில் தேக்கம் அடையும் பல்வேறு நச்சுகளை சிறுநீரகங்கள் வழியே வெளியேற்றிவிடும். அதுபோலவே, மூக்கிரட்டை உடலில் நீர்தேங்குவதையும், பூட்டுகளில் யூரிக் ஆசிட்டினால் ஏற்படும் வீக்கத்தையும் வற்றிவிடச் செய்துவிடும்.
நம் அனைவருக்கும் பரிச்சியமான திரிபலா இயற்கையான மலமிளக்கியாகச் செயல்படுவதுடன் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்துக்கும், யூரிக் ஆசிட் வெலவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெந்தயத்தின் அடைந்துள்ள சபோனின்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ் போன்ற சிறப்புக் கலவைகளால் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடண்ட் விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. எனவே, தொடர்ந்து வெந்தயத்தை உட்கொள்வது மூட்டுவலியைக் குறைக்க, யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கவும் உதவும்.
எரிச்சல், வீக்கம், வலி உள்ள நிலைகளில் 'ஜடாமயாதி லேபம்' என்ற பெயரில் விற்கப்படும் மூலிகைச் சுரணத்தை அரிசி வடித்த கஞ்சியுடன் குழைத்து, இளஞ்சூடாகப் பற்றிட உபாதைகள் தீரும்.
குளிர்ச்சி, வீக்கம், வலி உள்ள பூட்டுகளில் 'கொட்டம்சுக்காதி' எனும் சூரணத்தைப் புளித்த மோருடன் கலந்த சூடாக்கிப் பற்றிட உபாதையானது குணமாகும்.
பூட்டுகளில் வந்து தங்கிவிடும் இந்த யூரிக் ஆசிட்டினால் ஏற்படும் சத்தம், வலி, வீக்கம் குறைய சதகுப்பையை புளித் தண்ணீரில் அரைத்து, அதன் மீது இளஞ்சூடாகப் பற்றிட மிகவும் நல்லது.
பலாகுடூச்யாதி கஷாயம், கோகிலாக்ஷம் கஷாயம், பிருகத்யாதி கஷாயம், தசமூலஹரீதகீ லேகியம், கோக்ஷீராதி குக்குலு மாத்திரை போன்றவை தங்களுக்கு நல்லதொரு நிவாரணத்தை அளிக்க முடியும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.