ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே லட்சியம்...

ஒலிம்பிஸ் மாரத்தான் ஓட்டப் போட்டியில் இந்தியாவுக்காகப் பதக்கம் பெறும் லட்சியத்தோடு இருக்கிறார் பதிமூன்று வயதான சர்வேஷ்.
ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே லட்சியம்...
Updated on
2 min read

ஒலிம்பிஸ் மாரத்தான் ஓட்டப் போட்டியில் இந்தியாவுக்காகப் பதக்கம் பெறும் லட்சியத்தோடு இருக்கிறார் பதிமூன்று வயதான சர்வேஷ்.

இதுவரை 210 மாரத்தான் பந்தயங்களில் பங்கேற்றுள்ள அவர், 7,350 கி.மீ. ஓடியிருக்கும் சர்வேஷ் தினமும் காலை, மாலை என இரு வேளைகளும் 3 கி.மீ. ஓடி பயிற்சி மேற்கொண்டுவருகிறார்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம்

நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷின் தந்தையும் அவரது பயிற்சியாளருமான விசு கூறியது;

'எனது ஒரே குழந்தையான சர்வேஷுக்கு மூன்றரை வயதிலேயே ஓடும் ஆர்வம் வந்தது. அவனது ஆர்வத்தை அறிந்து நான் ஓடுவதற்கு பயிற்சியை அளிக்க ஆரம்பித்தேன். முதலில் 100 மீ., 200 மீ. தூர ஓட்டத்துக்காகப் பயிற்சி அளிக்கலாம் என்று நினைத்தேன். கிராமத்தில் தகுந்த பயிற்சியாளர் கிடைக்கவில்லை. விரைவு ஓட்டத்துக்கேற்ற தடகளமும் இல்லை. அதனால் மாரத்தான் ஓட்டத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

தற்போது சர்வேஷ் தாம்பரம் சாய்ராம் பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேறி, ஒன்பதாம் வகுப்பில் படிக்கவிருக்கிறார். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து பயிற்சி மைதானத்துக்குச் செல்வோம். 2 கி.மீ. அல்லது 3 கி.மீ. ஓடி முடித்தவுடன் பிறகு வீட்டுக்கு வந்து நான் அலுவலகத்துக்குச் செல்வேன். சர்வேஷ் பள்ளிக்குச் செல்வார். மாலையிலும் ஓட்டப் பயிற்சிக்காக நான் அழைத்துச் செல்வேன். மாலையில் பயிற்சி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், வீட்டிலேயே டிரேட் மில்லில் ஓடுவார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள 'ஆல்காட்' அரசுப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மாதிரி மாரத்தான் போட்டிகளில் சர்வேஷை தவறாமல் கலந்து கொள்ளச் செய்வேன். சிறார்களுக்கான மாரத்தான் போட்டிகளில் நூற்றுக்கணக்கான பதக்கங்களை சர்வேஷ் பெற்றுள்ளார். சாதனைப் புத்தகங்களிலும், அவர் இடம்பிடித்துள்ளார்.

தொடக்கத்தில் சிறார்களுக்கான ஒரு கி.மீ, தூர மாரத்தானில் பங்கேற்ற சர்வேஷ், தற்போது 5 கி.மீ. தூரத்தை 17 நிமிடங்கள் 49 விநாடிகளில் கடக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். இனி 5 கி.மீ. தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க முயற்சிகளில் சர்வேஷ் ஈடுபடுவார். வயது அதிகரிக்க, அதிகரிக்க 10 கி.மீ. ஓட முயற்சிப்பார்.

ஒன்பதாவது வயதில் 2021-இல் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாரத்தானை நிறைவு செய்தார். சுமார் 750 கி.மீ. கடந்துள்ளார். 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டம் சில நிமிடங்களில் முடிந்துவிடும். மாரத்தானில் நீண்ட நேரம் ஓடவேண்டும் என்பதால் அடிக்கடி க்ளுகோஸ் உட்கொள்ள வேண்டும். சிறுவன் என்பதால் ஒரு மணிக்கு ஒரு தடவை மருத்துவர் பரிசோதனை செய்வார். மாரத்தான் சாலையில் ஓட வேண்டும் என்பதால் இரவில் ஓட முடியாது. சீக்கிரம் தூங்கி அதிகாலை 4 மணிக்கு ஓட ஆரம்பிக்க வேண்டும்.

2 லட்சம் விதை பந்துகளை மாரத்தான் ஓடும் போது சாலை ஓரத்தில் சர்வேஷ் வீசி வந்தார். 'கன்னியாகுமரி- சென்னை' மாரத்தான் ஓட்டத்தை சென்னை சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி ஸ்பான்சர் செய்திருந்தது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சர்வேஷ் மாரத்தான் ஓட திட்டமிட்டுள்ளார்.

பதினாறு வயதுக்கு உள்பட்ட 2021, 2022-இல் 'உலக முதன்மை சிறார்கள்' என்ற பட்டியலில் 'இந்தியாவின் முதன்மை சிறார்' பிரிவில் சர்வேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். துபையில் இந்த விருதுகளை சர்வேஷுடன் இந்த விருதை வாங்கியவர்கள் 'செஸ்' பிரக்யானந்தா, 'பியானோ' லிடியான் நாதஸ்வரம்.

வெளிநாடுகளில் நடைபெறும் மாரத்தானில் பங்கு பெற சர்வேஷை அழைக்கிறார்கள்.

தேசிய அளவில் மாரத்தான் போட்டியில் விருது பெற வேண்டும். பிறகு அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக்ஸ் மாரத்தான்' என்கிறார் விசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com