

பாடல்கள் உரிமை வழக்கில் இளையராஜா !
'தேவர் மகன்', 'குணா' உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜராகி, ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.
முன்னதாக, 'தேவர் மகன்', 'பாண்டியன்', 'பிரம்மா', 'குணா' உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், தங்கள் அனுமதியின்றி இந்தப் படங்களின் பாடல்களை யூடியூப், சமூக ஊடகங்களில் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரி 2010இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தபோது, '1997இல் பாடல்கள் உரிமை வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்தபோது, யூடியூப், சமூக ஊடகங்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது'' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான், இளையராஜா சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி பி.இளங்கோ முன்பு ஆஜரானார். அப்போது, இளையராஜாவிடம் மூத்த வழக்குரைஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். இளையராஜாவிடம், பாடல்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம், சொத்து மதிப்புகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில், 'தங்களிடம் எத்தனை பங்களாக்கள் இருக்கின்றன'' என்று வழக்குரைஞர் எழுப்பிய கேள்விக்கு, 'எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகளாவிய பொருள்களைப் பற்றி எனக்குத் தெரியாது'' என்று இளையராஜா பதிலளித்தார்.
மேலும், 'பெயர், புகழ், செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என்பது உண்மையா?'' என்ற கேள்விக்கு, 'அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது'' என்று இளையராஜா கூறினார்.
விசாரணை முடிவில் நீதிபதி, வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி உத்தரவிட்டார்.
ரஜினி குறித்து ராம் கோபால் வர்மா!
இயக்குநர் ராம் கோபால் வர்மா ரஜினியின் நடிப்பை விமர்சித்துப் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து பேசிய ராம் கோபால் வர்மா, 'நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தைச் சார்ந்தது. ஆனால், நட்சத்திரங்கள் அவர்களுடைய பெர்பாமென்ஸை சார்ந்து இருக்கிறார்கள். இவை இரண்டுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. ரஜினிகாந்த் சிறந்த நடிகரா? எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஒரு நட்சத்திரமாக பார்க்கவே அனைவரும் விரும்பு
கிறார்கள். அவரால் 'சத்யா' திரைப்படத்தின் பிக்கு ஹாத்ரே கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. ஸ்லோமோஷன் நடையில்லாமல் ரஜினிகாந்த் இருந்திருக்க முடியுமா என எனக்கு தெரியவில்லை. ரஜினி இப்படி பாதி படத்துக்கு எதுவும் செய்யாமல் நடப்பதை பார்த்து மகிழ்வதில் தவறில்லை. அது உங்களுக்கு ஒரு உயர்வான உணர்வை தருகிறது. ரசிகர்கள் அவரை கடவுளைப் போலவே பார்க்கிறார்கள்.
ஆதலால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும். ‘ எனக் கூறியிருக்கிறார். மேலும் அமிதாப் பச்சன் பற்றி பேசிய அவர், 'அமிதாப் பச்சன் ஒரு படத்தில் வயிற்று வலி வருவது போல் நடித்திருப்பார், அவர் அந்தக் காட்சியில் நடிப்பதை பார்க்கவே முடியவில்லை. அமிதாப் பச்சன் மற்றும் ரஜினியை கடவுளாக பார்ப்பதால் இப்படியான நட்சத்திரங்களால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடிவதில்லை.' எனக் கூறியிருக்கிறார்.
பயந்தேன் மீனாட்சி சௌத்ரி!
தி கோட், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. லக்கி பாஸ்கர் படத்தின் தனிஇமேஜ் அவருக்கு கிடைத்தது.
தி கோட் படத்தில் நடித்தது குறித்துப் பேசிய அவர், 'நடிகர் விஜய்யின் தி கோட் படத்தில் நடித்த பிறகு, நான் பலரால் ட்ரோல் செய்யப்பட்டேன். அதனால் ஒரு வாரம் மன அழுத்தத்துக்கு ஆளானேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போதே இந்தக் கருத்து விஜய் ரசிகர்களால் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், குறுகிய காலத்தில், மகேஷ் பாபு, விஜய், துல்கர் சல்மான் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்றுவரும் இவர் தற்போது வெளியான 'சங்கராந்திகி வாஸ்துனம்' எனும் தெலுங்கு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
இதற்கிடையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'லக்கி பாஸ்கர் படத்தில் ஒரு அம்மாவாக நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. மக்கள் என்னை ஒரு அம்மாவாக ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று நான் பயந்து, கவலைப்பட்டேன். சுமதி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். ஆனால், மக்கள் என்னை சுமதியாகவே ஏற்றுகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அந்த வேடத்திற்கு நான் தகுதியானவள் என்பதை இப்போது ஏற்றுகொள்கிறேன். ஒரு நடிகையாக, எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2024 என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆண்டாகும். என் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.