கண்டது
(புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள 'கோட்டை' எனும் பெயரிலே அமைந்த ஊர்களின் பெயர்கள்)
'நருவிக்கோட்டை, தாமரங்கோட்டை, மரக்கலக்கோட்டை, சேண்டாக்கோட்டை, பெரியகோட்டை, மண்டலக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, தம்பிக்கோட்டை, ஆத்திக்கோட்டை, சுந்தரக்கோட்டை, கல்லாக்கோட்டை, காரிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, தளிக்கோட்டை, திருமக்கோட்டை, தெற்குக்கோட்டை, ùடுவாக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை, பாபாலயக்கோட்டை, பொய்யு
(ஆவிக்கோட்டை), உளூர்புதுக்கோட்டை, மகிழங்கோட்டை, வெண்டாக்கோட்டை, வாட்டாத்திக்கோட்டை, பருத்திக்கோட்டை.'
-டி.ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை.
(ஸ்ரீரங்கம் நகரில் ஓர் கடையில் எழுதியிருந்தது)
'மாதாந்திரக் கடனும் வேண்டாம். வாராந்திரக் கடனும் வேண்டாம். தினசரி கடனும் வேண்டாம். மணி கணக்கிலும் கடன் வேண்டாம். எனக்கு யாரும் கடன் தருவதில்லை. நீங்களும் கடன் கேட்காதீர்கள்.'
-எஸ்.பெருந்தேவி, ஸ்ரீரங்கம்.
(ஆவுடையார்கோவில் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'தும்பை மலர்'
-கே.எஸ்.ரவிச்சந்திரன், மணமேல்குடி.
கேட்டது
(கோவை இடையர்பாளையம் டீக்கடையில் இருவர்..)
'என் மனைவிக்கு கோபம் வந்தா என் மேல் பாத்திரத்தை எல்லாம் வீசி எறிஞ்சிட்டு அப்புறமா அவளே வாய்க்கு ருசியா சமைச்சும் கொடுப்பா?'
'அது பரவாயில்லேயே.. என் மனைவி பாத்திரத்தை வீசி எறிஞ்சுட்டு நாலு நாளைக்கு சமைக்கவே மாட்டாளே..?'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
(கன்னியாகுமரி குஞ்சன்விளை பஸ் நிறுத்தத்தில் இரு நண்பர்கள்...)
'என் மனைவி கோயிலுக்குப் போக மல்லிகைப்பூ வாங்கித் தர சொன்னாள்..?'
'வாங்கித் தர வேண்டியதுதானே...?'
'பூ வாங்கித் தந்தேன்.. மல்லிகைப் பூ வாசமில்லை வேறு வாங்கித் தர சொன்னாள்..நான் மல்லிகை பூ சென்ட் பூசி கொடுத்திட்டேன்...'
-அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.
(திருச்சி- சென்னை சொகுசு பேருந்தில் அப்பாவும் மகனும்...)
'ஏ.சி.ன்னா என்னப்பா அர்த்தம்...
'அதனால்தான் அர்த்தம்...'
'சொகுசுப் பேருந்துன்னா.. அப்போ எதனால்...?'
'....'
-பா.சிவானந்தம், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
பார்த்தால் வெறும் காகிதம். படித்தால் பேராயுதம்.
-சங்கரி முத்தரசு, கோவை.
மைக்ரோ கதை
ஒருவன் பசியுடன் ஹோட்டலுக்கு சென்றான். அங்கிருந்த போர்டில், 'இங்கு சாப்பிடுவோரிடம் பணம் வசூலிக்கப்பட மாட்டாது. அவரின் பேரனிடம் வசூலிக்கப்படும்' என்றிருந்தது. இதைக் கண்ட நபர் சாப்பிட்டுவிட்டு, கை அலம்பச் சென்றபோது சர்வர் பில் கொடுத்தார். சாப்பிட்ட நபர் போர்டை காட்டி 'என் பேரனிடம் வசூலித்துகொள்ளுங்கள்' என்றார். அப்போது சர்வர், 'இது உங்கள் தாத்தா சாப்பிட்டதற்கான பில்' என்றார். இதைக் கேட்ட நபருக்கு தலைசுற்றலே வந்துவிட்டது.
-பத்மா சாரதி, தஞ்சாவூர்.
விழுதுவது எழுவதற்குதானே தவிர, அழுவதற்கு அல்ல!
-ரமணன் ஏகாம்பரம், ராசிபுரம்.
அப்படீங்களா!
இணையத் தேடுதலுக்கு புகழ்பெற்றது 'கூகுள் செர்ச்'. நொடிப் பொழுதில் நாம் தேடும் தகவல்கள் எங்கெங்கே உள்ளது என்பதை தேடி கண்டுபிடித்து காட்டி வருகிறது. எனினும், செயற்கை நுண்ணறிவு தேடுதல் மென்பொருள்களான சாட்ஜிபிடி கூகுள் செர்ச்சை விஞ்சியது.
நமது தேவைக்கு ஏற்ப தேடுதல் தகவல்களை ஒருங்கிணைத்து வழங்கியதுதான் இதன் சிறப்பு. இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் 'ஜெமினி' என்ற செயற்கை நுண்ணறிவு தேடுதல் மென்பொருளை 2023-இல் உருவாக்கியது.
இதை கூகுள் செர்ச்சில் கூகுள் இணைத்துள்ளது. இதன் மூலம் கூகுள் பயனாளர்கள் தாங்கள் தேடும் தலைப்புகளில் விரிவான தகவல்களைக் காணலாம்.
உலகம் முழுவதும் 46 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'ஜெமினி சாட்பாட்' மூலம் கூகுள் தேடுதலில் நாம் தேடு தகவல்களை மேலும் விரிவான தேடுதலுக்கு உள்படுத்த கேள்விகளைக் கேட்கலாம்.
இந்த செயற்கை நுண்ணறிவு தேடல் கூகுள் செர்சுக்கு மட்டுமல்லாமல், கூகுளின் இமேஜஸ், விடியோஸ், நியூஸ், மேப்ஸ் உள்ளிட்டவற்றுக்கும் விரிவுப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கூகுகளின் முக்கியமான செர்ச் ஹிஸ்டரியிலும் விரைவில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.