இனிப்பு தீபாவளி ஸ்பெஷல்

கடலை மாவை 2 கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். மாவு தண்ணியாக இருக்க வேண்டும்.
இனிப்பு தீபாவளி ஸ்பெஷல்
Updated on
4 min read

பூந்தி லட்டு

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 2  கிண்ணம்

சர்க்கரை - 3 கிண்ணம்

முந்திரிப்பருப்பு - 15

உலர் திராட்சை - 15

ஏலக்காய் - 4

கிராம்பு - 3

சர்க்கரைப் பாகு தயாரிக்க தண்ணீர் - 3  கிண்ணம்

பூந்தி தயாரிக்க தண்ணீர் -  2 கிண்ணம்

நெய் - 4  தேக்கரண்டி

எண்ணெய்- பொரிக்க

செய்முறை: கடலை மாவை 2 கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். மாவு தண்ணியாக இருக்க வேண்டும். கெட்டியாக இருக்கக் கூடாது. கடாயில் 2  தேக்கரண்டி நெய் ஊற்றி சூடு செய்யவும். அதில் உலர் திராட்சை, முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து முந்திரிப்பருப்பு லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் 3 கிண்ணம் தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும். சர்க்கரை தண்ணீரில் நன்றாகக் கரைந்து, பாகு இரண்டு விரல்களுக்கிடையில் ஒட்டும் பதத்துக்கு கொதிக்க விடவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். பூந்தி தேய்க்கும் கரண்டியில் மாவை சிறிது எடுத்து ஊற்றி மற்றொரு கரண்டியால் அழுத்தி தேய்த்து சமமாக விழுமாறு செய்யவும். பூந்தியை மொறு மொறுப்பாக வேக விட வேண்டாம். பூந்தி மிருதுவாக இருக்க வேண்டும். கரண்டியால் பொரித்த பூந்தியை எடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். இதே போன்று மீதி இருக்கும் மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து எடுக்கவும். சர்க்கரைப் பாகு, பூந்தி, 2  தேக்கரண்டி நெய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, கிராம்பு அனைத்தையும் இதனுடன் சேர்த்து, பாகு வெது வெதுப்பாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும். சுவையான பூந்தி லட்டு தயார்.

***

காஜு கத்லி

தேவையான பொருட்கள்

முந்திரிப்பருப்பு - 2 கிண்ணம்

சர்க்கரை - 1 1/2 கிண்ணம்

நெய்  2 மேசைக்கரண்டி

சுடு தண்ணீர்  3/4 கப்

சில்வர் பேப்பர்  5 (அ) 6

குங்கமப்பூ - ஒரு துளி

செய்முறை:  முந்திரிப்பருப்பை பல பகுதிகளாகப் பிரித்து பொடித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடிக்க வேண்டாம். சர்க்கரையை சுடு தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, குங்குமப்பூ சேர்த்து கம்பி பாகு பதம் வரும் வரை கொதிக்க விடவும்.  சர்க்கரைப் பாகு மிகவும் திக்காகி விட்டால், சில தேக்கரண்டி சுடு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பாகு தயாரிக்கும்போது, இடையில் அரைத்த

முந்திரிபருப்பை மிகவும் குறைந்த தீயில் 2  3 நிமிடங்கள் வறுக்கவும். வறுக்கும்போது தூளின் நிறம் மாறக் கூடாது. முந்திரிபருப்பு தூளானது வெது வெதுப்பாக இருந்தால் எடுத்து விடலாம்.

நெய்யை உருக்கி, பாகில் சேர்க்கவும். இப்போது வறுத்த முந்திரிப்பருப்பு தூளை பாகில் கொட்டி நன்கு கிளற வேண்டும். திக்கான பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும். முந்திரிபருப்பு தூளை பாகில் சேர்க்கும்போது, மாவு கலவை சிறிது தளர்ந்திருந்தால், அடுப்பில் மாவு கலவையை வைத்து சிறிய தீயில் வைத்து கிளறி, தேவையான பதத்திற்கு கொண்டு வரவும். மாவு கலவை ஆறியவுடன், நன்கு பிசைந்து செவ்வக வடிவில் 12 செ.மீ அளவு தடிமனாக தேய்த்துக் கொண்டு அதன் மேல் சில்வர் பேப்பரை  போட்டு டைமண்ட் வடிவில் அல்லது விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும்

***

பாஸந்தி

தேவையான பொருட்கள்

பால் - 8 கிண்ணம்

சர்க்கரை  2 1/2 கிண்ணம்

குங்குமப்பூ - சிறிதளவு

ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை: அடி கனமான அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாலை விட்டு மிதமான சூட்டில் பாலை காய்ச்சவும். பாலின் மேல் படியும் ஏடுகளை ஒரு சிறு கரண்டியால் எடுத்து தனியே வைக்கவும். பால் ஊற்றிய அளவில் இருந்து பாதியாகும் வரை காய்ச்சி பால் ஏடுகளை சேகரித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறவும். இதனுடன் சேகரித்து வைத்துள்ள பால் ஏடுகளை சேர்த்து, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். பாஸந்தி தயார்.

***

பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்

பாதாம்  1/2 கிண்ணம்

சர்க்கரை  1/2 கிண்ணம்

பால்  1/2 கிண்ணம்

நெய்  1/4 - 1/2 கிண்ணம்

குங்குமப்பூ  - சிறிதளவு

செய்முறை:

பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊற வைத்து, பின் தோலை உரித்துக் கொள்ளவும். இல்லையெனில்  சுடு நீரில் சில நிமிடங்கள் பாதாம் பருப்புகளைப் போட்டு கொதிக்க வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். தோல் உரித்து வைத்துள்ள பாதாம் பருப்பை 1/4 கப் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கரையுமாறு கலந்து கொள்ளவும். சர்க்கரை கரைந்த பின்பு, இதனுடன் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுது, மீதமுள்ள பால், குங்குமப்பூ சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும். அல்வா கெட்டியாக ஆரம்பித்தவுடன் நெய்யை சேர்த்து குறைந்த தீயில் நன்கு கிளறவும். அல்வா பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறவும். இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு  2 தேக்கரண்டி நெய் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். இப்படி செய்வதால் அல்வா மிகவும் மிருதுவாக இருக்கும். பாதாம் அல்வா தயார்.

***

தீபாவளி லேகியம்:

தேவையான பொருள்கள்:

கருப்பட்டி (பனைவெல்லம்) - 500 கிராம்

நெய் - 300 கிராம்

நல்லெண்ணெய் -  200 கிராம்

தேன் - 100 கிராம்

அரிசித் திப்பிலி - 100 கிராம்

கண்டந்திப்பிலி - 100 கிராம்

சுக்கு - 100 கிராம்

மிளகு - 100 கிராம்

சீரகம் - 100 கிராம்

பரங்கிச் சக்கை - 50 கிராம்

சித்தரத்தை - 50 கிராம்

கசகசா - 50 கிராம்

உலர் திராட்சை - 50 கிராம்

இலவங்கம் - 10 கிராம்

ஓமம் - 10 கிராம்

ஜாதிபத்திரி - 10 கிராம்

எள் - 10 கிராம்

ஏலக்காய் - 10

கிராம்பு - 5

விரளி மஞ்சள் - 2

செய்முறை: கருப்பட்டி, நெய், நல்லெண்ணெய், தேன் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் தனித்தனியாக, குறைந்த தீயில்,பக்குவமாக வறுக்கவும். (திப்பிலியை வறுத்தபிறகு, அதைக் கையில் எடுத்து ஒடித்தால் ஒடியவேண்டும். இதுவே எல்லாப் பொருளுக்கும் பதம்.) ( மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) வறுத்த எல்லாவற்றையும் மிக்ஸியில் மிக மென்மையாகப் பொடித்து சல்லடையில் சலிக்கவும்.  வாணலியில் பனைவெல்லத்தைப் பொடித்துப் போட்டு, நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். வெல்லம் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சலித்துவைத்துள்ள பொடி, தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். மருந்து கையில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதம். ஆறியதும் காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைத்தால் சுமார் பத்துமாதங்கள் வரை கெட்டுப் போகாது.

(கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உண்பது கூடாது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com