

எழுத்தாளர் அம்பை என்கிற சி.எஸ். லட்சுமிக்கு இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளருக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கிறது.
1944- இல் கோவையில் பிறந்த இவர், சென்னை, தில்லியில் கல்வி கற்றவர்.
விருது குறித்து அம்பை கருத்து தெரிவிக்கையில்,""சுந்தரராமசாமி, ஞானக்கூத்தன், வெங்கட்சாமிநாதன் போன்றோருக்கு கிடைக்காமல், இந்த விருது எனக்குக் கிடைத்திருக்கிறது. இது கூச்ச உணர்வையே தருகிறது. இருப்பினும் எனது எழுத்துப் பணிக்கான ஓர் அங்கீகாரமாக இவ்விருது அமைந்திருக்கிறது'' என்கிறார்.
அம்பை 1960-களில் எழுதத் தொடங்கினார். "சிறகுகள் முறியும்' - நீண்ட கதையின் மூலம் பிரபலமானார். அதே பெயரில் சிறுகதை தொகுப்பு வெளிவந்தபோது, மேலும் கவனிப்புக்கு உள்ளானார்.
பெண்களின் நிலைகளை அசலாகப் பேசும் எழுத்து இவருடையது. அந்தக் காலத்திலும், நிகழ்காலத்திலும் எழுதிய பெண் எழுத்தாளர்கள் தொட அஞ்சிய - சிரமப்பட்ட விஷயங்களை அநாயசமாகத் தொட்டுவிட்டு சென்றுவிடும் எழுத்துப்பாணி இவருடையது. இவரின் அனைத்துச் சிறுகதைகளும் இதே பாணியில் அமைந்தவைதான். எந்த இடத்திலும் அந்த எழுத்து பிரசார தன்மை கொண்டதாக இல்லை.
இவரின் இதர படைப்புகள், "வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, "காட்டில் ஒரு மான்', "சக்கர நாற்காலி', "ஸஞ்சாரி', "வற்றும் ஏரியின் மீன்கள்', "பயணப்படாத பாதைகள்', "சொல்லாத கதைகள்' அவற்றில் சில.
பலமொழிகள் இவருக்கு தெரியும். இவரின் பல நூல்கள் ஆங்கில வடிவம் பெற்றிருக்கின்றன. "தங்கராஜ் எங்கே' சிறுவர் கதையை படமாக தயாரித்தும், இயக்கியும் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.