பைபிள் கதைகள்-9

தந்திரத்தால் வென்ற தம்பி கானான் தேசத்தில் ஈசாக்கு தன் மனைவி ரெபெக்காளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு குறைதான். கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்கிற குறை. குழந்தைக்காக
பைபிள் கதைகள்-9
Updated on
3 min read

தந்திரத்தால் வென்ற தம்பி

கானான் தேசத்தில் ஈசாக்கு தன் மனைவி ரெபெக்காளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு குறைதான். கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்கிற குறை.

குழந்தைக்காக ஈசாக்கு கர்த்தரிடம் கண்ணீருடன் இரவும் பகலும் இடைவிடாமல் பிரார்த்தனை பண்ணினார். கர்த்தர் மனம் இரங்கினார். ஈசாக்கின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தார். ரெபெக்காள் கர்ப்பவதி ஆனாள்.

பிரசவ காலம் நெருங்கி வந்தது. ரெபெக்காளுக்கு ஒருவித விசித்திரமான உணர்வு. அவள் வயிற்றுக்குள் வளர்வது "அடி உதை குத்து' போன்றவைகளில் ஈடுபடுவதைப் போல.

கர்த்தரிடம் காரணம் கேட்டாள்.

அதற்கு கர்த்தர்-

""உன் கர்ப்பத்தில் வளர்வது இரட்டைக் குழந்தைகள். ஆண் குழந்தைகள். கர்ப்பத்திலேயே மோதிக் கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகள், பிற்காலத்தில் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது, இரண்டாகப் பிளவுபடப் போகும் இருபெரும் ஜனக்கூட்டத்துக்கு தலைவர்கள் ஆவார்கள். அப்படிப் பிரியும் இரு பிரிவினரில் ஒரு பிரிவினர், அடுத்த பிரிவினரை விட வலிமை பொருந்தியவர்களாக இருப்பார்கள். மூத்தவன் இளையவனை சேவிப்பான்..'' என்றார்.

கர்த்தரின் வாக்கு வரிசையாக பலிக்க ஆரம்பித்தது.

ஓர் இனிய நாளன்று ரெபெக்காள் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்றுக்குப் பின் ஒன்றாக. ஐந்து நிமிட வித்தியாசத்தில்.

வெவ்வேறு முகச்சாயலைக் கொண்ட அந்தக் குழந்தைகளில் மூத்தவனுக்கு உடம்பெல்லாம் ரோமம் மண்டியிருந்தது. அவனுக்கு "ஏசா' என்று பெயர் இட்டனர்.

இளையவனுக்கு யாக்கோபு என்று பெயர் சூட்டினர். குழந்தைகள் வளர்ந்தன.

மூத்தவன் ஏசா வேட்டையில் வல்லவனாக விளங்கினான். அவனுக்கு குடும்பப் பொறுப்பும் பாசமும் அவ்வளவாகக் கிடையாது. வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு காடு மேடெல்லாம் திரிவான். காட்டு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவான். வாட்டித் தின்று தன் பசியைப் போக்குவான். எஞ்சியதை அப்பாவுக்குக் கொண்டு வந்து கொடுப்பான்.

அப்பாவுக்கு வேட்டைக் கறி என்றால் உயிர். அதனால் வேட்டைக் கறியைக் கொண்டுவந்து கொடுக்கும் ஏசாவை அவருக்குப் பிடிக்கும்.

இளையவனுக்கு குடும்பப் பொறுப்பு உண்டு. நல்ல பண்புகளும் உண்டு. அவர்களுக்குச் சொந்தமான ஆட்டப மந்தையை அவன் பராமரிப்பான். சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் உதவுவான். அம்மாவுக்கு சின்னவன் யாக்கோபுதான் செல்லப்பிள்ளை.

ஒருநாள் யாக்கோபு அப்பங்களைத் தயாரித்து அடுக்கிவிட்டு, பயற்றங் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தான். அப்போது-

வேட்டைக்குச் சென்ற ஏசா வெறுங் கையோடு திரும்பி வந்தான். ஏசாவுக்கு அன்று வேட்டை சரியாக அமையவில்லை. சாப்பிடக் கூடிய விலங்கு எதுவும் சிக்கவில்லை. பசியும் பட்டினியுமாக களைத்துப் போய் வந்து சேர்ந்தான்.

கூடாரத்தை அவன் நெருங்கியபோது யாக்கோபின் சமையலின் மணம் ஏசாவின் பசியை மேலும் கிளறியது.

யாக்கோபிடம் வந்தவன், ""தம்பி! நீ காய்ச்சும் சிவப்பான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு. பசி உயிர் போகிறது...'' என்று கேட்டான்.

யாக்கோபு தந்திரமானவன். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான்.

""அண்ணா! உனக்கு கூழ் மட்டுமல்ல அப்பமும் தருகிறேன். ஆனால் பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்? நீ என்னைவிட ஐந்து நிமிடம் மூத்தவன் என்பதால், அப்பா சொத்தில் பெரும்பகுதியை நீ தட்டிச் செல்லப் போகிறாய்!'' என்றான்.

உடனே ஏசா, ""பசியால் சாகப் போகிற என்னை சொத்துக்களா காப்பாற்றும்? எனக்கு உணவு கொடு. என்னுடைய எல்லா உரிமைகளையும் நீயே எடுத்துக் கொள்..'' என்றான்.

""நீ சொல்வது உண்மை என்றால் சத்தியம் பண்ணிக்கொடு'' என்றான் யாக்கோபு.

ஏசா சத்தியம் பண்ணி, தன்னுடைய பிறப்புரிமையை கூழுக்கு விற்றுவிட்டான்.

யாக்கோபு அண்ணனுக்கு கூழையும் அப்பங்களையும் பரிமாறி அவன் பசியைப் போக்கினான்.

வேகமாக உருண்டோடிய சில ஆண்டுகளுக்குப் பிறகு -

ஈசாக்கு முதுமையினால் பார்வையை இழந்துவிட்டார். மரணப் படுக்கையில் இருப்பதை உணர்ந்தார்.

ஒரு நாள் அவர் ஏசாவைக் கூப்பிட்டார்.

""மகனே! நீ வேட்டைக்குப் போய் எனக்குப் பிரியமான மான் கறியைக் கொண்டுவா. கடைசியாக ஒருமுறை அதை நான் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு உன்னை ஆசீர்வதிப்பேன். மூத்தவனுக்குரிய சொத்துரிமையை உனக்கு வழங்கி உன்னை என் வாரிசாக நியமிக்கப் போகிறேன்..''

அண்ணன் தம்பிக்கிடையே நடந்த ஒப்பந்தம் எல்லாம் அப்பாவுக்குத் தெரியாது. அப்பா சொன்னதும் ஏசா உற்சாகமாக வேட்டைக்குக் கிளம்பினான். மறைவிலிருந்து இதையெல்லாம் கவனித்த தாய் ரெபெக்காள் தன் பிரிய மகன் யாக்கோபைக் கூப்பிட்டாள்.

""நீ சீக்கிரமாக நம்முடைய மந்தைக்குப் போ. இரண்டு இளங் குட்டிகளை வெட்டி கறியைக் கொண்டு வா....'' என்றாள்.

""எதுக்கும்மா?'' என்று யாக்கோப் கேட்டான்.

""நான் சொன்னதைச் செய்..'' என்றாள்.

உடனே மந்தைக்கு ஓடிய யாக்கோபு, சில நிமிடங்களுக்குப் பிறகு மாமிசச்தோடு வந்தான். ரெபெக்காள் அதைச் சமைத்து யாக்கோபிடம் கொடுத்தாள்.

""இதை உன் அப்பாவிடம் எடுத்துக் கொண்டு போ. "நான் ஏசா வந்திருக்கிறேன் வேட்டைக் கறி கொண்டு வந்திருக்கிறேன்...' என்று சொல். அவர் நீதான் ஏசா என்று நம்பி உன்னை ஆசீர்வதித்து உன்னை வாரிசாக்கிவிடுவார்'' என்றாள்.

அதற்கு யாக்கோபு, ""என் உடம்பில் ரோமம் இல்லையே அம்மா. அவர் என் கையைப் பிடித்தால் நான் யாக்கோபு என்று கண்டுபிடித்துவிடுவாரே! ஆசீர்வாதம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர் என்னை சபித்துவிடக் கூடாது..'' என்றான்.

""அதற்கும் வழி இருக்கிறது. நீ உன் உடம்பை ஆட்டுத் தோலால் போர்த்திக் கொண்டு போ..'' என்று யோசனை சொன்னாள் ரெபெக்காள்.

அம்மா சொன்னபடி சமைத்த சூடான ஆட்டுக்கறியை எடுத்துக் கொண்டு ஈசாக்கின் கூடாரத்துக்குள்ளே சென்றான் யாக்கோபு.

அவன் குரலைக் கேட்டு சந்தேகப்பட்ட அப்பா அவனைப் பக்கத்தில் கூப்பிட்டார். அவன் உடம்பில் தம் கரத்தை வைத்து நகர்த்திப் பார்த்தார்.

""குரல் யாக்கோபு மாதிரி இருக்கிறது. உடம்பு ஏசா மாதிரி இருக்கிறது. நீ உண்மையிலேயே என் மூத்த மகன் ஏசாதானே?'' என்று கேட்டார்.

""ஆம் தந்தையே...'' என்றான் யாக்கோபு.

உடனே பெரியவர் அவனை இழுத்து முத்தமிட்டார். அவன் தலைமீது தம் கரத்தை வைத்தார். தந்தையையே ஏமாற்றிவிட்ட அந்த மகனை ஓர் அற்புதமான ஜெபத்துடன் ஆசீர்வதித்தார்.

யாக்கோபு தந்தையின் கூடாரத்தை விட்டு வெளியேறிய மறுகணம், ஏசா உள்ளை நுழைந்தான். அவன் கரத்தில் சுடச்சுட, சமைத்த மான் கறி.

""தந்தையே தாங்கள் விரும்பிக் கேட்டதைக் கொண்டு வந்திருக்கிறேன்..'' என்று அதை அவரிடம் நீட்ட, அவருக்கு அதிர்ச்சி!

""சற்றுமுன் நான் சாப்பிட்ட மாமிசத்தைக் கொண்டு வந்தது யார்? யாக்கோபா? அவனை நான் ஆசீர்வதித்து அவனுக்கு சகல உரிமைகளையும் வழங்கிவிட்டேனே. கொடுத்த ஆசீர்வாதத்தை திரும்பப் பெற முடியாதேப்பா..'' என்று கலங்கினார் ஏசாவின் அப்பா.

ஏசா கதறி அழுதான். ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன் கூழுக்காக தன் வாரிசு உரிமையை தம்பிக்கு விற்றிருந்தது அவன் நினைவில் இல்லை.

தந்தையை ஏமாற்றி தன் உரிமைகளையும் தனக்குச் சேரவேண்டிய ஆசீர்வாதத்தையும் பறித்துக் கொண்ட யாக்கோபை தந்தையின் மரணத்துக்குப் பிறகு, கொன்றுவிடத் தீர்மானித்தான் ஏசா.

அதைத் தெரிந்து கொண்ட ரெபெக்காள் யாக்கோபை வெளியூரில் இருக்கும் தன் சகோதரன் வீட்டுக்கு அனுப்பிவிட்டாள்.

தாய்மாமன் வீட்டுக்கு வந்த யாக்கோபு அங்கே பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து அவருடைய இரண்டு மகள்களையும் மணந்தான். அங்கிருந்து மனைவிகளோடும் சகல சொத்து சுகங்களோடும் மறுபடியும் அப்பாவின் கானான் தேசத்துக்குப் புறப்பட்டான்.

அதேசமயம், அவனை ஒழித்துக்கட்ட அண்ணன் ஏசா நானூறு ஆட்களுடன் எதிரே வந்து கொண்டிருந்தான்.

அண்ணனைச் சமாதானப்படுத்த தான் சேர்த்த செல்வங்களின் பெரும்பகுதியை அவனுக்கு வெகுமதியாகக் கொடுத்துவிடத் தீர்மானித்தான் யாக்கோபு. ஆனால் தம்பியையும் அவன் குடும்பத்தாரையும் பார்த்த அண்ணன் ஏசா மனம் மாறி வெகுமதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்தான். அண்ணனும் தம்பியும் கட்டித் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

தேவனுடைய ஆசீர்வாதத்தையும் யாக்கோபு பெற்றிருந்ததால் தேவதூதனால் கூட யாக்கோபை ஜெயிக்கமுடியவில்லை. அதனால் யாக்கோபு என்ற அவனுடைய பெயர் இஸ்ரவேல் என்று மாறியது. யாக்கோபு என்றால் ஏமாற்றுக்காரன் என்று அர்த்தம். இஸ்ரவேல் என்றால் தேவனோடிருக்கும் இளவரசன் என்று அர்த்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com