

என் பெயர் மணி. எங்கள் பக்கத்து வீட்டு வேலியை ஒட்டிய தெரு ஓரமாக வளர்ந்திருந்தது அந்தத் தூதுவளைச் செடி! பயிராடமலே அது வளர்ந்திருந்தது! இயற்கையே முள் என்ற பாதுகாப்பைக் கொடுத்திருப்பதால் ஆடுமாடுகளிடமிருந்து சுலபமாக தப்பித்து வளர்ந்து செழிக்க முடிந்தது! அதன் மருத்துவ குணங்கள் எல்லோருக்கும் தெரியாது! அது என்ன செடி என்றே பலருக்குத் தெரியாது! தெரிந்தவர்களும் அதை சுலபமாகப் பறித்துவிட முடியாது. கையில் முள் குத்தும்! கத்தரிக்கோலால் இலையை மட்டும் கத்தரித்து எடுக்கலாம். அல்லது கிளையாக வெட்டி வீட்டுக்கு எடுத்துச் சென்று கவனமாக இலையை ஆய்ந்துவிட்டு, பின்னர் அந்தக் கீரையை கூட்டாகவோ, துவையலாகவோ செய்து சாப்பிடலாம். கபத்திற்கு இருமலுக்கு நல்லது.
இலைகள் என்னைப் பறி, பறி என்றது! கத்தரிக்கோலையும் முறத்தையும் எடுத்துக்கொண்டு வந்தேன். மெதுவாக பறிக்க ஆரம்பித்தேன். கணிசமான அளவு முறத்தில் பறித்துவிட்டேன்.
தற்செயலாக அந்த வீட்டுக்கார அம்மாள் என்னைப் பார்த்தாள்.
""டேய் மணி அங்கே என்ன செய்யறே?''
""தூதுவளை இலை பறிக்கிறேன் ''
""இதைப் போய் ஏன் பறிச்சுக்கிட்டு இருக்கே?''
""துவையல் அரைக்கலாம்...,கூட்டு செய்யலாம்...,உடம்புக்கு ரொம்ப நல்லது''
""அப்படியா? எனக்கு இவ்வளவு நாளா தெரியாதே...,அப்ப நீ அதை எனக்குக் கொடுத்துடு...,இன்னொரு நாள் நீ பறிச்சுக்க''
""நான் ஒரு மணி நேரமா கஷ்டப்பட்டுப் பறிச்சிருக்கேனே''
""அது சரி, ஆனா செடி எங்க வீட்டு வேலி ஓரமாதானே முளைச்சிருக்கு''
""ஆனா நான் கஷ்டப்பட்டுப் பறிச்சிருக்கேனே''
""அப்ப தரமாட்டே?''
""இன்னோரு நாள் கண்டிப்பா பறிச்சுத் தரேங்க'' என்று கூறிவிட்டு வீடு திரும்பிவிட்டேன்.
தான் கேட்டும் கொடுக்காத கோபம் வீட்டுக்கார அம்மாளுக்கு! நம்ம வீட்டுச் செடியில் பறிச்சுட்டு நமக்கே தரமாட்டேன்னா சொல்றே? கோபத்துடன் வேலைக்காரனை அழைத்தாள்!
""என்னம்மா''
""அந்த வேலியில இருக்கிற தூதுவளைச் செடியை வேரோடு பிடிங்கிப் போடு. பிடுங்க வரலேன்னா மண்வெட்டியால வெட்டிப் போட்டுடு''
""அதை ஏம்மா வெட்டணும்? இருந்துட்டுப் போகட்டுமே...,நமக்கே என்னிக்காவது ஒரு நாள் உபயோகப்படுமே''
""வெட்டுன்னா வெட்டு அவ்வளவுதான்''
எஜமானியம்மாள் பேச்சை மீற முடியாத வேலைக்காரன் அந்தச் செடியை வேரோடு வெட்டி எறிந்தான்.
அந்த அம்மா மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் போனார்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அழுகையாக வந்தது! நான் இலை பறிக்கப் போய் அந்தச் செடியின் ஆயுளே முடிந்து போய்விட்டதே! இலையைக் கேட்டபோது மறுக்காமல் கொடுத்திருந்தால் இந்தச் செடி வெட்டுப்படாமல் போயிருக்கும். என்னால் இந்தச் செடிக்கு இப்படி நேர்ந்து விட்டது. என்னால் வருந்துவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடிய வில்லை!
அன்று சமைத்த அந்தத் தூதுவளை அவனுக்குக் கசந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
சுமார் பதினைந்து தினங்கள் சென்றன. நான் அந்த வேலியோரம் தூதுவளைச் செடி இருந்த இடத்தைப் பார்த்தேன். பழங்கள் கீழே விழுந்து அந்த விதைகளிருந்து அந்த இடத்தில் ஏழெட்டுக் குட்டிக் குட்டி தூதுவளைச் செடிகள் முளைத்திருந்தது! பெரிதும் மகிழ்ந்தேன். நிச்சயம் இதுவும் பெரிதாக வளர்ந்து பூக்கும்! காய்க்கும்! அப்பொழுது நிச்சயம் அந்தக் கீரையைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து அந்தக் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.