பாசமறுத்த பெருந்தலைவர்! காமராஜர் பிறந்த தினம் ஜூலை-15

சிறு வயது முதலே பொதுக் கூட்டங்களுக்குப் போவதில் ஆர்வம் காட்டினார்.  16 வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸின் முழு ஊழியர் ஆனார்.
பாசமறுத்த பெருந்தலைவர்! காமராஜர் பிறந்த தினம் ஜூலை-15
Updated on
3 min read

அன்னை சிவகாமி அம்மையார் மரணப் படுக்கையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துத் தலைவர் காமராசர் சென்னையில் இருந்து 13.11.1968 அன்று விமானம் மூலம் மதுரை வந்து காரில் விருதுநகர் பயணமானார். பெற்ற தாய் சாவின் பிடியிலே சிக்கித் தவிக்கும் அந்த நிலையிலும் அவரிடம் எவ்வித முகமாற்றமும் காணப்படவில்லை. உடன் பயணம் செய்த என்னிடம் அரசியல் பிரச்னைகள் குறித்துப் பேசிக் கொண்டே வருகிறார். எவ்விதப் பரபரப்போ பதற்றமோ இல்லாமல் இயல்பாக அவர் பேசிக் கொண்டே வந்தது கண்டு அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தேன்.

விருதுநகரில் தலைவர் வீட்டருகே பெருங்கூட்டம். எப்போதும் மக்கள் ஆரவாரமாகத் தலைவரை வரவேற்பார்கள். ஆனால் அன்று அமைதியாக வழிவிட்டனர். எங்கும் அமைதி நிலவிற்று. அன்னை சிவகாமி அம்மையாரின் உடல்நிலை அனைவரையும் அமைதி காக்கச் செய்தது.

வீட்டினுள் நுழைந்து தன் தாயார் அருகே தலைவர் அமருகிறார். மயங்கிய நிலையில் அன்னை இருக்கிறார். அருகே தலைவரின் சகோதரி, " அம்மா அண்ணன் வந்திருக்கிறார்'' எனக் கூவுகிறார்.

திடுக்கிட்டு விழித்த அந்தத் தாயின் விழிகளில் ஒளி பரவுகிறது. தனது அருமருந்தன்ன புதல்வனைப் பாசமுடன் பார்க்கிறது. மறுகணம் அணை உடைந்த வெள்ளமென விழிகளில் நீர் பெருகியோடுகிறது.

"தன் தவப்புதல்வனைப் பார்ப்பது இதுவே இறுதி  முறை' என்பது அந்த அன்பு அன்னைக்குத் தெரிகிறது.

"தாயைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவை' என்பது அந்த தனயனுக்கும் புரிகிறது. நெஞ்சை உருகச் செய்யும் இந்தக் காட்சியினைப் பார்த்தவுடன் சுற்றிலும் நின்றவர்களின் கண்கள் குளமாயின.

ஆனால் தலைவரோ எவ்விதச் சலனமும் இன்றி அமர்ந்திருந்தார். அருகே நின்ற சகோதரியிடமும் மற்றவர்களிடமும் மருந்து, உணவு ஆகியவை பற்றி இரண்டொரு வார்த்தை விசாரிக்கிறார். 

ஆனால் அன்னையின் உள்ளம் அதிலே செல்லவில்லை. ஏதோ சொல்ல அவரது உதடுகள் துடிக்கின்றன. தலைவர் அதைக் கவனிக்கவில்லை.  அவசர அவசரமாகப் புறப்பட முயலுகிறார்.  வந்து ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. 

"அப்போ நான் வரட்டுமா? உடம்பைப் பார்த்துக் கொள்' எனக் கூறிவிட்டு எழுகிறார். 

"தம்பி, ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ...''  தாயின் வாயிலிருந்து குழறிக் குழறி வார்த்தைகள் வெளிவருகின்றன. 

"வேண்டாம். நான் மதுரையில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறிவிட்டு எழுந்துவிடுகிறார் தலைவர்.
 அன்புத் தாயின் விழிகள் மறுபடியும் குளமாகின்றன. அதைக் கவனித்த தலைவர் என்ன நினைத்தாரோ?
 "சரி எடுத்து வை''  என்கிறார்.

மறுபடியும் அன்னை குழறி குழறிப் பேசுகிறார்.

 "அடுக்களையில் உட்கார்ந்து சாப்பிடப்பா'' என்கிறார்.

தனது அன்புக் கட்டளையை மகன் ஏற்பாரோ ஏற்க மாட்டாரோ என்னும் ஏக்கம் ததும்ப மகனைப் பார்க்கிறார் தாய். 

மரணப்படுக்கையில் இருக்கும் தாயின் இறுதி ஆசை இது. இனி அவர் தன்னிடம் எதையும் கேட்க மாட்டார். கேட்க முடியாத தூரத்திற்குப் பிரிந்துவிடுவார் என்பதை தலைவர் உணர்ந்தாரோ என்னவோ தயக்கத்துடன் அந்த வேண்டுகோளை ஏற்று அடுக்களையில் நுழைகிறார். 

சகோதரியும், சகோதரியின் புதல்விகளும் பரபரப்புடன் பரிமாறினார்கள். பெயருக்கு எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு அவசர அவசரமாக வெளியே வந்தார். தலைவர் ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை. 

"அப்போ நான் வரட்டுமா' எனக் கரங் கூப்பினார். கடைசிமுறையாக மகனைப் பார்க்கிறோம் என்பதையும் மறந்து மகன் தன் வீட்டில் சாப்பிட்ட மகிழ்ச்சி முகத்தில் பரவ, "மகராசனாய் போய் வா'  என வாழ்த்துகிறார் அன்னை. கார் விருதுநகர் எல்லையைத் தாண்டுகிறது.  ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் தலைவர்.

தயங்கித் தயங்கி அவரிடம் ஒன்று கேட்டேன். " வீட்டில் நீங்கள் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?'' என்றேன்.

திடும் எனப் பிறந்த எனது இந்தக் கேள்வி,  தலைவரைப் புன்னகைக்க வைத்தது. " என்ன ஒரு 25 அல்லது 30 வருடம் ஆகியிருக்கும்'' என்றார். 

காரில் இருந்த அனைவரும் அளவு கடந்த திகைப்பில் மூழ்கினோம். அப்படியிருந்துமா சாப்பிடுவதற்குத் தயக்கம் காட்டினார்?
மரணப் படுக்கையில் இருந்த தனது தாயின் கடைசி விருப்பம், அதுவும் மிகச் சாதாரண விருப்பம். அதை நிறைவேற்றக் கூட  யோசித்தாரோ? 
பாசமறுத்தல் என்று சொல்கிறார்களே அதை அன்றைக்குத்தான் பார்த்தேன். முற்றும் துறந்த முனிவருக்குக் கூட இந்த மனப்பக்குவம் வருமோ? என்னவோ?

தோளில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு என்றைக்குத் தேசத் தொண்டிற்குப் புறப்பட்டாரோ, அன்றைக்கே வீட்டை மறுத்தார். பெற்ற அன்னையைத் துறந்தார். 

பழ.நெடுமாறன் எழுதிய "பெருந்தலைவரின் நிழலில்'  நூலில் இருந்து...

உள் நாட்டில் இருக்குது பல நுணுக்கங்கள்!
முதலமைச்சராக இருந்த காமராஜரிடம், நகரைச் சீரமைக்கவும் நவீன குடியிருப்புகளை அமைக்கவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு அந்தந்த நாடுகளின் நகர் அமைப்பை அறியப் போவதாக கோப்புகளைத் தயார் செய்து காமராஜரின் அனுமதிக்கு அனுப்பிவைத்தார் அமைச்சர்.

காமராஜரோ அமைச்சரின் வெளிநாட்டுப் பயண அனுமதியை மறுத்ததோடு, நகர் அமைப்பு பற்றி அறிய வெளிநாடு போக விரும்பும் இவரை முதலில் நம்ம மதுரையைப் போய் பார்த்துவிட்டு வரச்சொல் என்று கூறிவிட்டார். 

மதுரையின் நகர் அமைப்பு அவ்வளவு பிரசித்தி பெற்றது என்பதையும், உள்நாட்டையே பார்க்காமல் வெளிநாட்டுப் பயணம் என்ன வேண்டிக்கிடக்கிறது? என்ற உண்மையையும் உணர்த்துவதாக காமராஜரின் இந்த செயல் அமைந்தது.  

அரசனும் ஆண்டிக்கும் விதிமுறை ஒன்றே!
ஒரு சமயம் சென்னை பொதுக்கூட்டம் ஒன்றிற்கு காமராஜர் சென்றுவிட்டு, இரவு காரில் திரும்புகையில் வால்டாக்ஸ் ரோடு கோடியில் சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டினாற்போல் ஒருவழிப்பாதையில் அவரது கார் டிரைவர் சாலை விதிகளை மீறி, வலப்புறம் திருப்ப முயன்றார். 

அதைக் கவனித்த காமராஜர், "ஏம்ப்பா... இப்படி திருப்புறே? வழக்கப்படி அந்தப் பக்கம் போய்விட்டு வாயேன்'' என கண்டிப்புடன் கூறினார்.  

காரில் உடன் இருந்தவர், "இரவு பத்து மணிக்குமேல் போக்கு வரத்து குறைவு. அதனால் தெருக்கோடி வரை போய் சுற்றி வர நிர்பந்தம் கிடையாது'' என காமராஜரிடம் சமாதானம் கூறினார்.   

"இதே பழக்கம்தான் பகலிலேயும் வரும். நம்ம காரே இப்படி முறை தவறிப்போனால், அதைப் பார்த்து மற்றவர்களுக்கு அதிகமாக செய்யத் தோன்றாதா?'' என்று கடுமையாகக் கூறினார். 

விதிமுறைகளுக்கு இரவு பகல், அரசன் ஆண்டி  என்று கிடையாது. எந்நேரமும் அதனைக் கடைப்பிடித்தால்தான் ஒழுக்கம் வளரும் என்பதை இச்செய்கையின் வாயிலாக உணர்த்தினார் பெருந்தலைவர் காமராஜர்.

ஏழைப் பங்காளர் காமராஜர்!
ஒருமுறை திருச்சி மாவட்டத்தில் பிரபலமான ஒரு பெரிய மனிதர் வீட்டில் காமராஜருக்கு விருந்து ஏற்பாடாகி இருந்தது.  அந்தப் பெரிய மனிதர் பெரும் பணக்காரர் என்பதால் ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்தன. வீடு, முற்றம், தெரு எங்கும் தோரணங்கள். காமராஜர் அந்த வீட்டுக்கு விருந்துண்ண வருகிறார் என்பதறிந்த அப்பகுதி ஏழை மக்கள் பெருந் திரளாகக் கூடிவிட்டார்கள். 

காமராஜர் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அந்த வீட்டுக்கு வந்தார். ஆடம்பர மேடை, தோரணம், உணவு வகைகள் ஆகியவற்றைக் கண்ட காமராஜர் முகம் சுளித்தார். அவ்வீட்டை சுற்றிலும் நின்ற ஏழை மக்களின் பெரும் கூட்டத்தையும் கண்டார்.  

விருந்து ஏற்பாடு செய்திருந்த அந்தப் பெரிய மனிதரிடம், "இதெல்லாம்... என்ன கூத்து ஐயா..? கிராமத்தில் அவனவன் ஒரு வேளைக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கிறான். இங்க இவ்வளவு ஆடம்பரம் என்ன வேண்டிக்கிடக்கு..?'' என்று சத்தம் போட்டார். 

காமராஜர் இப்படி ஏழைகளைப் பற்றிச் சிந்தித்ததால்தான் எல்லோராலும் "ஏழைப் பங்காளர்' என்று அவர் புகழப்பட்டார். 
-கே.அருணாச்சலம்,தென்காசி

* 1903-ஆம் வருடம் ஜூலை மாதம் 15-ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். முதலில் வைத்த பெயர் காமாஷி. தாய் பாசத்தில் "ராஜா' என்று அழைத்ததினால் காமாக்ஷி - "காமராஜ்' ஆகிவிட்டது. காமராஜ் தமக்கு 6 வயது இருக்கும்போது தந்தையை இழந்தார். 

* சிறு வயது முதலே பொதுக் கூட்டங்களுக்குப் போவதில் ஆர்வம் காட்டினார்.  16 வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸின் முழு ஊழியர் ஆனார்.

* ராஜாஜி தலைமையில், வேதாரண்யத்தில் நடந்த உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்குக் கொண்டு கைதாகிச் சிறைக்குச் சென்றார். இது போலவே பல போராட்டங்களில் கலந்து கொண்டு மொத்தம் ஆறு முறை சிறைக்கு அனுப்பப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையிலேயே கழித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com