பாரதத்தை உயர்த்தும் பரதம்!

இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்களின் முதன்மையாகத் திகழ்வது இந்நாட்டு இசையும் பரதமும் தான்.
பாரதத்தை உயர்த்தும் பரதம்!
Updated on
3 min read

இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்களின் முதன்மையாகத் திகழ்வது இந்நாட்டு இசையும் பரதமும் தான்.
பெரும்பாலான கலைகளை கற்பிக்கும் முறை இப்போது மாறிவிட்டாலும் இசையும், பரதநாட்டியமும் இன்னமும் கூட குருவின் நேரடிப் பார்வையில் தான் சொல்லித் தரப்படுகிறது. அதனாலேயே அவை இன்னும் பாரம்பரியம் வழுவாத, நம் நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடிப்பவையாக திகழ்கின்றன. அத்தகைய நிலைக்குப் பொருத்தமாக, தன்னை தானே செதுக்கிக் கொண்டு, தன் கலையையே வாழ்க்கையாக சுவாசித்து, கலையின் பெருமையைத் தன் மூலமாக உலகுக்கு உணர்த்துவதுடன், தன் மாணவர்கள் மூலமாக அடுத்தடுத்த தலைமுறைக்கும் சிறப்பாகக் கொண்டு செல்வதுடன், நாட்டிற்கும் பெருமை தேடித் தரும் ஆசிரியர்களாக "பரத கலாஞ்சலி' என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி, 50 ஆண்டுகளாக நடத்தி வரும் தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் தம்பதியும் சிறப்பாக விளங்குகின்றனர். பத்மபூஷண், சங்கீத நாடக அகாதெமி விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி ஆகியவை இவரது விருதுப் பட்டியலில் முதன்மையானவை.
இருவருமே, ருக்மிணி அருண்டேல் உருவாக்கிய கலாúக்ஷத்ராவில் நாட்டியம் பயின்றவர்கள். இவர்களது நாட்டியப்பள்ளியின் 50 ஆண்டுகள் நிறையும் இந்த அற்புதத் தருணத்தை, உலகெங்கிலும் உள்ள இவர்களது மாணவ - மாணவிகள், தமது ஆசான்களைப் போற்றும் வகையில் அக்டோபர் 2-ஆம் தேதி ஒரு நூதனமான நடன நிகழ்ச்சியை சென்னையில் இவருக்கு சமர்ப்பிக்க உள்ளனர். தனஞ்செயன் தம்பதியரின் இந்த நீண்ட நடனப் பயண அனுபவங்களையும், சாதனைகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்:
உங்களுடைய நாட்டிய நாடகங்களில், மனதுக்கு நெருங்கியது எது? 
எனக்கு என் நாட்டின் மீது மிகுந்த பற்று உண்டு. இங்கு உள்ளது போல் கலையும் கலாசாரமும் எங்குமே இல்லை. பல மாநிலங்களாக நாம் பிரிந்து இருப்பதாகத் தோன்றினாலும், கலை நம்மை ஒன்று சேர்க்கின்றது. இதை மனதில் வைத்துக் கொண்டு "ஐக்கிய பாரதம்' என்ற நாட்டிய நாடகம் அரங்கேற்றினேன். இதில் அனைத்து மாநிலங்களில் உள்ள சாஸ்திரீய மற்றும் கிராமிய நடனம் ஆகியவற்றைத் தொகுத்து, ஓர் அழகான மாலையாகத் தொடுத்து பாரதத் தாய்க்குப் படைத்தது எனக்கு மிகவும் நிறைவை தந்தது. 1970 - களில் இந்த நாட்டிய நாடகம் மூவாயிரம் முறை மேடையேற்றப் பட்டு சிறந்த வரவேற்பு பெற்றது. என் தந்தை சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டவர். அதனால் தானோ என்னவோ, எனக்கு சிறுவயது முதலே பாரதத்தின் மீது மிகுந்த பற்று உண்டு. இந்தியா, சீனா போர் நடந்த சமயத்தில், நமது ஜவான்களுக்கு முன் இந்நாட்டியம் நடத்தினேன். அவர்கள் மிகவும் ரசித்த நாட்டியமாக இது அமைந்தது. இதன் மூலம் நிறைய பொருள் சேர்த்து அவர்களுக்கு நிதியுதவி செய்ய முடிந்தது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியளித்தது.
மற்ற நாடகங்களில் உங்கள் மனதைக் கவர்ந்தது?
1980, 90- களில் நிறைய நாடகங்கள் இயற்றி அரங்கேற்றியிருக்கிறோம். மிகவும் வரவேற்கப்பட்டவை பற்றி மட்டும் சொல்கிறோம். தியாகராஜரின் கீர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அவரது வாழ்க்கை சரித்திரத்தை சித்தரிக்கும் "தியாகராஜ வைபவம்' அமோக வரவேற்பைப் பெற்றது. அதேபோன்று "நந்தனார் சரித்திரம்' மிகவும் பிரபலமான ஒன்று "கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற திரைப்படத்தில் எங்கள் நாடகத்தின் ஒரு பகுதி அப்படியே இடம் பெற்றது.
ஏழ்மையையும் ஜாதியையும் கேவலப்படுத்தும் ஒருவர், இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு மனம் மாறுவதாக படத்தில் காட்டியிருந்தார்கள். "தெய்வ காருண்யம்' என்ற நாட்டிய நாடகமும் நூதனமானது. இயற்கையின் ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த நாடகம் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. இப்படி நிறைய உண்டு.
நவீன காலத்திற்கேற்ப கரு எடுத்து செய்திருக்கிறீர்களா?
"ஏகாந்த சீதா' என்ற நாட்டிய நாடகத்தில் சீதை, ஜான்ஸி ராணி போன்ற பெண்கள் தனியாகப் போராடி சாதித்த பெருமை பேசப்பட்டது. தவிர, போதை மருந்துகளின் விளைவுகள் குறித்த ஒரு நிகழ்ச்சி, "வந்தே மாதரம்' என்னும் அரசியல் அவலங்களை மெல்லிய நகைச்சுவை இழையோட வெளிப்படுத்திய ஒரு நாட்டிய நாடகம். இப்படிப் பல சொல்லலாம். "ஜங்கிள் புக்' என்ற புத்தகத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில், அந்த நாட்டு கலைஞர்களுடன் மேற்கத்திய பாலே நடனத்தையும் இணைத்து எங்கள் மாணவர்களுடன் நாங்கள் அரங்கேற்றிய நாடகம் 90 முறை மேடையேறியது. அந்தநாட்டில் சிறந்த நாட்டிய நாடகத்திற்கான விருதையும் 1997-இல் எங்களுக்குப் பெற்றுத் தந்தது.
நீங்கள் பொது விஷயங்களிலும் ஈடுபடுவதுண்டா?
நியாயமான விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டால் உடனே அதன் விவரங்களை முழுமையாக ஆராய்ந்து, பத்திரிகைக்கு கடிதம் எழுதி விடுவேன். சமூக அக்கறை கொண்டு பத்திரிகைகளுக்கு நான் எழுதிய கடிதங்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அதுபோன்று, கலைஞர்கள் அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களுக்கு ரயில் பயணச் சீட்டில் சலுகை தர வேண்டும் என்று போராடி வெற்றியும் பெற்றேன். ரயிலில் புகைப்பிடித்தல் கூடாது என்று பலமுறை எழுதி வலியுறுத்தி அதையும் நடைமுறைப் படுத்தினேன்.
துளசி பத்ரிநாத் என்ற இவரது மாணவி இவரைப் பற்றி "Master of Arts' என்று புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். இது மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 2013- ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த முதல் பத்து புத்தகங்களில் ஒன்றாக இது அறிவிக்கப்பட்டது. 
எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இருவரும் உடலமைப்பை எப்படி பேணுகிறீர்கள்? 
நாட்டியப் பயிற்சி நாள் தவறாமல் செய்வோம். தலை முதல் கால் வரை, அனைத்திற்கும் பயிற்சி கிடைத்து விடுகிறதே நமது பரத நாட்டியத்தில்! இந்த உன்னதமான கலை, மற்ற நாடுகளில் உள்ளது போல் வெறும் கை, கால் உடல் அசைவுகளுடன் நின்று விடுவதில்லை. இதற்கென உயர்ந்த இசை உண்டு. பாடப்படும் பொருள் பெரும்பாலும் இறைவனைப் பற்றி இருப்பதால் உடலுக்கு மட்டுமின்றி மன ஆரோக்கியமும் கிடைக்கிறது. நமது கலை நம்மை நெறிப்படுத்தக் கூடியது.
வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அங்குள்ள மாணவர்கள் பற்றி?
ஏறக்குறைய உலக வரைப்படத்திலுள்ள பெரும்பாலான நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியாவில் சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிரமம் உண்டு. அதில் 25 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் 5 வாரங்கள் தங்கி நாட்டியத்திற்கான Work shop  நடத்தியிருக்கிறோம். 
அருகிலுள்ள நகரங்களில் நாட்டிய நிகழ்ச்சியும் மேடையேற்றுவோம். 
பாரதத்தின் பெருமை மிக்க கலையான பரதக் கலையின் மகத்துவத்தை நல்ல முறையில், பெருமைப்படும் விதத்தில் பல்வேறு நாடுகளில் பரவச் செய்தோம். அங்குள்ள மக்கள் எங்கள் நடன நிகழ்ச்சிகள் மூலமாக பரதக்கலையின் மேன்மையை உணர்ந்தனர். அதை எங்களிடமும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இப்போது உலகின் பல பாகங்களில் உள்ள மாணவர்கள், தங்கள் ஈடுபாட்டைத் தெரிவிக்க, இந்த 50 -ஆவது ஆண்டு நிறைவு விழாவை நடத்த வருகிறார்கள் என்பது ஒரு குருவாக, ஆசனாக எங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது'' என்றார். 
- சந்திரிகா ராஜாராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com