தொன்மை சிறப்புமிக்க திருவாரூர்

தமிழகத் திருக்கோயில்களில் வரலாற்றுச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், வழிபாட்டுச் சிறப்பும் பெற்ற திருக்கோயிலாக திருவாரூர் திருக்கோயில் விளங்குகிறது.
தொன்மை சிறப்புமிக்க திருவாரூர்
Updated on
3 min read

தமிழகத் திருக்கோயில்களில் வரலாற்றுச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், வழிபாட்டுச் சிறப்பும் பெற்ற திருக்கோயிலாக திருவாரூர் திருக்கோயில் விளங்குகிறது. சைவ சமயத்தில் "கோயில்' என்றால் சிதம்பரம் கோயிலையும் "பெரிய கோயில்' என்றால் திருவாரூரையுமே குறிக்கும்.

திருவாரூர் - தலச்சிறப்பு: 

பஞ்ச பூதத்தலங்களில் பிரிதிவித் (மண்) தலமாக இது விளங்குகிறது. "பிறக்க முக்தித் தரும் பெருமை' பெற்றது இத்திருத்தலம். சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் போற்றிப் பாடியுள்னர். சுந்தரர் பெருமானின் அருள் வாழ்க்கையோடு இணைந்த தலம் இது. சுந்தரருக்காக இறைவனே பரவை நாச்சியாரிடம் தூது போய் நடந்து வந்த திருவடி மணங்கமழும் திருவீதி உடைய தலம்.

சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்திற்கு மூல நூலான "திருத்தொண்டத் தொகையை' இறைவனே அடி எடுத்துக் கொடுத்த சிறப்பு பெற்றது. "திருவாரூரில் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன்' என்று இத்தலத்தைப் போற்றி பாடினார் சுந்தரர் பெருமான்! மேலும் சேரமான் பெருமாள் நாயனார், சுழற்சிங்க நாயனார், செருத்துணை நாயனார், சோமாசி மாற நாயனார், தண்டியடிகள் நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நமி நந்தி அடிகள், விறன்மிண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் வரலாற்றுடன் தொடர்பு உடையது இத்தலம். சப்தவிடங்கத் தலங்களில் திருவாரூரும் ஒன்று. ஆரூர் தியாகராஜப்பெருமான் ஆடும் "அஜபாநடனம்' இத்தலத்தில் சிறப்பானது.

ஆரூரில் இசை வழிபாடு: 

திருவாரூர் திருக்கோயிலில் தியாகேசப் பெருமானுக்கு நடைபெறும் வழிபாட்டின் போதும், அஜபா நடனம் நிகழ்ச்சி நடைபெறும் போதும் "குடமுழா' என்கிற  பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படும் சிறப்பான தலம் என்ற பெருமை வாய்ந்தது. இது போன்ற இசைக்கருவி திருத்துறைப்பூண்டி திருக்கோயிலிலும் வழிபாட்டில் உள்ளது.

ஆரூர் கோயிலில் இறைவன் வீதி உலா வரும் பொழுது பாரி நாயனம் (நாதசுவரம்) என்ற இசைக்கருவி வாசிக்கப்படுவது சிறப்பு. இக்கோயிலில் சுவாமி புறப்பாட்டின் பொழுது மத்தளத்தை தலைக்கு மேலே வைத்துக் கொண்டு வாசிப்பது “"பூத நிருத்தம்'” என வழங்கப்படுகிறது. இது இத்திருக்கோயிலுக்கே உரிய தனி மரபாக விளங்குகிறது. ஆரூர் பெருமான் தேரில் பவனி வரும்பொழுது “"கொடு கொட்டி'”  என்ற இசைக்கருவி வாசிக்கப்படுவது சிறப்பானதாக விளங்குகிறது. மேலும் இக்கோயிலில் 18 வகையான இசைக்கருவிகள் இருந்து இசைவழிபாடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

சங்கீத மும்மூர்த்திகள்: 

கர்நாடக இசையை முறையாக வகுத்த சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் அவதரித்த சிறப்புப் பெற்ற தலமாகவும் ஆரூர் விளங்குகிறது.

ஸ்ரீபுரம்: 

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புடையது இத்தலம். இத்தலம் "ஸ்ரீபுரம்' எனவும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீவித்யையின் தத்துவத்தை விளக்குவதாக விசேட யோக நிலையில் இருந்து கொண்டு கருணை பொழியும் கமலாம்பிகை அம்மன் சந்நிதி சாக்த (சக்தி) வழிபாட்டிற்கு உயர்ந்த தலமாக விளங்குகிறது.

மனுநீதி சோழன்: 

கன்றை இழந்த பசுவின் துயர் தீர்க்கத் தன் அருமை மைந்தனையே தேர்க்காலில் இட்டு அறத்தை நிலை நிறுத்தி மாமன்னன் மனுநீதிச் சோழன் ஆண்ட ஊர் திருவாரூர் ஆகும்.  மேலும் மூவருலா, பெரியபுராணம் போன்ற பல இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறது.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சகஜீ (1684 - 1714) ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட "தியாகேசர் குறவஞ்சி' என்ற இலக்கியத்தில், மனுநீதி சோழன் வரலாறு கூறப்பட்டுள்ளது. வள்ளலார் பெருமானான இராமலிங்க அடிகளார் தாம் அருளிய "திரு அருட்பாவில் “மனு நெறி கண்ட வாசகம்'” என்னும் பகுதியிலும் இவ்வரலாறு குறிப்பிடப்படுவது சிறப்பாகும். இக்கோயிலில் இரண்டாம் திருச்சுற்றில் மதில் சுவரில் காணப்படும் விக்கிரமச் சோழன் காலக் கல்வெட்டில் மனுநீதி சோழன் வரலாறு குறிப்பிடப்படுகிறது. மேலும் இவ்வரலாறு இக்கோயிலில் தேர் மண்டபமாக, சிற்பக்களஞ்சியமாக, கல் கூறும் காவியமாகத் திகழ்கிறது.

மேலும் திரிபுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மப்பேடு மற்றும் செய்யூர் திருக்கோயில்களில் தொடர் சிற்ப வடிவங்களாகக் காட்சி அளிப்பதைக் கண்டு மகிழலாம்.

இக்கோயிலின் சிறப்பை "திருவாரூர் புராணம்', "திருவாரூர் உலா', "திருவாரூர் கோவை' போன்ற பல தமிழ் இலக்கியங்களிலும், தெலுங்கு பிரபந்தங்களும், மராத்திய மொழி இலக்கியங்களிலும் காணலாம்.

இக்கோயிலில் காணப்படும் 90-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் ஆதித்த சோழன் காலம் தொடங்கி மராத்திய மன்னர்கள் காலம் வரையிலான வரலாற்று நிகழ்வுகளையும், திருக்கோயில் சிறப்பாகப் போற்றி பராமரிக்கப்பட்டதையும் எடுத்துரைப்பதைக் காணலாம்.

திருவாரூர் தேர் அழகு: 

இக்கோயில் தேர் “"ஆழித்தேர்'” என அழைக்கப்படுகிறது. மேலும் திருவாரூர் தியாகேசப்பெருமான் "ஆழித்தேர் வித்தகர்'”  என்று அழைத்துப் போற்றப்படுகிறார். திருவாரூர் தேர் அழகு எனச் சிறப்பிக்கப்படும் இத்தேர்த் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. திருவாரூர் கோயில் தேர் தமிழகத் திருக்கோயில் தேர்களில் மிகவும் பெரியது. தேர்த் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

திருவாரூர் தேர் திருவிழா பற்றிய குறிப்புகள் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய மராத்திய ஆவணங்களில் காணப்படுகின்றன. தஞ்சைப் பெரிய கோயில், மன்னார்குடி, திருவலஞ்சுழி, திருவையாறு, திருவிடைமருதூர் போன்ற திருத்தலங்களில் நடைபெற்ற தேர்த்திருவிழாக்கள் பற்றிய செய்திகளை ஆவணங்களில் காணலாம். திருவாரூர்த் தேர்த் திருவிழாவில் பங்கேற்று தேர் இழுக்க 5000 பேர் அனுப்பப்பட்டதாக ஒரு மராத்திய ஆவணம் வெளிப்படுத்துகிறது. 

திருவீழிமிழலைக் கோயிலில் காணப்படும் மூன்றாம் இராசேந்திர சோழன் கல்வெட்டில் “"ஆழித்தேர் வித்தகப்பட்டன்'” என்ற ஒருவரின் பெயர் காணப்படுகிறது. மேலும் கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூர் கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகளில் அக்கோயில் கணக்குகளைப் பராமரித்த ஆண்டார்களில் ஒருவரின் பெயர் “ஆழித்தேர் வித்தகன்” தில்லை நாயகன் என்று குறிப்பிடப்படுவது சிறப்பானது. திருவாரூர் ஆழித்தேர் சிறப்பின் மீது கொண்ட ஈடுபாட்டினால் அப்பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டிருப்பார்கள் எனக் கருத முடிகிறது.

திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும்.
சென்னை நகரில் மத்தியில் காணப்படும் வள்ளுவர் கோட்டத்தில் திருவாரூர் தேர் அமைப்பினைப் பின்பற்றி அமைந்திருக்கும் தேர் வடிவம், அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது.

நகரும் கோயில்: 

தமிழகத்திற்குப் பல திருக்கோயில்களில் நடைபெறும் தேர்த்திருவிழாக்கள் பெருமை சேர்க்கின்றன. தேர் கோயிலுக்கு அமைக்கப்பட வேண்டிய அனைத்து அங்கங்களும் அமைக்கப்பட்டு விளங்குவதால் "நகரும் கோயில்' என்றே அழைப்பர். தேர் செய்வது பற்றி மயமதம், மானசாரம் போன்ற சிற்ப நூல்களும், குமார தந்திரம் என்ற ஆகமும் எடுத்துக் கூறுகின்றன. கோயில்களில் தேர்கள் பராமரிக்கப்பட்டு திருவிழாக்கள் நடைபெற்று வந்ததைப் பல கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும் தேர் உருவம் பொறிக்கப்ட்டுள்ளதைக் காணமுடிகிறது. 

மதுரை திருமலை நாயக்க மன்னர் இவ்வாறு காசுகள் வெளியிட்டுள்ளார். பல திருக்கோயில்களின் கருவறை அமைப்பு தேர் போன்று யானை - குதிரை இழுத்து செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கோயில் “"கரக் கோயில்'” என அழைக்கப்படுகிறது. 

தேர்த்திருவிழா நாட்டில் அமைதியையும் செழிப்பையும் உண்டாக்கும் எனவும், தேரில் இறைவனைத் தரிசித்தால் மறுபிறவி கிடையாது எனவும் ஆகமங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த “ஆழித்தேர்த் திருவிழா” திருவாரூரில் நடைபெறும் தருணத்தில் “"அத்தன் ஆரூரைப்பத்தி மலர் தூவ முக்தியாகுமே'” என்ற திருஞானசம்பந்தர் வாக்கால் போற்றி வழிபட்டு நலமடைவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com