உ.வே.சா. பதிப்பில் ஜோதிடவியல் குறிப்புகள்

பதிப்புச் செம்மலாகப் போற்றப்படும் உ.வே.சாமிநாதையர், பல்வேறு இலக்கண இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார். அப்பதிப்பு நூல்களுள் சீவகசிந்தாமணியும் புறநானூறும் குறிப்பிடத்தக்கவை.
உ.வே.சா. பதிப்பில் ஜோதிடவியல் குறிப்புகள்
Updated on
2 min read

பதிப்புச் செம்மலாகப் போற்றப்படும் உ.வே.சாமிநாதையர், பல்வேறு இலக்கண இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார். அப்பதிப்பு நூல்களுள் சீவகசிந்தாமணியும் புறநானூறும் குறிப்பிடத்தக்கவை. உ.வே.சா. அவ்விரண்டு இலக்கியங்களில் பல்வேறு ஜோதிடவியல் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார். அப்பதிவுகளில் மூவியல், ஆடுகயல் என்னும் இரண்டு குறிப்புகளை மட்டும் சிந்திப்போம்.

÷ஜாதகம் (ஏர்ழ்ர்ள்ஸ்ரீர்ல்ங்) கணிக்கப் பயன்படும் கூறுகளுள் பிறந்த நேரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், அந்நேரம் ஒழுங்காகக் குறிக்கப்படவில்லையெனில் ஜாதகப் பலன்களைக் கூறுவதில் இடர்ப்பாடுண்டாகும். எனவே, அந்நேரத்தை எவ்வாறு துல்லியமாகக் குறிக்க வேண்டும் என்பதைச் சிந்தாமணி மூவியல் என்னும் சொல்லால் குறித்துள்ளது. கணியர் ஒன்று கூடிக் கனகமாலையின் பிறப்பைக் குறித்துச் ஜாதகம் கணித்தனர் என்பதை உணர்த்த வந்த திருத்தக்கதேவர் பின்வரும் பாடல் ஒன்றைக் குறித்துள்ளார்.

பூவியல் கோயில் கொண்ட

பொன்னா ளயை நங்கை

காவியங் கண்ணி வந்து

பிறத்தலுங் கணிகள் ஈண்டி

மூவியல் திரித லின்றிச்

சாதகம் முறையிற் செய்தார்

ஏவியல் சிலையி னாய்க்கே உரியளென்

றுரைப்ப நேர்ந்தான். (செ.1686)

மேற்பாடலில் குறிக்கப்பெற்ற மூவியல் திரிதலின்றி என்ற தொடர் ஆராயத் தக்கதாகும். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் மூவியல் என்பதற்கு உதயாரூடக் கவிப்பு என்பார். உ.வே.சாமிநாதையர் சிரோதயம், பூபதனம், தெரியுங்காலம் என்பார். இவற்றுள் சிரோதயம் என்பது குழந்தையின் சிரசு உதயத்தையும் (தாயின் உடம்பிலிருந்து குழந்தையின் தலை வெளிப்படுங்காலம்) பூபதனம் என்பது குழந்தை பூமியைத் தொடும் காலத்தையும் குறிக்கும். நச்சினார்க்கினியர் உதயாரூடக் கணிப்பின் மூலமும், உ.வே.சா., சிரோதயம், பூபதனம், தெரியுங்காலம் மூலமும் ஜாதகம் கணிக்க வேண்டும் என்கின்றனர்.

÷புறநானூற்றில், ஆடியற் அழற் குட்டத்து எனத் தொடங்கும் பாடல் (229) பங்குனித் திங்களில் நட்சத்திரம் விழுமாயின் மன்னவனுக்கு ஆகாது என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளது. இக்கருத்திற்கு அரண் செய்ய உ.வே.சா., பின்வருமாறு குறிப்புரை எழுதியுள்ளார்.

""பங்குனி மாதத்தில் நட்சத்திரம் வீழின்,

இராசபீடை என்றும் ஆடு கயறே டனுச்

சிங்கத் தெழுமீன் விழுமே லரசழிவாம்''

என்பது ஜோதிட நூலென்றும் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பில் அவ்வொரு அடியானது ஜோதிட நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது என்று குறித்திருப்பினும், எடுக்கப்பெற்ற நூலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

÷கூடலூர்கிழார் புறநானூற்றுப் பாடலில், பங்குனித் திங்களில் ஒரு மீன் விழுந்ததன் விளைவாகக் கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்துவிட்டான் என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை மேலும் வலியுறுத்த எண்ணிய உ.வே.சா., ""ஆடு கயல் தேள் தனுசு சிங்கம் எழுமீன் விழுமேல் அரசழிவாம்'' என்றொரு அடியைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவ்வொரு அடி எந்த ஜோதிட நூலிலிருந்து எடுக்கப்பெற்றது என்ற குறிப்பை அவர் குறிக்கவில்லை.

÷சித்திரை, பங்குனி, கார்த்திகை, மார்கழி, ஆவணி ஆகிய ஐந்து திங்களில் நட்சத்திரம் விழுமாயின் அரசனுக்கு அழிவுண்டாகும் என்னும் கருத்தை அவ்வொரு அடி குறிக்கிறது. குறிக்கப்பெற்ற ஐந்து திங்களைத் தவிர ஏனைய ஏழு திங்களில் நட்சத்திரம் விழுமாயின் உண்டாகும் விளைவுகளை அவ்விடத்தில் குறிக்கத் தேவையில்லை எனினும், அவ்விளைவுகளைத் தெரிந்து கொள்ளவும், அதன் வாயிலாகப் பாடலின் முழு வடிவத்தையும், பாடல் இடம்பெற்ற நூலின் பெயரையும் அறிய முயல்வது தொடர்பாக மேலும் ஆய்வு மேற்கொண்டபோது, "சோதிடகிரக சிந்தாமணி' என்னும் வருடாதி நூலில் மேற்குறித்த ஆடுகயல் எனத் தொடங்கும் பாடலின் முழுவடிவம் கிடைத்தது. ஆனால், அந்நூல் தொகுப்பு நூலாகையால் அப்பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என அறிய முடியவில்லை.

÷மேலும், "சூடாமணி உள்ளமுடையான்' என்னும் பெயரமைந்த ஜோதிட நூலில், உ.வே.சா. குறிப்பிட்டிருந்த ஆடுகயல் எனத் தொடங்கும் பாடல் (274) காணப்பட்டது. அப்பாடலும், வருடாதிநூலில் கிடைத்த பாடலும் ஒன்றேயாம். பாடல் வருமாறு:

""ஆடு, கயல், தேள்தனுசு, சிங்கம்,

எழுமீன் விழுமேல் அரசழிவாம்

கோடு மகரம் துலை அலவன்

கும்பம் அஃகம் குறைந்திடுமே

தேடு மிதுனம் மந்திரி சாம்

தெரிவையின் தாம்பிணி பெரிதாம்

ஓடும் இடபம் மழையில்லை உடுவீழ்

குறியயன்று உணர்ந்து உரையே''

(செய்யுள்-274)

÷உ.வே.சா., புறநானூற்றுப் பாடலுக்குச் சான்றாக ஜோதிடப் பாடலின் ஓர் அடியை குறித்திருந்தார். இவ்வாய்வு அவ்வொரு அடியைச் சான்றாகக் கொண்டு பாடலின் ஏனைய மூன்று அடிகளைத் தேடவும், நூல் பெயர், ஆசிரியர் பெயர் முதலான பல குறிப்புகளைத் தொகுக்கவும் வாய்ப்பாக அமைந்தது. இவ்வாறு உ.வே.சா. பதிப்பித்துள்ள நூல்கள் பலவற்றிலும் ஜோதிடவியல் குறிப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com