

சிலம்பொலியார் எண்பது நிறைந்து 81-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்கிற செய்தியே வியப்பு மேலிட வைக்கிறது. அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் அகவை எழுபதுக்கும் மேலாக அவரை எடைபோட அனுமதிக்காது. "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.க்குப் பிறகும் சிலம்பின் மகத்துவம் தமிழகத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதற்கு "சிலம்பொலி' செல்லப்பனார் ஒரு முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
இதுவரை நான் வெளிப்படுத்தாத ஓர் உண்மையை இப்போது பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய இளமைக் காலங்களில் தமிழ் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தியவை தவத்திரு குன்றக்குடி அடிகளார், "சிலம்பொலி' செல்லப்பனார், ஒளவை நடராசன் போன்றோர் நிகழ்த்திய இலக்கியச் சொற்பொழிவுகள்தான். "இலக்கியச் செல்வர்' குமரி அனந்தன், திருக்குறளார் முனுசாமி, அ. சீனிவாசராகவன், எஸ்.ஆர்.கே., அ.ச.ஞா. போன்றவர்களும் மேடைப் பேச்சால் எனக்கு இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தியவர்கள். இவர்களிடமெல்லாம் பேச மாட்டோமா என்று ஏங்கிய நான் அவர்களில் பலருடனும், குறிப்பாக ஒüவை நடராசன், "சிலம்பொலி' செல்லப்பன், குமரி அனந்தன் போன்றோர்களுடன் பேசவும், பழகவும், அவர்களது அன்புக்குப் பாத்திரமாகவும் முற்பிறவிகளில் என்ன தவம் செய்தேனோ நானறியேன்.
செல்லப்பனாரின் மகள் மணிமேகலை புஷ்பராஜ், அவரது 85-ஆவது வயது நிறைவையொட்டி வெளிவர இருக்கும் மலருக்கு வாழ்த்துச் செய்தி வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நான் சிலம்பொலியாரின் புத்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன் என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலம்பொலியாருக்கு ஆயுசு நூறு!
முனைவர் "சிலம்பொலி' செல்லப்பன் எழுதிய "சிலப்பதிகாரச் சிந்தனைகள்' என்கிற புத்தகத்தை, எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட சிலப்பதிகார ஆய்வு என்றுதான் கூற வேண்டும். முன்னையோர் வழியில் இளங்கோ, இளங்கோ வழியில் பின்னையோர், சிலம்பில் திருக்குறள் ஆகிய மூன்று கட்டுரைகளும், சிலம்பு பற்றி உரையாற்றும் இலக்கியப் பேச்சாளர்கள் இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால்,, தயவுசெய்து உடனடியாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை.
சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை கணிகையரின் நடனம் பற்றி உரைப்பது என்று எண்ணிவிடலாகாது. மாதவி என்கிற கதாபாத்திரத்தை இளங்கோவடிகள் கணிகையாகப் படைத்ததே, அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் நாட்டியம், இசை, தமிழர்தம் இசைக் கருவிகள் போன்றவைகளைப் பதிவு செய்யத்தானோ என்று நினைக்கத் தூண்டும் அளவுக்கு அரங்கேற்றுக் காதை பல இசை, நடன நுணுக்கங்களைப் பதிவு செய்கிறது. முழவு, குழல், யாழ் என இசைக்கான தோற் கருவிகளையும், துளைக் கருவிகளையும், நரம்புக் கருவிகளையும் வகைப்படுத்திக் காட்டுகிறார் அடிகளார்.
""எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக''
என்று அரங்கேற்றுக்காதை 100 முதல் 104-ஆவது பாடல் வரை, ஆடலரங்கு எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.
எட்டுக் கோல் நீளமும், ஏழு கோல் அகலமும், ஒரு கோல் தள உயரமும் கொண்டதாக அரங்கு இருத்தல் வேண்டும் என்கிறார். ஒரு கோல் என்பது கைப் பெருவிரலை ஒன்றன் மீது ஒன்றாக இருபத்து நான்கு முறை அடுக்கிய உயரம் என்கிறார் இளங்கோவடிகள்.
பலமுறை படித்த சிலம்புதான். சிலம்பில் காணப்படும் செய்திகளும் தெரிந்தவைதான். ஆனால் முனைவர் செல்லப்பன் அதைச் சொல்ல முற்படும்போதுதான் சிலம்பொலியின் சிறப்பு சிலிர்ப்புடன் ஒலிக்கிறது.
சிலப்பதிகாரத்தை ஒரு முறை ஊன்றிப் படித்துவிட்டு, "சிலப்பதிகாரச் சிந்தனைகள்' புத்தகத்தையும் படித்துத் தெரிந்து கொண்டுவிட்டால், சந்தேகமே இல்லை, இலக்கியப் பேச்சாளராக வலம் வரலாம். சிலம்பின் மாணிக்கப் பறல்களைப் படையலாக்கித் தந்திருக்கிறார் செல்லப்பனார்!
--------------------------------------------------
"வில்லாதி வில்லன்' என்றொரு புத்தகம். மனித வரலாற்றில் பேரழிவையும், பெரும் நாசத்தையும் ஏற்படுத்திய 12 கல்நெஞ்சக்காரர்களின் செயல்பாடுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார் பாலா ஜெயராமன். கூடவே, ஓட்டோமானிய துருக்கியில் நடந்த இனப்படுகொலையையும், டூட்சிக்களும், ஹுட்டுக்களும் நடத்திய இனவெறி பற்றியும் பதிவு செய்திருக்கிறார்.
இவரது பட்டியலில் லிட்டன், ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் ஒட்டவில்லை. வலியச் சேர்ந்தாற்போல இருக்கிறது. அப்படியானால் புத்தகம் சுவாரஸ்யமாக இல்லையா என்று கேட்டால், அப்படியும் தள்ளிவிட முடியாது. எடுத்துப் படிக்கத் தொடங்கினால் கடைசிப் பக்கம் வரை விறுவிறுப்பாக ஓடுகிறது. யோசப் மெங்காலா, பால் பாட், மொபூட்டு, இரண்டாம் கெய்சர் வில்லெம், எலிசபெத் பாதோரி போன்றவர்கள் பற்றிய செய்திகள் புத்தகத்தைக் கீழே வைக்கவிடாது.
இந்தப் பட்டியலிலிருந்து அடால்ஃப் ஹிட்லர், பெனிடோ முசோலினி, இடி அமின் போன்றவர்கள் எப்படி விடுபட்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதேபோல, ராபர்ட் கிளைவ் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டைக் கூற முடியுமே தவிர, அவருக்குப் பின்னால் வந்த பல வைஸ்ராய்களைப் போல கொடூரமான செயல்களில் கிளைவ் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. உலகை உலுக்கிய கொடுங்கோலர்களும் சரி, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு வாய்ப் பூட்டும், எதிரிகளுக்கு விலங்கும் போட்ட சர்வாதிகாரிகளும் சரி, மக்களின் பேராதரவுடன்தான் ஆட்சியில் அமர்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை.
வில்லாதி வில்லனை முன்பே கூறியதுபோல முழுமையான பதிவாகக் கொள்ள முடியாது. ஆனால் சுவாரஸ்யமான பதிவாக நிச்சயம் பரிந்துரைக்க முடியும்!
--------------------------------------------------
எங்கோ கேட்டது அல்லது எப்போதோ படித்தது. சட்டென நினைவுக்கு வந்தது.
பதவி இழந்த
அமைச்சரின் அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.