இந்த வார கலாரசிகன்

இப்போது சென்னை அமைந்தகரையில் "ஸ்கை வாக்' என்கிற வணிகப் பெருவளாகம் (மால்) இருக்கும் இடத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அருண் ஹோட்டல் என்கிற தங்கும் விடுதி இருந்தது. அந்த விடுதியின் அடித்தளப் பகுதியில்தான் "சாவி' வார இதழ் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்த வார கலாரசிகன்
Updated on
3 min read

இப்போது சென்னை அமைந்தகரையில் "ஸ்கை வாக்' என்கிற வணிகப் பெருவளாகம் (மால்) இருக்கும் இடத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அருண் ஹோட்டல் என்கிற தங்கும் விடுதி இருந்தது. அந்த விடுதியின் அடித்தளப் பகுதியில்தான் "சாவி' வார இதழ் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

"சாவி' அலுவலகம் எழுத்தாளர்களின் படையெடுப்பால் களைகட்டியிருந்த காலகட்டம் அது. சுஜாதா, மோனா, "விசிட்டர் லென்ஸ்', சாவி என்று பல பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. விரைவிலேயே "திசைகள்', "பூவாளி' போன்ற இதழ்கள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மாலன், பாலகுமாரன், பாரிவள்ளல், விசிட்டர் அனந்த் என்கிற அனந்தகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து நவீனன், அபர்ணா நாயுடு என்கிற சி.ஆர். கண்ணன் ஆகியோர் சாவி அலுவலகத்தின் சுறுசுறுப்புக்கும் விறுவிறுப்புக்கும் காரணமாக இருந்தனர்.

சுஜாதா, புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபால் ஆகியோர் "சாவி' வார இதழின் நட்சத்திர எழுத்தாளர்கள். அலிடாலியா ராஜாமணி, சுப்ரமண்ய ராஜு போன்றவர்களின் எழுத்துக்கள் "சாவி' இதழின் வாசிப்பு ரசனைக்குக் காரணமாக அமைந்த நேரமது. மேலே குறிப்பிட்ட பட்டியலில் நானும் ராணிமைந்தனும் அடக்கமாகக் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தோம். அவர்களுடைய புகழ் வெளிச்சத்தையும் மீறி எங்களுடைய எழுத்தும் "சாவி' வாசகர்களின் கருத்தைக் கவர்ந்தது என்பதுதான் ஆச்சரியம்.

இப்படி பழைய நினைவுகளை நான் அசைபோடுவதற்குக் காரணம், இன்று வெளியிட இருக்கும் இலக்கியவீதி இனியவனின் வாழ்க்கை வரலாற்று நூல், ராணிமைந்தனால் எழுதப்பட்ட 50ஆவது நூல் என்பதுதான். இதுவரை 21 வாழ்க்கை வரலாறுகளையும், 20 மொழிபெயர்ப்புகளையும், 8 கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கும் ராணிமைந்தன், வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதத் தொடங்கிய பின்னணியை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

மலையாளத்தவரான நாயர்ஸான் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய உணவு விடுதி ஒன்றைத் தொடங்கி நடத்தி, ஜப்பானியர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர். 1982ம் ஆண்டு தனது நண்பரான நாயர்ஸான் பற்றிய ஆங்கில நூலை மொழிபெயர்க்கும் பொறுப்பை சாவி சார் ராணிமைந்தனிடம் ஒப்படைத்தார். அதன் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அப்போது அமைச்சராக இருந்த சாவி சாரின் நண்பர் க. ராஜாராமின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., ஆர்.எம். வீரப்பன், பாலமுரளி கிருஷ்ணா, சிங்கப்பூர் முஸ்தபா, ஏவி. மெய்யப்ப செட்டியார், "ஜெம்' கிரானைட்ஸ் அதிபர் வீரமணி, நீதியரசர் ஜெகதீசன் என்று ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்து, இப்போது இலக்கியவீதி இனியவனின் புத்தகத்துடன் 21 நூல்கள் வெளிவந்துவிட்டன.

ராணிமைந்தன் என்கிற என் நண்பருக்கு மூன்று தனித்துவங்களுண்டு. முதலாவது அவரது அயராத உழைப்பு. ரிசர்வ் வங்கியில் வேலை செய்யும்போது அதிகாலை எட்டு மணிக்கு சாவி சாரின் வீட்டில் ஆஜராகி விடுவார். பெரம்பூரிலிருந்து அண்ணாநகர் வந்து அங்கிருந்து பத்து மணிக்கு கடற்கரைச் சாலையிலுள்ள ரிசர்வ் வங்கிக்குத் தனது டிவிஎஸ் 50 மொபெட்டில் பயணிப்பது மட்டுமல்ல. மாலையில் ஏதாவது பேட்டி இருந்தால் அதை முடித்துவிட்டு மீண்டும் அண்ணாநகர் வந்து சாவி சாரை சந்தித்து விட்டுத்தான் வெற்றிநகர் விரிவாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு இரவில் திரும்புவார், அதுவும் தினப்படியாக!

இரண்டாவதாக, நான் அவருடன் பழகிவரும் கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை அவர் வேறொவரைப் பற்றிக் குறை சொல்லிக் கேட்டதே இல்லை. ஒருவரைப் பற்றி யாராவது விமர்சனம் செய்தால், அந்த இடத்திலிருந்து ராணிமைந்தன் அகன்று விடுவார். வாய் தவறிக்கூட ராணிமைந்தன் யாரையும் தவறாகப் பேசியதில்லை.

மூன்றாவதாக, அவரது கையெழுத்து. எனது கிறுக்கல் கையெழுத்தும் அவரது அச்சுக் கோர்த்தாற்போன்ற மணிமணியான கையெழுத்தும் இருவேறு துருவங்கள். கண்ணில் ஒத்திக் கொள்ளலாம்போல இருக்கும் அவரது கையெழுத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பொறாமையாகவே இருக்கும்.

எல்லோருக்கும் இனியவரான என் அருமை நண்பர் ராணிமைந்தன் இலக்கியவீதி இனியவனின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வெளியிடுகிறார் என்பதும், இது அவரது 50ஆவது நூல் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரைப் பாராட்டி மகிழ எங்கள் ஆசிரியர் சாவி சார் இல்லாதது மட்டும்தான் குறை!

------------------------------------------------

எழுத்தாளர் ஜீவ பாரதி வந்திருந்தார். அகவை தொண்ணூறு காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு பற்றி ஒரு புத்தகம் எழுதி இருப்பதாகவும் அதற்கு அணிந்துரை எழுதித் தரும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.

நான் மதிக்கும் ஒரு சில தலைவர்களில் தோழர் நல்லகண்ணுவும் ஒருவர். நாளிதழ் ஆசிரியராக இருப்பவர்கள் இதுபோன்ற பணிகளை ஏற்றுக்கொண்டால் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்பட்டு, ஆசிரியர் குழுவின் எரிச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. அதனால் ஜீவ பாரதியின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, அந்த அருமையான வாய்ப்பை இழந்ததற்கு வருத்தமும் படுகிறேன்.

தோழர் ஆர். நல்லகண்ணு "தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை' என்றொரு புத்தகம் எழுதி இருக்கிறார். திட்டக் கமிஷன் உறுப்பினர்கள் கூட இவ்வளவு தெளிவாகத் தமிழகத்தின் நதிநீர்ப் பிரச்னையை ஆய்வுசெய்து, தெளிவான தீர்வு தருவார்களா என்பது சந்தேகம்தான். சர். ஆர்தர் காட்டனின் திட்டம், கேப்டன் தஸ்தூரின் பூமாலை கால்வாய் திட்டம், சேது கங்கா இணைப்பு போன்ற கட்டுரைகள் தெளிவான பதிவுகள். இந்த மனிதரை அல்லவா நாம் நீர்வளத்துறை அமைச்சராகப் பெற்றிருக்க வேண்டும் என்று வியக்க வைக்கிறது ஒவ்வொரு கட்டுரையும்.

டிசம்பர் 26ஆம் நாள் அகவை தொண்ணூறு காண இருக்கிறார் தோழர் ஆர். நல்லகண்ணு நூறாண்டு தாண்டியும் அவரது தொண்டு தொடர வேண்டும். இப்படியொரு அரசியல் தலைவரைப் பெற்றது தமிழகம் செய்த நற்பேறு. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்- "இன்னொருவர் உண்டா இதுபோல்?'

------------------------------------------------

கவிஞர் வெ. மாதவன் அதிகன் என்னைத் துரத்திப் பிடித்துப் படிக்கத் தந்த கவிதைத் தொகுப்பு "சர்க்கரைக் கடல்'. மறைபொருளாகவும் (abstract), குறிப்புணர்வாகவும் (suggestive) உள்ள கவிதைகள் இவருடையவை என்றாலும், சில நேரிடையாகவே சிந்தனையைத் தூண்டுபவையாகவும் இருக்கின்றன. அதில் ஒன்று.

உலகின் அறங்களும் நீதிகளும் போதிக்கப்பட்ட பின்பும் ஒரு தேக்கரண்டிக் காமம் எல்லாவற்றையும் எரித்துவிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com