

பழந்தமிழர் காதலையும், வீரத்தையும் அன்றி அறிவியலையும் சிந்தித்தனர் என்பதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. அறிவின் நுண்மையே அறிவியலாகும். இது காப்பியங்களிலும் ஆளுமை பெற்றுத் திகழ்கின்றது.
வேதியியல்:
சிலப்பதிகாரத்தில் வேதியியல் கூறுகளைக் காண முடிகின்றது. மணிகள் ஒளிவிடும் தன்மையினாலும் வேறு வேறு பெயர்களைப் பெற்றுள்ளன. மணிகளின் மூலப் பொருள் ஒன்றுதான் என்பதை இளங்கோவடிகள் ஊர்காண் காதையில்
கூறுகின்றார்.
"ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்' (191-192)
இன்றைய வேதியியல் அறிஞர்கள் மணிகள் அனைத்துமே பீனால், பார்மால்டிஹைடு பொருள்களால் ஆனது என்கின்றனர். ஆனால், மணிகள் அனைத்திற்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்பதை இளங்கோவடிகள் கூறியுள்ளார். அந்த மூலப்பொருள் எது என்பதைதான் இன்றைய அறிவியல் உலகம் கண்டறிந்துள்ளது.
வானியல்:
வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு என்பதை "வறிது நிலைஇய காயமும்' (பா.20) என்று புறநானூறும், வானம் கடலில் இருந்து முகந்த நீரை மழையாகப் பெய்கின்றது என்பதை, "வான்முகந்தநீர் மலை பொழியவும்' (125) எனப் பட்டினப்பாலையும் கூறுகின்றன. வானத்தில் உலவும் கோள்களையும் தமிழர்கள் ஆராய்ந்துள்ளனர். சீவகசிந்தாமணியில் கோள்கள் பற்றி திருத்தக்கதேவர் குறிப்பிட்டுள்ளார்.
காந்தருவ தத்தையின் முகமானது நிலவைப் போன்று இருந்தது என்றும், அவள் தன் காதில் அணிந்திருந்த குண்டலம் நிலவுக்கு அருகே இருக்கும் வியாழன் கோள் போல் இருந்தது (618) என்றும் கூறுகின்றார். அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்தில்தான் நிலவுக்கு அருகே உள்ள கோள் வியாழன் என்பதைக் கண்டறிந்தனர். இதனை 9-ஆம் நூற்றாண்டிலேயே திருத்தக்கதேவர் கூறியிருக்கிறார்.
பொறியியல்:
பழந்தமிழர் பொறியியல் அறிவையும் பெற்றிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டு, கரும்பினைப் பிழிவதற்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை (புறநா.322) கூறும் புறநானூற்று வரிகள்தாம். சீவகசிந்தாமணி எந்திரத்தால் இயக்கப்பட்ட திரைச்சீலை பற்றிப் பேசுகின்றது. காந்தருவதத்தை சீவகனிடத்தில் இசைப் போரில் தோற்ற பின்னர், அவள் அமர்ந்திருந்த மண்டபத்தின் திரைச்சீலை எந்திரத்தால் மூடப்பட்டிருந்தது (740) என்கிறார் திருத்தக்கதேவர்.
தொலைத் தொடர்பும், நேரலையும்:
அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் இன்று சுருங்கிவிட்டது. ஓரிடத்தில் நிகழும் விளையாட்டையோ, நிகழ்ச்சிகளையோ தொலைக்காட்சி வழியாக நேரலையாகக் காண முடிகிறது. இத்தகு கருவிகள் இல்லாத காலத்திலேயே நேரடி ஒளிபரப்பு பற்றி சீவகசிந்தாமணி கூறியிருக்கிறது.
நந்தட்டன் சீவகனை காண வேண்டும் என்று விரும்புகிறான். காந்தருவதத்தை ஒரு மந்திரம் கூறுகிறாள். அம்மந்திரம் சீவகன் இருக்குமிடத்தை விளக்கமாகக் காட்டுகிறது (பா.709). அவ்வேளையில் சீவகன் கனக மாலையோடு மலர்ப் படுக்கையின் மேல் கற்பக மாலை புனைந்து, கனக மாலைக்குச் சூடியதை எதிரில் காணுகின்றான் (1710) நந்தட்டன். இந்நிகழ்வு, இன்றைய நேரலையை ஒத்திருக்கிறது.
மருத்துவம்:
பன்னெடுங் காலத்திற்கு முன்னரே தமிழர் மருத்துவயியலையும், அறிந்திருந்தனர். காப்பியங்களும் மருத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றன. பெரியபுராணம், கண்ணப்ப நாயனார் புராணம் இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. காளத்திநாதரின் கண்களில் குருதி வழிவதைக் கண்ட கண்ணப்பர், குருதி வடிவது நிற்பதற்காகப் பச்சிலையைப் பிழிந்து ஊற்றுகிறார். ஊற்றிய பின்னரும் குருதி வடிவதைக்கண்ட கண்ணப்பர் ஓர் உறுப்பிற்கு வரும் நோயைத் தீர்ப்பது இன்னொரு உறுப்பாகும் என்று உணர்வதாக, "உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்' (பா.177) என்கிறார் சேக்கிழார்.
ஊனுக்கு ஊன் என்பதை "பழிக்குப் பழி' என்று சிலர் மாற்றிப் பொருள் கொண்டுள்ளனர். ஆனால், ஓர் உறுப்பு பழுதுற்றால் மற்றொரு உறுப்பை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதையே மேற்காணும் வரிகள் உணர்த்துகின்றன. பின்னர், கண்ணப்பர் தமது வலக்கண்ணை கூர்மையான அம்பினால் தோண்டி, ஈசனின் வலக்கண்ணில் அப்பினார் என்பதை (பா.177) கூறுகின்றார். இன்றைய மருத்துவ உலகில் சாத்தியமாகும் உறுப்பு மாற்று சிகிச்சையினை பெரியபுராணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு அறிவுறுத்தியுள்ளது.
கம்பராமாயணமும் அறுவை மருத்துவம் (கும்பகர்ணன் வதைப்படலம், பா.62) பற்றிப் பேசுகின்றது. அணுக்கரு பிளப்பு, சேர்ப்பு பற்றிய கொள்கைகள் புதியன அல்ல, 12-ஆம் நூற்றாண்டிலேயே கம்பர் இதனை, "சாணினும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்' (இரணிய வதைப்படலம், 37) என்று அணுக்கொள்கையைக் கூறியுள்ளார்.
வானூர்தி பறத்தல் தத்துவம்:
தமிழர்கள் விண்ணில் உலவும் கோள்களை மட்டும் ஆராயாமல், அதில் பறப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்துள்ளனர். "வலவன் ஏவா வானூர்தி'
(புறநா.27) என்று புறநானூறு கூறுகிறது. சீவகசிந்தாமணி, மயிற்பொறியில் பறந்து சென்ற விசையைப் பற்றியும் கூறுகின்றது. மணிமேகலை காப்பியம் விண்ணில் பறந்து பல நாடுகளுக்கும் மணிமேகலை சென்றதாகக் கூறுகின்றது. கம்பரோ, வானூர்தி பறத்தல் தத்துவத்தையே கூறியிருக்கிறார்.
இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிச் செல்கின்றனர். அப்போது மண்ணின் மேல் தேர்க்காலின் சுவடுகள் தெரிகின்றன. இருவரும் அச்சுவடுகளைப் பின் தொடர்ந்து செல்கின்றனர். சிறிது தூரம் சென்ற பின்னர் அச்சுவடுகள் மறைந்து போகின்றன. அந்த விமானம் வான்நோக்கி பறந்திருக்கக்கூடும் என்று இருவரும் வருந்தினர் (சடாயு உயிர்நீத்த படலம், 23) என்கிறார் கம்பர். விமானம் தரையில் சிறிது தூரம் ஓடிய பின்னரே வானத்தில் பறக்கிறது எனும் உண்மையை முதலில் சொன்னவர் கம்பராகவே இருப்பார்.
தமிழ் இலக்கியங்களும், காப்பியங்களும் எடுத்துரைத்த கோட்பாடுகளே இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றிற்கு ஆதாரமாய் விளங்குகின்றன. பழந்தமிழர்களின் செயல்பாடுகள் அனைத்திலும் அறிவியல் அமைந்துள்ளது.
-சு. செந்தில்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.