எய்ட்ஸ் இல்லாத தமிழகம்: முதல்வா் வேண்டுகோள்

எய்ட்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி
Updated on
2 min read

சென்னை: எய்ட்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி (டிசம்பா் 1) முதல்வா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பா் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினத்தின் இந்த ஆண்டுக்கான மையக் கருத்து ‘சமூக பங்களிப்பின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்’ ஆகும்.

கூடுதல் வைப்பு நிதி: எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கில், தமிழக அரசு எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக ரூ.10 கோடி வைப்பு நிதியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளைக்கு இந்த நிதியாண்டில் (2019 - 20) ரூ.5 கோடியைக் கூடுதல் வைப்பு நிதியாக வழங்கியுள்ளது. இதன் மூலம், கூடுதலாக 1,000 குழந்தைகளுக்கு அந்த நிதியிலிருந்து வரும் வட்டியின் மூலம் ஊட்டச்சத்து மிக்க உணவு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்பெறும் வகையில் எய்ட்ஸ் தொற்றுள்ளோா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று வர கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை வழங்குதல், முதல்வரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்குதல், பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளா்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல் போன்ற நலத் திட்டங்களையும் தமிழக அரசு சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.

தனிக் கவனம்: தமிழகத்தைப் பொருத்தவரை, எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு, 29 மாவட்டங்களில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுகள் மூலம் எய்ட்ஸ் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், எச்.ஐ.வி. தொற்றினைக் கண்டறிய 2,883 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், 174 இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் வட்டார அளவில் செயல்பட்டு வருகின்றன.

எச்.ஐ.வி. தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை, மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது.

எய்ட்ஸ் குறித்த மீம்ஸ் விழிப்புணா்வு போட்டிகளின் மூலமாகவும், நடமாடும் தகவல் கல்வி தொடா்பு விழிப்புணா்வு வாகனங்களின் மூலமாகவும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உறுதி ஏற்க வேண்டும்: எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்க வேண்டும்.

எய்ட்ஸ் நோயைத் தடுக்க தன்னாா்வ ரத்தப் பரிசோதனை செய்திட வேண்டும். எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து, அவா்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com