

கயிலையில் ஆலால சுந்தரர் சிவனுக்குச் சதா தொண்டு செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தார். நாள்தோறும் நந்தவனத்துக்குச் சென்று பூக்கொய்து அவற்றை மாலையாகத் தொடுத்து அளித்தல், திருநீற்று மடல் ஏந்தி நிற்றல் போன்றவையே அவர் செய்து வந்த சிவத்தொண்டு. ஆலால சுந்தரர் பெயருக்கு ஏற்ப ஆணழகர். தோற்றத்தில் மன்மதன்.
ஒருநாள் பூக்கொய்து வர நந்தவனம் சென்றபோது அங்கு வந்திருந்த இரு கன்னியரைக் கண்டு ஆலால சுந்தரருக்கு நா வறண்டது. வைத்த கண் வாங்காமல் அவர்கள் பூக்கொய்யும் நளினத்தைக் கண்டு திக்பிரமையடைந்து நின்றுவிட்டார். காரணம் அவர்களின் கண்ணைப் பறிக்கும் பேரெழில்! அவர்கள் பார்வதி தேவியாரின் இரு தோழியர்கள். ஒருத்தி பெயர் கமலினி, இன்னொருத்தி பெயர் அநிந்திதை. ஆலாலசுந்தரர் நிலை இதுவென்றால், அந்தக் கன்னியர்கள் நிலைமை இன்னும் மோசம்!
ஆலாலசுந்தரரின் மன்மதனைப் பழிக்கும் எழிலைக் கண்டு அவர்கள் இருவரும் நிலை குலைந்தனர். தங்கள் மனதை ஆலால சுந்தரரிடம் உடனே பறிகொடுத்து விட்டு நின்றனர்! இப்படி பரஸ்பரம் காதல் அரும்பியது. இந்த விஷயம் சிவபெருமான் காதுகளுக்கு எட்டியது! அவர், ""அப்பனே சுந்தரா! உங்களது காதல் லீலைகளுக்கு இந்தக் கைலாயம் சரிப்படாது. நீவிர் மூவரும் பூலோகத்தில் மானிடராய் பிறந்து, வளர்ந்து, அன்பு செலுத்தி வாழுங்கள்!'' என்று அருளுகிறார்.
பரமனின் திருவுள்ளப்படி ஆலால சுந்தரர், தமிழகத்தில் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் என்னும் தலத்தில் ஆதிசைவ அந்தணராக அவதரித்தார். நம்பி ஆரூரர் என்ற பெயருடன் வளர்ந்தார். கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கினார். நாளடைவில் அவருக்கு என்று ஓர் அடியார் கூட்டம் சேர்ந்தது.
இந்த நிலையில் உமையம்மையாரின் கட்டளைப்படி கமலினி திருவாரூரில் பரவைநாச்சியாராகவும் அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலியாராகவும் பிறந்து வளர்ந்து பருவமெய்தினர்.
பரவையார் தினம் தன் தோழிகளோடு கோயிலுக்குப் போய் சிவதரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் முன்வினைப் பயனாய் தனது அடியார்கள் புடைசூழ அந்த நேரம் கோயிலுக்கு வருகை தந்த நம்பி ஆரூரன் (சுந்தரர்) பார்வை பரவையாரின் மீது படர, பரவையாரும் சுந்தரரை நோக்க முன்பு கயிலையில் அரும்பிய காதல் இப்போது மலர்ந்தது!
மறுநாளே இறையருளால் சுந்தரருக்கும் பரவையாருக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இருவரும் இல்லறத்தை இனிதே நடத்தி வந்தனர். நாளடைவில் சுந்தரருக்கு மீண்டும் தலயாத்திரை செல்லும் அவா மேலோங்கியது. தன் அடியார்களுடன் பற்பல திருத்தலங்களுக்குச் சென்று அங்கு சிவதரிசனம் செய்து கொண்டு தொண்டை நாட்டை அடைகிறார். தொண்டை நாட்டுத் தலங்களில் மிகமிகப் பழைமையானதும் சீரும் சிறப்பும் மிக்க திருவொற்றியூரில் சில நாட்கள் தங்கினார். ஒருநாள், சிவதரிசனத்தை முடித்துக் கொண்டு அருகிருந்த மலர் தொடுக்கும் மண்டபத்துக்கு சென்றார் சுந்தரர். அங்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்த சங்கிலியாரைக் கண்டார். சங்கிலியாரும் சுந்தரரைக் காண இருவருக்குமே ஏதோ இனம்புரியாத அன்பு தோன்றியது! உடனே சுந்தரர் மீண்டும் கோயிலினுள் சென்று சிவலிங்கத்தின் முன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து தனக்கும் சங்கிலியாருக்கும் மணமுடித்து வைக்குமாறு வேண்டினார்!
இறைவன் சங்கிலியார் கனவில் தோன்றி ""என்னைவிட்டுப் பிரியமாட்டேன் என்று சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு சுந்தரனுக்கு மாலையிடு'' என்று பணிக்கிறார். சங்கிலியாரும் சம்மதிக்கிறார். ஆனால் சிறிது நாட்களிலேயே சிவனின் திருவிளையாடலால் சங்கிலியாரைப் பிரிந்து பரவையாரிடம் வருகிறார் சுந்தரர். இதற்கிடையே அடியார்கள் சிலர் மூலம் பரவையாருக்குச் சுந்தரரின் திருமண விஷயம் தெரிந்து அவர் அனலாய்க் கொதித்துக் கொண்டிருக்கிறார்.
பரவையாரின் கோபத்தைக் கேட்டறிந்த சுந்தரர் சில பெரியவர்களைத் தூது அனுப்பி அவரை சமாதானம் செய்யச் சொல்கிறார். தூது சென்ற பெரியோர்களை, ""நீவிர் அந்த மனிதர் விஷயமாக ஏதும் சொல்ல வந்தால் நான் உடனே பிராணத்தியாகம் செய்து கொண்டு விடுவேன்!'' என்று கூற, வந்த பெரியவர்கள், சுந்தரரிடம் போய் பரவையார் நிலையை கூறுகிறார்கள். சுந்தரர் உடனே சிவபெருமான் முன் சென்று, ""பெருமானே இந்த ஏழைக்கு இரங்கி நீரே தூது சென்று பரவையின் ஊடலைத் தீர்த்தருள வேண்டும்!'' என்று இறைஞ்சுகிறார்.
அடியார் குறை தீர்க்கும் அம்பலக் கூத்தரான சிவன் ஓர் ஆதிசைவர் வேடம் தாங்கி பரவையார் இல்லம் ஏகி பற்பல சமாதான வார்த்தைகளை பேசுகிறார். பரவையார் எதற்கும் மசியவில்லை. சுந்தரரிடம் வந்து விஷயத்தைச் சொல்கிறார் சிவன். ஆனானப்பட்ட சிவனாலேயே சமாதானம் ஆக முடியாத பரவையை நாம் எந்தக் காலத்தில் சேர்வது என்று சோர்வுற்ற சுந்தரர், உடனே சிவன் காலடியில் விழுந்து, ""நான் இனி உயிர் தரியேன். என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விடுவியும்!'' என்று புலம்பினார்.
சுந்தரது நிலைகண்டு இரங்கிய சிவன், ""சரி, உமக்காக இன்னொரு முறை இன்றிரவே மீண்டும் தூது சென்று பார்க்கிறேன்!'' என்று ஒரு குருக்கள் வடிவு தாங்கி பரவையார் இல்லம் ஏகுகிறார். இறைவன் அருளால் தன் இல்லம் தேடி இரண்டாம் முறையாக வந்திருப்பவர் சாட்சாத் சிவபெருமானே என்று உணர்ந்த பரவை, அவர் காலடியில் வீழ்ந்து வணங்குகிறார். ""நீ முன்போல் மறுப்பு ஏதும் சொல்லாமல் சுந்தரரை ஏற்று அவர் இங்கு வருவதற்கு உடன்படல் வேண்டும்!'' என்கிறார் சிவன். இறைவன் கட்டளைக்கு அடிபணிந்து சுந்தரரை மிக அன்புடன் வரவேற்று ஏற்றுக் கொள்கிறார் பரவை!
இந்த நிகழ்ச்சியைத்தான் அருணகிரிநாதர் ""பரவைமனை மீதிலன்று ஒருபொழுது தூது சென்ற பரமன்'' என்ற அடிகளில் தெரிவிக்கிறார். (பாடல்: "கருவினுருவாகி வந்த வயதளவிலே வளர்ந்து' என்று தொடங்கும் பழனி திருப்புகழ்ப்பாடல்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.