

சக்தியுடன் சிவன் சேர்ந்து லகீன்றனன்
சக்தியின்றிச் சிவன் சற்றும் அசைவனோ
அத்தன் அரி அயன் போற்றும் என்தாயை
பக்தி கொண்டேத்த முற்புண்ணியம் வேண்டுமே!
என்று கவிஞர் கண்ணதாசன், ஆதிசங்கரரின் செüந்தர்யலஹரியின் முதன் பாடலான ""சிவசக்தியா யுக்தோ யதி பவதி'' என்பதை இவ்வாறு தமிழில் மொழிபெயர்த்திருப்பார். அப்படி, சக்தி (அருள்) இன்றிச் சிவனால் (செயல்) இயங்க முடியாது. சிவசக்தியின் ஐக்கிய சொருபமே இவ்வுலகம். அத்தகைய சக்தியைப் போற்றும் ஒன்பது நாள்கள்தான் நவராத்திரித் திருநாள்.
÷இந்த நவராத்திரியில் பஞ்ச சக்திகளைப் பற்றியும் அந்த பஞ்ச சக்திகளிலிருந்து அவசரித்த பிற சக்திகளைப் பற்றியும் அறிந்துகொள்வது சிறப்புக்குரியது. அதுமட்டுமல்ல, மாங்கல்ய பலம் பெறுவதற்கும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கூடிவருவதற்கும் இச்சக்திகள்தான் உறுதுணையாக நிற்கின்றனர். நவராத்தியில் இவர்களை வழிபடுவது அனைத்துவிதமான நன்மைகளையும் தரும்.
பஞ்ச சக்திகள்: சக்தி ஒருத்தியே. ஆனால் உலகில் வாழும் ஜீவகோடிகள் உய்வதற்காக அந்தச் சக்தி ஐந்து பெரிய வடிவங்களாகப் பிரிந்து நன்மை அளிக்கிறார்கள். அவர்கள் முறையே, ஸ்ரீதுர்கா, ஸ்ரீலட்சுமி , ஸ்ரீசரஸ்வதி , ஸ்ரீசாவித்ரி ,
ஸ்ரீராதா என்று அழைக்கப்படுவர். அந்த ஐவரின் இயல்புகளையும் அவர்கள் அளிக்கும் நன்மைகளையும் காண்போம்.
ஸ்ரீதுர்கா: சிவபிரான் காதலியாகவும், விஷ்ணுவின் மாயையாகவும், பூரண பிரம்ம ஸ்வரூபிணியாகவும், தன் திருவடிகளைப் பற்றினவரை பாதுகாக்கும் தேவியாகவும், வேண்டிய வரங்கள் யாவும் வழங்கும் அன்னையாகவும், சித்தர்களின் தலைவியாகவும் இருப்பவள்.
ஸ்ரீலட்சுமி: சுத்த சத்துவ உருவம் உடையவள். எல்லாச் செல்வங்களும் உடையவள். அவற்றுக்கெல்லாம் தலைவி, சர்வமங்களை, திருமாலின் அன்புக்குரியவள், கற்பிற் சிறந்தவள். இச்சக்தி அஷ்டலட்சுமி வடிவினளாகவும் போற்றப்படுகிறாள்.
ஸ்ரீசரஸ்வதி: தூய ஆடை அணிந்து, புத்தி, கல்வி, வாக்கு ஆகியவற்றுக்குத் தலைவியாய், வீணை ஏந்திய கையினளாய் வெண்தாமரையில் எழுந்தருளி, தன்னைப் போற்றுபவர்களின் அறியாமையை(அஞ்ஞானத்தை) ஒழிப்பவள். பிரம்மாவின் அன்பிற்குரியவள்; இசையின் தலைவி; சாஸ்திர ஆராய்ச்சிக்கு விற்பன்னை; எல்லாத் தொழில்களுக்கும் மூலகாரணி.
ஸ்ரீசாவித்ரி : பிராமணர் முதலியோர் சந்தியாவந்தனம் செய்யும் பொழுது பிரத்தியக்ஷ தேவதையாகவும், வேதத்தின் உட்பொருளாகவும், சுத்த ஸத்வ மூர்த்தியாகவும், காயத்ரி, சாவித்ரி தேவதையாகவும், ஆனந்த ஸ்வரூபிணியாகவும் யோகிகளது உபாசனையில் சுழிமுனைநாடி சூடேறாமல் காப்பாற்றுபவளாகவும், பிரம்ம தேஜசுடன் கூடியவளாகவும் இருந்து அனைவருக்கும் நன்மை செய்பவள்.
ஸ்ரீராதா : பிராணன், அபானன், வியானன், உதானன், ஸôமானன் ஆகிய பஞ்ச பிராணன்களுக்கும் தலைவியாகவும், அன்பு வடிவமாகவும், கிருஷ்ண பரமாத்மாவிடம் எல்லையற்ற அன்புடையவளாகவும் இருப்பவள். தன்னை நாடியவர்களுக்கு ஆனந்தத்தை வழங்குபவள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐம்பெரும் சக்திகளின்று முறையே கங்கா தேவி, துளசி தேவி, மானசாதேவி, சஷ்டி தேவி, மங்கள சண்டிகா தேவி ஆகியோர் அவதரித்தனர். அவர்களுடைய இயல்புகள்:
கங்கா தேவி: கருணாமயமான கங்கை மூன்று உலகத்திலும் தீர்த்த வடிவமாக எல்லோருக்கும் அனுக்கிரம் செய்து தன்னில் நீராடுபவர்களுடைய பாவத்தைப் போக்குபவள்.
துளசி தேவி: எல்லாவிதமான நோய்களையும் தீர்க்கும் இவள் திருமாலின் அன்புக்குரியவள். அடியவர்களின் குறைகளைப் போக்குபவள்.
மானசா தேவி: சங்கரருடைய பிரிய சிஷ்யை. நாகாபரண பூஷிதை, நாகமாதா, நாகசயனி, நாகவாகினி என்றெல்லாம் போற்றப்படுபவள். இத்தேவியின் வடிவம் எப்பொழுதும் உபாசனைக்கு உரியது.
சஷ்டி தேவி: பிரகிருதியின் ஆறாவது அம்சமாகத் தோன்றி, முருகனுக்கு உகந்த நாளாய், காட்சியளிப்பவள்.
மங்கள சண்டிகா தேவி: பக்தர்களுக்கு உறுதியான வரங்களை அளிப்பவள், மாங்கலிய பலத்தை வலியத் தருபவள்.
சாவித்ரி தேவிக்கு மங்கல வாழ்வை அளித்தவள். நோயுற்றிருக்கும் பொழுதும், ஆபத்தில் இருக்கும்பொழுதும், மாங்கல்ய பலம் விரும்பும் சுமங்கலிகளும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இத்தேவதையை மனத்தில் எண்ணி,
""மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார் மங்களேசி மாங்கல்யம் தேஹேமே ஸதா''
என்னும் தோத்திரத்தை தினமும் 21 முறை கூறி, அன்னையை வழிபட்டு, 41 நாள்கள் பூஜை செய்ய, சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலமும், கன்னிப் பெண்களுக்கு திருமணமும் கைகூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.