தேவியை வழிபட சீரும் சிறப்பும் பெற்ற நாட்கள் நவராத்திரி நாட்கள். ப்ருத்வீ என்ற சொல் பூமியைக் குறிப்பதாகும். பூமிக்கு இலாபங்கள் வரவேண்டும் என்பதற்காக, இந்த நவராத்திரி விளங்குகிறது. இந்த நவராத்திரிக்குப் பிறகு பூமி வளம் பெறுவதற்கான மழை பொழிகிறது என்பர். சாரதா நவராத்திரியில் ஒன்பது நாட்களிலும் ஒன்பது தேவிகளாக பூஜிப்பது வழக்கம். மும்மூன்று நாட்களாகப் பிரித்து துர்க்கா, லஷ்மி, சரஸ்வதியாக பூஜித்துப் போற்றப்படுகிறது. இந்த நவராத்திரியில் வரும் விஜய
தசமியிலேயே பாண்டவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட எல்லா கட்டளைகளையும் முடித்துக்கொண்டு தசமியன்று தங்கள் ஆயதங்களை அவரவர்கள் கையிலே ஏந்திக்கொண்டு விஜயம் செய்யத் துவங்கியதால் விஜயதசமி என்று சொல்லுகிறோம்.
உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு அம்பிகை எடுத்த ரூபங்கள் பல. அவற்றில் தனிச்சிறப்புற்று விளங்குவதும், எல்லா ரூபங்களின் சமஷ்டியாக விளங்குவதான ரூபம் துர்க்கா தேவியின் ரூபம். துர்க்கா என்று அழைத்த மாத்திரத்தில் தன் அடியார்களுக்கு எந்த துன்பமும் வராமல் அரணாக நின்று காப்பதால் தேவியை "துர்க்கா தேவீம் சரணமஹம் ப்ரப்தயே' என்று வேதம் போற்றுகிறது. துர்க்கா என்ற சொல்லிற்கு துக்கத்தை போக்குபவள் என்று பொருள். அவளை மனமுருகி வேண்டினால் நம்மிடம் உள்ள தீய குணங்கள் விலகும். விக்னங்கள் நீங்கும். உடல், மன ரோகங்கள் நீங்கும். பாபம், பயம், சத்ரு தொலையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
ஜயம் என்றால் வெற்றி என்று பொருள். எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற வணங்கப்படுபவள் ஜெயதுர்க்கா. ராகுகாலத்தில் ராகு தேவன் அம்பாளை ஜெயதுர்க்கா தேவியாக வழிபடுகின்றான். ராகுகால பூஜையை உலகிற்கு முதன்முதலில் வெளிப்படுத்தியவர் உபாசனா குலபதி என்று அழைக்கப்பட்டு வரும் ஸ்ரீதுர்க்கை சித்தர் ஆவார். சென்னை, தாம்பரத்தை அடுத்த படப்பையில் ஸ்ரீ ஜெயதுர்க்கா பீடத்தை நிறுவி ஜெயதுர்க்கா தேவியை ஸ்தாபனம் செய்துள்ளார் இவர். இந்த ஆலயத்தில் ஜெய துர்க்கா தேவி சிம்மத்தின் மீது ஆரோகணித்திருப்பது பார்க்கப் பரவசப்படுத்தும். இந்த ஜெயதுர்க்கா பீடம் ராகுகால பூஜையின் ஆதார பீடமாகும். இங்கேயே ஸ்ரீ துர்க்கை சித்தரின் அதிஷ்டானமான சமாதி கோயிலும் இருக்கிறது.
இந்த பீடத்தில் நவராத்திரிப் பெருவிழா அக்டோபர் -13 இல் தொடங்கி ஜெய துர்க்கா தேவிக்கு அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு ஹோமமும் இன்னிசை கச்சேரிகளும் நடைபெற்று வருகின்றன.
தொடர்புக்கு: 87544 00203.
- அஸ்வமித்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.