திருப்பவித்ரோத்ஸவ மகிமை

ஸ்ரீ மந்நாராயணன் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்பதான ஐந்து நிலைகளிலே இருந்துகொண்டு நம்மையெல்லாம் காத்து அருள்கின்றான்.
திருப்பவித்ரோத்ஸவ மகிமை
Updated on
2 min read

ஸ்ரீ மந்நாராயணன் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்பதான ஐந்து நிலைகளிலே இருந்துகொண்டு நம்மையெல்லாம் காத்து அருள்கின்றான். இதில் ஐந்தாவது நிலையான அர்ச்சை என்பதான திவ்யமங்கள விக்ரஹ ஸ்வரூபமாய் திருக்கோயில்களில் கோயில்கொண்டு ஆகமவிதிப்படி பூஜிக்கப்படுவதால் உலகிற்குத் தேவையான அனைத்து நலன்களையும் எம்பெருமான் அருள்புரிகின்றான்.

அவ்விதமே குணசீல ஷேத்திரத்தில் காவிரிக் கரையில் கோயில் கொண்டு அருள் புரிந்து வரும் ஸ்ரீபிரஸன்ன வேங்கடேசப் பெருமானுக்கு ஸ்ரீவைகாநஸ ஆகம முறைப்படியான பூஜைகள் ஸ்ரீகுணசீல மஹரிஷியின் காலம் தொட்டு அவ்வழி வழிவந்த வைகாநஸகுல பட்டாச்சாரியார்களால் வெகுசிறப்பாக இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இவ் வைகாநஸ ஆகம முறைப்படி நடத்தப்படும் பூஜைகள் அவ்வப்போது ஏற்படும் தோஷ நிவர்த்திக்காக பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ள போதிலும், ஓர் ஆலயத்தில் ஓராண்டில் ஏற்படக்கூடிய நம் கண்ணுக்குத் தெரியாத தவிர்க்க முடியாமல் நிகழக்கூடிய பல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் திருப்

பவித்ரோத்ஸவம் எம்பெருமானுக்கு செய்விக்கப்பட வேண்டும் என (திருமால் இருதயத்திலிருந்து தோன்றியவர்) ஸ்ரீவிகநஸ முனிவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை அத்ரி, ப்ருகு, மரீசி, காஸ்யபர் ஆகிய முனிவர்களும் மிகவும் விசாலமாக எடுத்துரைத்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே பல திவ்ய தேசங்களிலும் பவித்ரோத்ஸவமானது நடைபெற்று வருகிறது.

திருப்பவித்ரோத்ஸவம் என்ற ஒன்றினை மஹரிஷிகள் மக்களின் நன்மைக்காகவே பரம கருணையுடன் அருளியுள்ளனர். இதனை சாத்தியமாக்கவே ஸ்ரீவிகநஸ மஹரிஷியானவர் எம்பெருமானை பிரார்த்தித்து அவரிடமிருந்தே ஒரு கோடி க்ரந்தங்களை உபதேசமாகப் பெற்று கோயில்களிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திவ்யத் திருமேனிகளை தோஷமின்றி ஆராதிக்கும் ஸ்ரீவைகாநஸ முறையினை நமக்கு வகுத்தளித்தார்.

அதன்படி ஆராதிக்கப்படும் கோயில்களில் அவரின் ஆஞ்யைப்படி வருடத்தில் நடைபெறும் தவிர்க்க முடியாத தோஷங்களை நிவர்த்திக்க திருப்பவித்ரோத்ஸவம் நிகழ்த்தப்படுகிறது.

கோயில் என்றாலே புனிதமானதாக இருக்க வேண்டும். ஆராதகரும் சரி, பணிபுரிவோரும்சரி, வருகை தரும் பக்தர்களும் சரி உடல் தூய்மையுடனும், உள்ளத் தூய்மையுடனுமே இங்கு இருக்க

வேண்டும். அப்போதுதான் மூர்த்தி சாநித்யம் பெற்றுத் திகழ்வார். இதனாலேயே அக்காலங்களில் கோயிலுக்குச் செல்வதென்றால் சில விதிமுறைகளை வைத்திருந்தனர். குறிப்பாக நதி அல்லது புஷ்கரணியில் நீராட வேண்டும். பின் தூய ஆடை உடுத்தி சுத்தமாகப் பராமரிக்கப்படும் புஷ்பம் மற்றும் நைவேத்ய பொருள்களைக் கொண்டு பகவானை அர்ச்சித்து பிரார்த்திக்க வேண்டும் என்பதாகும். மேலும் பூஜை நேரங்களில் அமைதியாக இருந்து தரிசனம் செய்ய வேண்டும். பூஜைகளும் எக்காரணம் கொண்டும் காலம் மாறாமல் நடத்தப்பட வேண்டும்.

ஆலயத்தில் கர்ப்பக்கிரஹத்தில் எப்போதும் விளக்கு எரிந்துகொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை விளக்கு அணைந்துவிட்டால் ஏற்படுகிற தோஷம், எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கப்படும் புஷ்பம் சற்று அழுகி இருந்தால், சமைக்கப்படும் பிரசாதத்தில் சுவை இல்லாமல் இருந்தால், நாம் உடுத்தி வரும் ஆடையில் தூய்மை இல்லாதிருந்தால், கோயிலுக்குள் பகவான் நாமத்தை விடுத்து வேறு ஏதும் பேசி இருந்தால், எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கப்படும் தீர்த்தத்தில் தோஷமிருந்தால், உத்ஸவகாலங்களில் எம்பெருமானுக்குச் செய்யப்படும் உபசாரங்களில் குறையிருந்தால், பூஜைகாலங்கள் மாறி நடந்திருந்தால், கோயிலுக்குள் சிறு விலங்குகள் உயிரிழந்திருந்தால், நம் எச்சில் மற்றும் வியர்வை சிந்தியிருந்தால் என பல்லாயிரக்கணக்கான தோஷங்கள் நிவர்த்தியாக வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானிடம் மன்றாடி பிரார்த்தித்து இந்தக் குற்றங்களை தாங்கள் பொறுப்பேற்று எங்களை மன்னிக்க வேண்டும்; எங்களை தங்களின் குழந்தைகளாக பாவித்து இக் குற்றங்களை மன்னிக்க வேண்டும்; மீண்டும் இக்குற்றங்கள் நிகழாவண்ணம் எங்களை நல்வழிப்படுத்தி தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று அவ்வெம்பெருமானிடமே பிரார்த்திக்கும் விதமாக இந்த திருப்பவித்ரோத்ஸவம் நடத்தப்படுகிறது.

இதில் முதல்நாள் எம்பெருமானிடம் பிரார்த்தித்து உத்ஸவம் நடைபெற அனுமதி பெற்று பின் யாகம் நடத்தப்படும் இடம் சுத்தமாக நீரினால் சுத்தம் செய்யப்படும் புண்யாசுவாசனமும், நெருப்பினால் சுத்தம் செய்யப்படும் வாஸ்து சாந்தியும் நடைபெற்று பூமாதேவியை பிரார்த்தித்து புனித மண் எடுக்கப்பட்டு அம்மண்ணைக் கொண்டு விதைகள் முளையிடப்பட்டு அங்குரார்பணம் மற்றும் வேத ஆரம்பம் (மறைஓதுதல் தொடக்கம்) ஆகியன நடைபெறுகின்றன.

மறுநாள் "பவித்ரப்ரதிஷ்டை' என்று சொல்லப்படும் எம்பெருமானுக்கு மந்திரப்பூர்வமாக அணிவிக்கப்படும் பட்டு நூலினால் ஆன மாலை பஞ்சவர்ணங்கள் கொண்டதாக பஞ்சபூதங்களின் அம்சமாக அதனை எம்பெருமானுக்கு சிரசுமுதல் பாதம்வரை அணிவித்து அவர் மனம் குளிரும் விதமாக உபசாரம் செய்யும் பவித்ரமாலையானது விஷ்ணுவை ஆவாஹனம் செய்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு முடிச்சிற்கும் ஒவ்வொரு ஆஹுதி என்பதாக யாகத்திலே ஆஹுதிகள் வழங்கப்படுவதோடல்லாமல், ஆலய தேவதைகள், திக் தேவதைகள், விமான தேவதைகள், பலி தேவதைகள் என எம்பெருமானின் அங்கங்களாக உள்ள அனைத்து தேவதைகளையும் திருப்திப்படுத்தும் விதமாக யாகத்தில் ஆஹுதிகள் அளிக்கப்படுகிறது.

தனது அங்கங்களாக இருக்கும் அனைத்து தேவதைகளும் திருப்தியடைந்தால் எம்பெருமானும் மிகவும் திருப்தியடைந்து நாம் செய்த குற்றங்களை எல்லாம் மன்னித்து மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டும் வரங்களை அருள்புரிகின்றான்.

எனவே இந்த உத்ஸவமானது 3, 5 அல்லது 7 நாள்கள் முழுவதும் யாக பூஜைகள் நிறைந்ததாகவே கொண்டாடப்படுகிறது. முடிவில் யாக பலன்கள் யாவையும் பவித்ரமாலைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அந்த திருப்பவித்ர மாலையானது எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த பவித்ரோத்ஸவத்தை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவதால் அந்த ஆண்டு நடந்த அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும் என மஹரிஷிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

ஆலயங்களுக்குச் செல்லும்போது நம்மால் இயன்ற அளவு தூய்மையாகச் செல்வதோடு, ஆலயத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் திருப்பவித்ரோத்ஸவத்தில் செய்யப்படும் யாகத்திற்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதும் நமக்கு பல நல்ல பலன்களைக் கொடுக்கும்.

இவ்வாலயத்தில் திருப்பவித்ரோத்ஸவம் ஆகஸ்ட் 25, 26, 27 தேதிகளில் நடைபெற உள்ளது.

தகவல்களுக்கு: 94863 04251.

- கே.ஆர். பிச்சுமணி ஐயங்கார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com