

"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரோடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே...!'
(பாடல் : 148)
பொருள்: வாய்க்கு ருசியாக மனைவி சமைத்து வைத்த உணவினை கணவர் உண்டு மகிழ்ந்தார். மனைவியோடு மகிழ்ந்திருந்தார். இடது பக்கமாக நெஞ்சு வலிக்கிறது என்றார். கீழே படுத்தார். பின் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.
யாக்கை நிலையாமையை இப்பாடலில் சொல்கிறார் திருமூலர். மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மரணம் வந்த பிறகு என்ன நடக்கும் ? அதையும் அவரே சொல்கிறார்.
"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரைஅம் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே...'
(பாடல் : 145)
பொருள்: ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, ஒப்பாரி வைத்து அழுது புலம்பி, இறந்த உடலுக்குரிய உண்மைப் பெயரை ஒதுக்கி விட்டுப் "பிணம்" என்று பெயர் சொல்லிச் சுடுகாட்டில் கொண்டு போய் வைத்து, நெருப்பு மூட்டி எரித்து விட்டு, குளத்திலோ, ஆற்றிலோ குளித்து முழுகி, அத்தோடு இறந்தவரைப் பற்றிய நினைவையும் அடியோடு மறந்து விடுகிறார்களே...!
என்ன மனிதர்கள்...! என்ன வாழ்க்கை ? இறந்த அடுத்த நொடி, நம் பெயரைக் கூடச் சொல்ல மாட்டார்கள். "பிணம்' தான் நம் பெயர். உடலை எரித்த பிறகு யாருக்கும் நம் நினைப்பு இருக்காது என்கிறார்.
அழைப்பிதழில் தன் பெயருக்கு முன்னாலும், பின்னாலும் தான் வாங்கிய பட்டங்களை, விருதுகளை, செய்த சாதனைகளைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என வற்புறுத்துபவர்களுக்கு, இந்த சிறப்புப் பெயர்கள், பட்டங்கள் எதுவும் நிலையில்லை; இறந்த அடுத்த நொடியே உங்கள் பெயர் "பிணம்' எனச் சொல்கிறார்.
"குடம் உடைந்தால் அவை ஓடென்று வைப்பர்
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே'
(பாடல்: 158)
மண் குடம் உடைந்து விட்டால், அந்த உடைந்த ஓடு எதற்கேனும் பயன்படும் என வீட்டில் வைத்துக் கொள்வார்கள். ஆனால் உயிர் உடைந்து, பிணமாகி விட்டால் ஒரு நொடிப்பொழுது கூட அப்பிணத்தை வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள்.
"வைச்சுஅகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சு அகலாதுஎன நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சகலா நின்று இளைக்கின்ற வாறே...'
(பாடல் : 156)
பொருள் : இறந்த உடலை சுடுகாட்டில் வைத்து தீ மூட்டிய பின்னர், அவரவர் பணியைப் பார்க்கப் போய் விடுகின்றனர். இறந்தவர்களின் நினைப்பே இல்லாத மனிதர்களுக்காக "இந்த உயிர் பிரியாது' என நினைத்து அவர்கள் ஆசைப்படும் பொருள்களைத் தேடித் தேடி சேர்த்து வைப்பதைத் தொடர்ந்து செய்கிறார்களே..! தங்களின்
பெருமையை இழந்து சிறுமை கொள்கிறார்களே..!
"யாருக்காக சம்பாதிக்கிறீர்கள்? யாருக்காகக் கஷ்டப்பட்டு பொருள் சேர்க்கிறீர்கள்? வாழ்க்கைத் துணைக்காக...பிள்ளைகளுக்காக... உடன் பிறந்தோருக்காக... நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்தாலும் நீங்கள் இறந்த பிறகு உங்களை மறந்து விடுவார்களே...' எனக் கேட்கிறார் திருமூலர்.
அப்படியானால் சொத்து சேர்க்கத் தேவையே இல்லையா என்ற கேள்வி வரலாம். தாராளமாக சேர்க்கலாம்.
"செய்க பொருளை செருநர் செருக்கு அறுக்கும் எஃகு அதனிற் கூரியது இல்' என்பது வள்ளுவன் வாக்கு.
உன் எதிரியின் செருக்கை அறுக்கும் ஒரே ஆயுதம் நீ சேர்த்து வைக்கும் செல்வம்; அதனால் நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற வள்ளுவனோடு யாரும் முரண்படப் போவதில்லை.
ஆனால், ஆயிரம் கோடி, நூறாயிரம் கோடி என நூறு தலைமுறைக்கே சொத்து சேர்த்து வைப்பதில் எந்த பயனும் இல்லையே என்கிற திருமூலரின் கூற்றையும் நாம் மறுக்க முடியாது.
ஒரு செல்வந்தர் எல்லோரிடமும் இப்படி பெருமையாக சொல்வாராம்... "என் பையனுக்காக அந்த ஊர்ல நூறு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கேன். என் பொண்ணுக்கு பக்கத்து ஊர்ல இருநூறு ஏக்கர் வாங்கிப் போட்டிருக்கேன்... என் பேரப் புள்ளைங்களுக்கு ஆளுக்கு நூறு ஏக்கர் வாங்கிப் போட்டிருக்கேன்' என்று!
நிலம் சிரித்துக் கொண்டே சொன்னதாம்... "உன் தாத்தாவை நான்தான் வாங்கிப் போட்டிருக்கேன். உன் அப்பாவை நான்தான் வாங்கிப் போட்டிருக்கேன். உன்னையும் நான் தான் வாங்கிப் போடப் போறேன்' என்று..!
உண்மை தானே ?
நாம் இறந்து போனால் உறவினர்கள் உடன் வர மாட்டார்கள். நாம் சேர்த்து வைத்த சொத்துகளும் உடன் வராது.
அப்படியானால் எது தான் நம்மோடு வரும் ?
"பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே...' (பாடல் : 144)
பொருள் : உடல் பழசாகி வயது முதிர்ந்து, தளர்ந்து, பிணமாகி விழுந்து விட்டால், அந்த உடல் உயிரோடு இருந்த போது, அதனால் பயன் பெற்ற மனைவி, மக்கள் அந்த உயிரோடு உடன் போக மாட்டார்கள். இறந்த உடலோடு தாங்களும் இறக்க மாட்டார்கள். ஆனால் அந்த உயிர் வாழும் போது செய்த நல்லறம், மேற்கொண்ட ஒழுக்கம், புண்ணியச் செயல்கள் இவைதான் அந்த உயிருக்குத் துணையாக நெருங்கி, நிழலாகச் செல்லும். மற்றவை எதுவும் செல்லாது.
நாம் செய்கிற பாவ, புண்ணியம் மட்டுமே நமக்குத் துணையாக வரும். நம் புண்ணியம் தான் நம்மைக் காத்து நிற்கும் என்கிறார் திருமூலர்.
கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இதையே சேக்கிழார் ஓர் உருவகமாகச் சொல்லியிருக்கிறார்.
கண்ணப்பர் வேட்டைக்குக் கிளம்பிய போது, ஒரு பெரும் படையே அவரோடு கிளம்பியதாம்.
"எண்ணற்ற வேடுவர் கூட்டம் மிகுதியாக
மீளிவேடர் நீடுகூட்டம் மிக்குமேல் எழுந்ததே...'
அவர் ஒரு பன்றியைத் துரத்திக் கொண்டு போன போது... உடன் வந்த அத்தனை வீரர்களும் பின் தங்கி விட, இரண்டு பேர் மட்டுமே அவரைப் பிரியாமல் தொடர்ந்து வந்தார்களாம். அந்த இரண்டு பேரின் பெயரையும் சொல்கிறார் சேக்கிழார். ஒருவர்
"நாணன்', இன்னொருவர் "காடன்'.
"நாடிய கழல் வயவர் களவர் நாணனும்
நெடு வரிவில் காடனும் எனும் இருவரும்...'
நாம் தான் அந்த கண்ணப்பர். சொர்க்கத்தை, இறைவனின் திருவடிப்பேற்றைத் தேடி நாம் ஓடும் போது, யாருமே உடன் வர மாட்டார்கள். "நாணன்' என்ற நல்வினையும், "காடன்' என்ற தீவினையும் மட்டுமே நம்மோடு உடன் வரும் என்பதே பெரியபுராணம் சொல்லும் செய்தி.
அதென்ன பெயர் நாணன், காடன்?
பொதுவாகவே மனிதர்கள் நிறைய தீவினைகள் செய்வார்கள். அது காடு போல் பரந்திருக்கும் ஆகையால் "காடன்' என்பது தீவினையைக் குறிக்கும்.
நல்வினையை கொஞ்சமாகவே செய்திருப்போம். அதனால், நான் இவ்வளவு கொஞ்சமாக இருக்கிறேனே என அது நாணி நிற்குமாம். எனவே நல்வினை "நாணன்' ஆயிற்று.
எவ்வளவு சொத்து சேர்த்து வைத்தாலும், இறந்த பிறகு யாரும் நம்மை நினைவு வைத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் ஆசை, ஆசையாகக் கட்டிய வீட்டிலேயே உங்களுக்கு இடம் தராமல் சுடுகாட்டுக்கு எடுத்துப் போய் எரித்து விடுவார்கள். அதனால், உங்களோடு வராத மற்றவர்களுக்காக ஓடி ஓடி சொத்து சேர்க்காமல், நிறைய புண்ணியம் செய்யுங்கள்.
நீங்கள் சேர்த்து வைக்கும் புண்ணியம் மட்டுமே உங்களைக் காக்கும் என்பதே திருமூலர் நமக்குச் சொல்லும் பாடம்.
(தொடரும்)
(கட்டுரையாசிரியர்: இலக்கியச் சொற்பொழிவாளர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.