சென்னையில் அலையில் மிதந்து வந்த அம்மன்!
இன்றைக்கு மகா வளர்ச்சி பெற்றுள்ள சென்னை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னால் சிறுசிறு தனிக்கிராமங்களாக இருந்தது . தற்போதைய தேனாம்பேட்டை அண்ணாசாலையின் ஒரு பகுதி அப்போது ஏரிக்கரையாக இருந்தது.
டச்சு-போர்ச்சுக்கீசிய-ஆங்கிலேயர்களுக்கு துணிகளை வெளுக்கும் சலவையாளர்கள் இந்த ஏரியில் துணிகளைக் கொண்டு வந்து துவைத்து சலவை செய்து கொடுப்பது வழக்கம்.
ஒருநேரம் பலத்த மழை பெய்து, ஏரி நிரம்பி வழிந்தது. கடமை உணர்வுமிக்க ஒரு சலவையாளர், ஏரிக்கரை மறைந்து துவைக்கும் கல் மூழ்கிக் கிடந்ததால் அவதிப்பட்டு திகைத்து நின்றான். அப்போது வெள்ளத்தில் ஒரு கல் போன்ற பொருள் அலையில் ஆடி ஆடி அசைந்து மிதந்து வருவதை கண்டதும் வியப்பில் நின்றான்.
கல்லை அருகில் இழுத்து நிறுத்தினான். அழுக்கு மூட்டையை அவிழ்த்து, ஏரி நீரில் நனைத்து அந்தக் கல் மீது துணியை அடித்து துவைக்க ஆரம்பித்தான். அவனுக்கு கைகள் வலிக்க, துணி துவைப்பதை நிறுத்தி, உற்றுப்பார்க்க, துணியில் பொட்டுப் பொட்டாய் ரத்தத் துளிகள் இருப்பதைக் கண்டான்.
சலவைத் தொழிலாளிக்கு வியர்த்துக் கொட்ட, அவன் மூக்கு வழியாக ரத்தம் வேறு வடிந்து கொண்டிருந்தது. கரையோரமாக நடந்து சென்று மயக்கத்தில் வீழ்ந்தான்.
அதே நேரத்தில் ஊர் நாட்டாமை வீட்டில் பணிப்பெண் ஒருத்தி கற்சிலை போல நின்றாள். அவளை விசாரிக்க அவள் சக்தி வந்து ஆடினாள். ""நான் ஆத்தாடா... என் பக்தன் ஏரிக்கரையில மயங்கிக் கிடக்கிறான். அவன் அருகில் அலையில் மிதந்து வந்த நான் இருக்கிறேன். அவன் கையால வேம்படியில் என்னை அமர்த்தி, கோயில் கட்டி கும்பிட, குலம் தழைக்கும். நோய், நொடி அண்டாமல் காப்பாத்துவேன்!'' என சக்தியின் அருள்வாக்காய் உதிர்த்தாள்.
தகவலறிந்த கிராம மக்கள் ஏரிக்கரைக்குத் திரண்டு வந்து, மயக்கத்திலிருந்த சலவைத் தொழிலாளி அருகே கிடந்த கல்லைப் பார்த்தார்கள். அக்கல் தானே புரண்டு நிமிர, பெய்து கொண்டிருந்த அடைமழை நின்றது. மக்கள் உண்மையறிந்து, கார்காத்தவளை - கல்லாய் - அலை மீதமர்ந்து வந்தவளை - வியப்பு மேலோங்கத் துதிக்கத் தொடங்கினர். ஒரு நன்நாளில் ஊரார் ஒன்றாகி, அன்னை காட்டிய இடத்தில், அலையில் மிதந்து வந்த பலகைக்கல் திருமேனியை நிறுவி, கோயில் கட்டி கும்பிடத் தொடங்கினர்.
அலை மேல் மிதந்து வந்ததால் "அலைமேல் அமர்ந்து வந்த அம்மன்' என்னும் வழக்கு குறுகி, "ஆலையம்மன்' என திரிந்து வழங்கலாயிற்று .
ஆலையம்மன் கோயில் சென்னை அண்ணாசாலை - தேனாம்பேட்டையில், தியாகராய நகர் செல்லும் திருப்பத்தில் அழகான வளைவுடன் அமைந்துள்ளது.
முன் மண்டபத்தில் பலிபீடம், துவார சக்தி தாண்டி கொடிமரம், பலிபீடம், சிம்மம், அண்ணன்மார்கள், பிரகாரத்தில் தனி சந்நிதிகளில் லட்சுமி கணபதி, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், நாகர் மண்டபம், பிணைந்து நிற்கும் அரசு - வேம்பு விருட்சங்கள், காசி விஸ்வநாதர், நவகிரக சந்நிதி, ராஜ கணபதி சந்நிதி, கோஷ்டங்களில் ரத்ன விநாயகர், கெளமாரி, வைஷ்ணவி, துர்க்கை ஆகியோர் அருட்காட்சி தருகிறார்கள். உற்சவர் சந்நிதிக்கு அருகில் மூலவர் சந்நிதியில் அலையில் மிதந்து வந்த ஆலையம்மன் எழுந்தருளி அருள்கிறாள்.
ஒரு கால பூஜை நடக்கும் இக்கோயிலில் காலை 6 மணி முதல் நண்பகல் 11.30 வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வரவு அதிகம் இருக்கும்.
ஆடி மாதத்தில் இந்த அம்மனை தரிசனம் செய்வது நற்பலனைத் தரும். ஆடி மாதத்தில் 4 வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைப்பது, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் அலங்காரம் மற்றும் சிம்ம வாகனத்தில் வீதியுலா, பூத வாகனத்தில் வீதியுலா என்றெல்லாம் சிறப்பாக நடைபெறும்.
இந்த அம்மனை தரிசித்தால், மழலை பாக்கியம் கிட்டும். பிரிந்தவர் கூடுவர். வேண்டியது கிடைக்கும்; விரும்பியது கைகூடும். தன்னை அபயம் என்று நாடி வந்தோரின் குறைகளைத் தீர்த்து வைப்பதில் இப்பூவுலகத்தில் அவளுக்கு நிகர் அவளே என பக்தர்கள் புகழ்கின்றனர். நீங்களும் சென்று தரிசித்து ஆனந்தம் பெற்று வாருங்கள்.
தொடர்புக்கு: 98406 82283 / 98841 72712.
-இரா. இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

