

தன்னால் உலகம் உணர வேண்டியவை இருப்பதாக எண்ணிய சக்தி தேவி, ரைவத மகாராஜனின் மகளாய் பூவுலகில் பிறந்தாள். ஜமதக்கனி முனிவரை மணம் முடித்து, பரசுராமன் உள்ளிட்ட சில குழந்தைகளுக்குத் தாயானாள். முனிவருக்கு பணிவிடை செய்யும் நாள்களில், தேவி பூஜைக்கு பச்சைக் களிமண்ணால் நீர்க் குடம் செய்து முகந்து வருவாள். ஒருநாள் நீர் முகந்திட கமண்டல நதிக்குச் சென்றபோது, வான வீதியில் கந்தர்வனின் நிழலை நீரில் பார்த்து நின்றபோது காலதாமதமாகி களிமண் குடம் கரைந்தது.
நடந்ததை ஞானத்தால் உணர்ந்த முனிவர் தனது மகன் பரசுராமனை அழைத்து தன்நிலை மறந்த அன்னையின் சிரசை துண்டிக்கச் சொன்னார். தந்தை சொல் தட்டாத தனயனும் அன்னையை சிரச் சேதம் செய்தான். பின்னர், அவன் தனது கையையும் வெட்டிக் கொண்டான். "வேண்டும் வரம் தருகிறேன் கேள்'' என்று மகனிடம் கேட்டார் ஜமதக்னி. பரசுராமனோ, தாயை உயிர்ப்பித்துத் தரக் கேட்டான்.
முனிவரும் கமண்டல நீரை மந்திரித்து கொடுத்தார். தாய் வெட்டப்பட்ட இடத்துக்குச் சென்று விதிவசத்தால் வெட்டுப்பட்டு கிடந்த வேறொரு பெண் உடலில் தவறுதலாக தேவியின் தலையை வைத்து நீரை பரசுராமன் தெளித்தான். தேவி, அந்தப் பெண்ணின் உடம்போடு பிழைத்து நின்று தனக்கு நிகழ்ந்த தவறைச் சொன்னாள். பரசுராமன் தன் தந்தையிடம் நடந்ததை விவரித்தான்.
"இது தெய்வச் செயலால் நடந்ததால் மாற்ற இயலாது' என்றார் முனிவர். அதுமுதல் வேறுபட்ட உடலுடன் ஜமதக்னி முனிவருக்கு அன்னை பணிவிடை செய்து வந்தாள். வேட்டைக்கு வந்த இடத்தில் கார்த்தவீரியார்ச்சுனன் ஜமதக்னிமியிருந்த காமதேனுவை தனக்கு வேண்டினான். முனிவர் மறுத்ததால், அவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து சென்று விட்டான்.
இறந்த கணவர் உடலுடன் தேவி உடன்கட்டைஏறினாள். அந்த நேரம் தெய்வ சங்கல்பத்தால் மழை பொழிந்தது. அன்னை கொப்புளங்களுடன் ஆடை இன்றி எழுந்து வேப்பிலை ஆடையைக் கட்டிக்கொண்டு, பரசுராமனை நினைத்தாள். பரசுராமர் நடந்தது அறிந்து கார்த்தவீரியனை கொன்று அவன் குலம் முழுவதும் அழிக்க சபதம் செய்தான் .
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் தேவர்களோடு தோன்றி, பரசுராமனின் சினம் நீக்கி சாந்தப்படுத்தினார்கள். ஜமதக்னி முனிவரை சிவன் உயிர்ப்பித்தெழச் செய்தார்.
சிவனிடம் அன்னை வேண்டியபடி சிரசு மட்டும் பிரதானமாக இருந்து, பூஜைக்கு உரிய வடிவாய் விளங்கவும், உடலின் மற்ற பிரிவுகள் முனிவருடன் சொர்க்கத்துக்குச் சென்றது, அதுமுதல் தேவி ரேணுகாதேவி என அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறாள். அவள் பூவுலகில் சிரசை பிரதானமாகக் கொண்டு படைவீட்டில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.
கருவறையில் வேறெங்கும் காணாத வகையில் சிறப்புஅம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு வடிவிலும் , பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபமாக எழுந்தருளியுள்ளனர். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும் சிலாசிரசும், அத்திமரத்தினாலான அம்மன் முழுதிருவுருவமுமாக கருவறையிலிருந்து அருளுகிறாள். இந்தக் கோயில் உட்பகுதி உள், வெளியென இருசுற்றும், நான்கு மாடவீதிகளுடன் அமைந்துள்ளது.
விநாயகர், ஆறுமுகர், தனித்தனி சந்நிதிகளில் இருந்து அருளுகின்றனர் . அம்மன் சந்நிதிக்கருகில் சோமநாதீஸ்வரர், உமாமகேஸ்வரி தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். திருக்குளம் உட்பிரகாரத்தில் வட கிழக்கில் அமைந்துள்ளது.
ரேணுகாம்பாள் இத்தலத்தில் படையுடன் வந்து அருள்பாலிப்பதாலும், இராசகம்பீர சம்புவராயர் என்னும் மன்னன் இங்கு வந்து போரின்போது தங்கி போரிட்டதாலும் படைவீடு எனப் பெயர் பெற்றது. படவேடு என மருவி அம்மன் கோயில் படைவீடு எனவும் ஏ.கே. படைவீடு என சுருக்கியும் குறிக்கப்படுகிறது.
சம்புவராய அரசர்கள் தமது ஆட்சிக்காலத்தில் படைவீட்டைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர். விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. விஜயநகர மன்னன் குமாரகம்பணனின் படைத்தலைவன் சோமைய தண்ட நாயக்கரால் 1352}இல் கட்டப்பட்டதாகும். சக்தி பீடங்கள் அறுபத்தி நான்கினுள் ஒன்றாக இந்தக் கோயில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட போளூர் அருகேயுள்ள அம்மன் கோயில் படைவீட்டில் உள்ள இந்தக் கோயில் ஜவ்வாதுமலைத்தொடரின் அடிவாரத்தில்அமைந்துள்ளது. வேலூர்} திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் எனும் ஊரின் சாலை சந்திப்பிலிருந்து 7 கி.மீ. தொலைவில் மேற்கில் உள்ளது.
இங்கு ஜமதக்னி யாகம் செய்த இடத்திலிருந்து ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனத்தன்று பூஜித்து வெட்டி எடுத்து வரப் பெறும் திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இங்கு ஆடிப்பெருவிழா ஜூலை 21 (வெள்ளி) தொடங்குகிறது. ஜூலை 28, ஆகஸ்ட் 4 , 11, 18, 25, செப். 1 ஆகிய ஏழு வெள்ளிகளில் திருவிழா நடைபெறுகிறது.
தொடர்புக்கு : 04181 248424
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.