

காத்மாண்டு, நவ. 27: இந்தியாவும் நேபாளமும் திருத்தப்பட்ட இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டன. இது 1987-ம் ஆண்டு போடப்பட்ட பழைய ஒப்பந்தத்துக்கு மாற்றாக அமையும். இந்த ஒப்பந்தத்தில் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நேபாள நிதி அமைச்சர் பர்ஷமன் புன்னும் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் சிறப்பம்சம்: இந்த ஒப்பந்தத்தின்படி, நேபாளத்தில் ஒரு முறை வரி செலுத்திவிட்டால், இந்தியாவில் மறுபடி வரி செலுத்துவதிலிருந்து வர்த்தகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இரு நாட்டு வங்கிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் சாத்தியமாகும். உள்நாட்டு வட்டி விகிதம் தவிர்த்த பிற வங்கித் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.
தகவல் தந்த நாட்டின் சம்மதத்துடன், அந்தத் தகவலை சட்ட அமலாக்கத்துறையுடன் பகிர்ந்துகொள்ளவும் ஒப்பந்தம் வழி செய்கிறது. இதனால், வரி ஏய்ப்பைத் தவிர்க்க முடியும். அதிக அளவில் இந்திய முதலீட்டாளர்களை நேபாளம் கவர முடியும்.
நேபாளத்தைப் பொருத்தவரை, பெரிய முதலீட்டு நிதி ஆதாரம் இந்தியாதான். எனினும் மொத்த இந்திய வர்த்தகத்தில் நேபாளத்துடனான வர்த்தகம் அரை சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் முகர்ஜி: ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த ஒப்பந்தம் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் முன்னோக்கிக் கொண்டு செல்லவும் இனி எங்களால் இயலும். இந்த ஒப்பந்தம் இப்போதைய சர்வதேச சூழலைப் பிரதிபலிக்கிறது. எனவே, பழைய ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டியதாயிற்று.
இதுவரை நேபாளத்தையும் சேர்த்து 82 நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இவற்றில் 75 நாடுகளுடனான ஒப்பந்தங்களில் வங்கித் தகவல் பரிமாற்றத்துக்கான பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. எனவே, அந்த நாடுகளுடன் மறு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவற்றில், 22 நாடுகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டது.
அண்மையில், திருத்தப்பட்ட வரித் தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டன. இந்த உடன்பாட்டின்படி, வங்கி மற்றும் வரி தொடர்பான தகவல்களை இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்ள முடியும். கறுப்புப்பணம் பற்றி அதிகம் பேசப்பட்டுவரும் நிலையில் வரிஏய்ப்பைத் தவிர்க்க இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் பயன்படும்.
217 பொருள்கள் மீதான கூடுதல் சுங்கத் தீர்வையை இந்தியா ரத்து செய்ய வேண்டுமென நேபாளம் கோரியுள்ளது. இவற்றில் 117 பொருள்கள் மீதான தீர்வையை ரத்து செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. மற்ற 100 பொருள்கள் பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும்.
உற்பத்தி, சேவை, சுற்றுலா, மின் துறைகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் நேபாளத்தில் செயல்பட்டு வருகின்றன என்றார் பிரணாப் முகர்ஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.