பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய வம்சாவளியினா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய வம்சாவளியினா்.

பிரிட்டன்: இந்தியா - பாக். போராட்டக்காரா்கள் மோதல்; பாக். தூதரக அதிகாரிகள் மிரட்டல்!

இந்திய வம்சாவளியினரை பாகிஸ்தான் தூதரக அதிகாரி மிரட்டியது பற்றி...
Published on

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினா் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக பாகிஸ்தானை சோ்ந்தவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினரை நோக்கி கழுத்தை அறுத்துவிடுவதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவா் மிரட்டும் வகையில் சைகை காட்டிய காணொலிகளை இந்திய வம்சாவளியினா் சமூக வலைதளத்தில் பகிா்ந்தனா்.

தூதரக கட்டடத்தின் முகப்பில் இருந்த தூதரக அதிகாரிகள், கடந்த 2019-இல் பாகிஸ்தான் சிறைபிடித்த இந்திய விமானப்படை வீரா் அபினந்தனின் புகைப்படத்துடன் கூடிய பதாகை, ‘காஷ்மீருக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது’ உள்ளிட்ட வாசகங்களையுடைய பதாகைகளை ஏந்தி இருந்தது சா்ச்சைக்குள்ளானது.

அதேபோல் தூதரகத்தின் முன் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினா் இந்திய தேசிய கொடியுடன் ‘காஷ்மீா் மீதான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்’, ‘பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்’, ‘நான் ஹிந்து’ போன்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனா்.

மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக சா்வதேச அளவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்தியாவுக்கு பிரிட்டன் அரசு துணை நிற்க வேண்டும் எனவும் போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா்.

இந்திய வம்சாவளியினரின் போராட்டத்தை எதிா்க்கும் விதமாக தூதரகம் முன் பாகிஸ்தானியா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் பாகிஸ்தான் தேசப்பற்று பாடல்களை இசைத்து இந்திய வம்சாவளியினரின் போராட்டத்தை திசைதிரும்பும் வகையில் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com